தேவியின் திருத்தலங்கள் 16 - நகர் அசலாம்பிகை  

ஒரு சமயம் அம்பிகை ஏகாந்தமாய் தவமிருக்க விரும்பினாள். யாருடைய இடைஞ்சலும் இல்லாமல், எந்நேரமும் சிவ நாமத்தில் லயித்து, அதில் ஆழ்ந்து போக விரும்பினாள். இறைவன் அவளை பூமிக்குச் சென்று தேடச் சொன்னார்.
தேவியின் திருத்தலங்கள் 16 - நகர் அசலாம்பிகை  

"சவித்ரீபிர் - வாசாம் சஸிமணி சிலா - பங்க ருசிபிர் 

வசின்யாத்யாபிஸ் - த்வாம் சஹ ஜனனி சஞ்சிந்தயதி ய:'

-செளந்தர்ய லஹரி  

ஒரு சமயம் அம்பிகை ஏகாந்தமாய் தவமிருக்க விரும்பினாள். யாருடைய இடைஞ்சலும் இல்லாமல், எந்நேரமும் சிவ நாமத்தில் லயித்து, அதில் ஆழ்ந்து போக விரும்பினாள். இறைவன் அவளை பூமிக்குச் சென்று தேடச் சொன்னார்.

"தேவி! பூமியில் எந்த இடத்தில் உன் மனம் லயிக்கிறதோ அந்த இடத்தில் நீ தவம் செய். அங்கு வந்து நான் உன்னை ஆட்கொள்கிறேன்'' என்று ஈசன் கூற, அம்பிகை அந்த இடத்தைத் தேடி வருகிறாள்.

அப்பொழுது நகர் என்ற இந்தப் பகுதியில் யாரும் தவம் இருந்திராத ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தாள் தேவி. புவி ஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட "பீதாம்பர யோகம்' என்ற நிலையில், பூமிக்கு மேல் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் மிதந்தவாறு, "அசலன யோகம்' என்ற அசைவற்ற நிலையில் தேவி, சர்வேஸ்வரனை நோக்கி தவம் இருக்க ஆரம்பித்தாள்.

யோக மாயையான சக்தி அந்த இடத்தில் தவம் செய்வதை அறிந்த அத்தனைக் கோள்களும் அத்தலத்தை வலமிருந்து இடமாகச் சுற்றி வர ஆரம்பித்தன. அசலான யோகத்தில் இருந்த தேவி ஒரு நவமி திதி அன்று தவத்திலிருந்து மீண்டாள். கோள்களும், நட்சத்திரங்களும் வலம் இடமாக இறைவனைச் சுற்றி வந்து வணங்குவதைக் கண்டு அதிசயித்த தேவி "இந்த இடத்தின் சிறப்பு என்ன? தன் மனம் ஏன் இங்கு நிலை கொண்டது?' என்று யோசித்தாள். அங்கு சுயம்பு வடிவில் எழுந்தருளி இருக்கும் ஈசனின் வடிவே காரணம் என்று தன் யோக சக்தியின் மூலம் அறிந்தாள்.

அம்பிகை மகிழ்ந்து, ஈசனை கோடானுகோடி ஸ்வர்ண வில்வங்களால் பூஜிக்கத் தொடங்கினாள். அதில் மகிழ்ந்த அய்யன் அம்பிகைக்கு காட்சி அளித்து அன்னையை ஆட்கொண்டு அருளினார்.
அம்பிகை மானுட வடிவில் சலனமற்று அசலன யோகத்தில் இருந்ததால் அவளுக்கு "அசலாம்பிகை' என்ற பெயரும் வழங்கியது. "அதுல சுந்தரி' என்ற பெயரும் உண்டு அவளுக்கு. 

கிரகங்கள் ஒன்றாக நகர்ந்ததால் இத்தலத்திற்கு "நகர்' என்ற பெயர் வழங்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் "நகர்' என்றே இத்தலம் குறிக்கப்பட்டிருக்கிறது.

மண்டபத்தில் வலது புறம் அம்பிகை தென்திசை நோக்கி காட்சி அளிக்கிறாள். இங்கு அவளுக்கு நான்கு கரங்கள். மேல் கரங்களில் பாசம், அங்குசம் தாங்கியும், கீழ்க்கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும், ஜடாமகுடம் அணிந்தும் அழகு பொங்க, கருணை பொழியும் கண்களுடன் காட்சி அளிக்கிறாள்.

கருவறையில் இறைவன் "அப்ரதீஸ்வரர்',  "நகரீஸ்வரர்' என்ற பெயர்களுடன், லிங்கத் திருமேனியாகக் காட்சி அளிக்கிறார். இறைவனுக்கு எதிரே இரண்டு நந்திகள் உள்ளன. இதனால் பக்தர்களுக்கு இரட்டிப்புப் பலன் கிடைக்கிறது என்கிறார்கள்.

