காலூன்றிய ஆண்-பெண் சமத்துவம் 

பாலியல் சமத்துவம் பாரில் காலூன்ற அடித்தளம் அமைத்தது அருமறை குர் ஆனும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளும்.
காலூன்றிய ஆண்-பெண் சமத்துவம் 

பாலியல் சமத்துவம் பாரில் காலூன்ற அடித்தளம் அமைத்தது அருமறை குர் ஆனும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளும்.
நற் குர்ஆனின் 4-1 ஆவது வசனம் "மனிதர்களே உங்கள் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். அவன் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதற்குரிய இணையையும் படைத்தான். அவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான்' என்று ஆண், பெண் பாலியல் சமத்துவத்தைச் சாற்றுகிறது.  ஒரு பெண்ணின் சம்மதம் இன்றி, அப்பெண்ணைத் திருமணம் புரிவதைத் தடுக்கிறது 4-19 ஆவது வசனம். பெண்ணின் உரிமை திருமணத்திலும் உறுதி செய்யப் படுகிறது. பெண்ணின் சம்மதம் திருமண ஆவணத்திலும் பதியப்படுகிறது. இதுவும் பாலியல் சமத்துவத்தின் சான்று. 
"வினையே ஆடவர்க்கு உயிரே - வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே'
-இது குறுந்தொகையில் உள்ள புலவர் பெருங்கடுங்கோவின் பாடல். 
ஓர் ஆண் அகத்தில் அடங்கி, முகத்தை மூடி, வாடிக் கிடக்காமல், முன்னோர் தேடிவைத்த செல்வத்தைச் சீரழிக்காமல், தொழிலில் ஈடுபட்டு வழியோடு பொருளீட்டி வாழ வேண்டும் என்பதையே "வினையே ஆடவர்க்கு உயிர்'. ஏகாரமும் இல்லத்தில் இருந்து நல்லறம் பேணி, கற்பைத் தற்காத்து, பொற்புடைய கணவனைப் பேணி பேரறம் புரிவதே மகளிரின் கடமை என்றும், மகளிருக்கு அவர்களின் கணவனாகிய ஆண் மகனே உயிர் என்றும் உரைக்கிறது "மனையுறை மகளிருக்கு ஆடவர் உயிரே' என்ற ஏகாரமும். இதனை இறைமறை குர் ஆனின் 4-32 ஆவது வசனம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அவரவர்கள் ஈட்டிய பங்கு அவரவர்களுக்கு உண்டு என்று உரைக்கிறது. 
பொருளீட்டி குடும்பம் நடத்தும் பொறுப்பு கணவனுக்கு உண்டு. வீட்டு நிர்வாகத்தைக் கவனித்து, கணவர், குழந்தைகள் நலனைப் பேணி, குடும்பப் பெருமையைக் காப்பது மனைவியின் பொறுப்பு.  நானின்றி நீ இல்லை; நீ இன்றி நானில்லை என்பதே நல்ல குடும்பம்.
ஒரு பெண், ஆணிடம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான இரண்டு அன்பும், பாதுகாப்பும். மனைவியரிடத்தில் அல்லாஹ்விற்கு அஞ்சி கடமையை உணர்ந்து நடக்கும் விசுவாசிகளுக்கு நற்செய்தி கூறுமாறு கோமான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கிறது குர்ஆனின் 2-223 ஆவது வசனம்.
யூதர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்களை அப்புறப்படுத்தி, வீட்டைவிட்டு வெளியில் தங்க வைத்து விடுவார்கள். இதனைப் பற்றி இனிய நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது, விளக்கம் அளித்து அருளப்பட்ட அருமறை குர்ஆனின் 2-222 ஆவது வசனம் "மாதவிடாய் காலத்தில் மனைவியரை வீட்டை விட்டு விரட்டாதீர்கள்....' என்றும் ஆண்-பெண் இருவருக்குமான அறிவுரை கூறி, சமத்துவ உரிமையையும் சாற்றுகிறது என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் விளக்கத்தை அறிவிக்கிறார் அனஸ் (ரலி) நூல் - முஸ்லிம், திர்மிதீ, நஸ ஈ.
இச்சட்டங்களே இவ்வுலகில் பாலியல் சமத்துவம் காலூன்ற ஊன்றுகோலாய் உதவின..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com