ஊழியில் மிஞ்சிய மீஞ்சூர்!

வடகாஞ்சி வந்திருக்கிறீர்களா? ஒரு சமயம் மகாப் பிரளயம் உண்டாகி உலகம் அனைத்தும் நீரில் மூழ்கிட ஒரு பகுதி மட்டும் சற்று உயர்ந்து..
ஊழியில் மிஞ்சிய மீஞ்சூர்!

வடகாஞ்சி வந்திருக்கிறீர்களா? ஒரு சமயம் மகாப் பிரளயம் உண்டாகி உலகம் அனைத்தும் நீரில் மூழ்கிட ஒரு பகுதி மட்டும் சற்று உயர்ந்து இறைவன் கால் கொண்டு நிற்கும் தீவாக அமைந்திருந்தது. உலகம் முழுவதும் நீரினுள்  சென்று மூழ்கிவிட, மூழ்காமல் மிஞ்சியிருந்த ஒரே இடம்தான் "மீஞ்சூர்' என பெயர் பெற்ற வடகாஞ்சியாகும். 

அருகிலேயே தாழ்வான பகுதியில் சேர்ந்திருந்த  நீர் "பொன்னை உருக்கிச் சேர்த்து வைத்திருப்பது போல் ஒளிர்ந்ததால்' அப்பகுதி "பொன்னேரி' என்று வழங்கப்பட்டது. நீர்வளப்பகுதியில் தர்பைப்புல் இயற்கையாகவே வளரும். அதன்படி ஏரியுடன் கூடிய மேட்டுப்பகுதியில் தர்பைப்புல் காடாக வளர்ந்து செழித்திருந்தது. அதனால் இப்பகுதி "ஆரண்யம்' என வழங்கப்பட்டது. தர்பைப் புல்லான "மெüஞ்சி' நிறைந்த வனமாதலால் "மெளஞ்சாரண்யம்' என  அழைக்கப்பட்டு, பின்னர் "மெளஞ்சாரண்யம்'தான் "மீஞ்சூர்'  என மருவியது என்ற வரலாறும் உள்ளது.

"ஈசன் இவ்வூரில் நின்று உலகைப் படைக்கத் தொடங்கினார்' என்ற புராணம் சொல்லப்படுகிறது. இறைவன் நின்ற இடத்தில்  பிற்காலத்தில் வழிபாடு தொடர்ந்தது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலர் காஞ்சி மாநகர் சென்று ஸ்ரீகாமாட்சி அம்மையையும்,  ஏகாம்பரநாதரையும் தரிசித்து வந்தனர். பிறகு, காமாட்சியம்மையையும், ஏகாம்பரநாதரையும் எப்போதும் வணங்குவதற்காக  இவ்வூரில்  எழுந்தருள்வித்து, பூஜை முதலியவை செய்து வந்தனர்.  

இத்திருக்கோயில் தற்போது, ஐந்து நிலை ராஜ கோபுரம், இரண்டு பிராகாரங்கள் உடையதாக அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் வலம் வரும்போது பிரதான முருகர் சந்நிதியும், காசி விசுவநாதர், விநாயகர், சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகங்களும், கோபுரத்தருகில் சூரிய, சந்திரர்கள் ஆகியோர் எழுந்தருளி அருள்கின்றனர். 

உள்பிராகார கோஷ்டத்தில்  நர்த்தன கணபதியும், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் எழுந்தருளி அருள் புரிந்து வருகின்றனர். ஆறு விமானங்கள் கொண்ட இத்திருக்கோயிலின் தலபுராணம் இத்திருக்கோயிலுக்கும் பக்தர்களுக்குமான தொன்மைப் பற்றைச் சிறப்புடன் விளக்குகிறது. ஆண்டுதோறும் சித்ரா பெüர்ணமி, கேட்ட வரம் தரும் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகம், ஆனியில் நடராஜர் திருமஞ்சனம், ஆடியில் அம்பாள் வழிபாடு, ஆவணியில் சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கேதார கெüரி விரதம், சஷ்டி லட்சார்ச்சனை, கார்த்திகை தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தைப்பூசம் ஆகிய உற்சவங்கள் வருடம் முழுவதும் நடந்தாலும் பங்குனியில் உத்திர நட்சத்திரத்தை இறுதி நாளாகக் கொண்டு நடைபெறும் பிரம்மோற்சவம் மிகச்சிறப்புமிக்கதாக விளங்கி வருகிறது. 

இத்திருக்கோயிலில் பங்குனி உத்திர உற்சவம், விடையாற்றியுடன் சேர்த்து 12 நாள்கள் நடைபெறுகிறது. இவற்றில் 3, 5, 6,10}ஆம் நாள்களில் இரவில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும். பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் முக்கிய திருக்கோயில்களில் ஒன்று.  இவ்வாண்டு மார்ச் 17}ஆம் தேதி உற்சவம் துவங்கியது. தொடர்ந்து 22}ஆம் தேதி அதிகார நந்தி விழாவும், 24}இல் திருத்தேரும், 26}இல் மாவடி சேவையும், 27}இல் பங்குனி உத்திர திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இத்திருக்கோயிலுக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து மீஞ்சூர் செல்லும் பேருந்திலும் செல்லலாம். மின்தொடர் வண்டியில் வந்தால் மீஞ்சூர் ரயில்நிலையத்தில் இறங்கி, சிறிது தூரம் நடந்தால் இத்திருக்கோயிலை அடையலாம். 

மேலும் விவரங்களுக்கு: 9444508445. இரா.இரகுநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com