இத்தலத்து இறைவியை கோள்கள் வழிபட்டு வலம் வந்ததால், இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு  நட்சத்திர தோஷம், நவகிரக தோஷம் போன்றவை இல்லை. திருமணம் நடைபெற, குழந்தைப்பேறு அடையவும், இறைவியை இடம் வலமாக வந்து வணங்கினால், உரிய பலன் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. 

தல விருட்சமான மகா வில்வ மரத்தின் அடியில் ஒரு சகஸ்ரலிங்கம் உள்ளது. இதற்கு சந்தனம் பூசி, மஞ்சள் குங்குமம் இட்டு அய்யனையும், அன்னையையும் வழிபட்டால் சகல தோஷங்களும் விலகுகிறது.

இங்கு காலசந்தியின் போது முதலில் சூரியனுக்கு தீபாராதனை காட்டிய பிறகே, இறைவனுக்கும், இறைவிக்கும் தீபாராதனை காட்டப்படுகிறது. இந்த ஆலயத்தில் மட்டுமே இந்த வழக்கம் இருக்கிறது.

இங்குள்ள தலவிருட்சத்தில் மற்ற வில்வ மரங்களில் உள்ளதுபோல் முட்கள் காணப்படவில்லை. காசியில் மட்டுமே இது போன்ற மரங்கள் காணப்படுகின்றன. சண்டீஸ்வரர் சந்நிதி, நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் அம்பிகையுடன் அருள் பாலிக்கின்றனர். 

ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுற்றிலும் உயரமான மதிற்சுவர். உள்ளே நுழைந்ததும் இடது புறம் திருக்குளம், நுழைவு வாயிலைத் தாண்டியதும் திருச்சுற்று. வடக்கில் ஆதி மூலவரான நகரீஸ்வரரின் தனிக்கோயில் உள்ளது.

 "அன்னையே! நீயே உலக மக்களின் உள்ளத்தில் இருந்து ஆட்சி செய்கிறாய். அவர்களை வழி நடத்துகிறாய்!' என்கிறார் ஆதிசங்கரர். சகல லோகங்களும், அதில் வாழும் உயிர்களும் ஆனந்தமாக வாழவே அன்னை பல்வேறு இடங்களில் தவம் இயற்றி, ஐயனுடன் சேர்ந்து அருள் பாலிக்கிறாள்.

 அசலாம்பிகையை பக்தர்கள் தயாபரி என்று போற்றுகிறார்கள். அவளுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்து வழிபடுகிறார்கள். அமாவாசை, பெüர்ணமி தினங்களில் அம்பிகைக்கு சிறப்பு வழிபாடும், திருவிளக்கு பூஜையும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

இரண்டாம் ராஜராஜன், குலோத்துங்கன் மற்றும் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்து கல்வெட்டுகள், அவர்கள் திருப்பணி செய்த விவரங்களைக் கூறுகின்றன. ஆலயம் முழுவதும் கருங்கற்களால் கட்டப்
பட்டிருக்கிறது. உலக உயிர்களை அனைத்தையும் தன் மனம் எனும் கருவறையில் தாங்கி காத்து வருபவள் அம்பிகை.  மனிதனின் பாவங்களை அழிக்கக் கூடியவள். எனவேதான் அவளை "தாபத்ரயாக்னி சந்தப்த ஸமாஹ்லாதன சந்த்ரிகா' என்று லலிதா சகஸ்ரநாமம் போற்றிப் புகழ்கிறது.

சந்தேகம் இல்லாமல் அவளைக் கண்மூடித்தனமாக நம்புங்கள் என்கிறது வேதம். பேரச்சம் தரும் மன இருள் நீக்கி, பரம கருணை மழை பொழிய அவளால் மட்டுமே முடியும். அசலன யோகத்தில் தவம் செய்த அன்னையை வணங்கினால், ஸ்திரமான புத்தி, அளவில்லாத நற்பலன்கள் தந்து, நமக்கு நிம்மதியான வாழ்வும் அருள்வாள்.

இருப்பிடம்: திருச்சியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், லால்குடி சாலையில் மாந்துறையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் நகர் என்ற திருத்தலம் அமைந்திருக்கிறது. அருகில் லால்குடி சப்த ரிஷீஸ்வரர் ஆலயம், திருமங்கலம், பூவாளூர், திருமாந்துறை, ஆங்கரை ஆகிய ஆலயங்கள் அமைந்துள்ளன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com