தேவகுருநாதனுக்குத் திருக்குடமுழுக்கு

பாதுகாப்பான  கட்டடம் இல்லாமல் சிவ லிங்கங்கள்  இருந்த இடங்களில், கோயில்களை அமைக்க கோச்செங்கட் சோழன்  ஏற்பாடு செய்தார்.
தேவகுருநாதனுக்குத் திருக்குடமுழுக்கு

பாதுகாப்பான  கட்டடம் இல்லாமல் சிவ லிங்கங்கள்  இருந்த இடங்களில், கோயில்களை அமைக்க கோச்செங்கட் சோழன்  ஏற்பாடு செய்தார். மாடக்கோயில் எனப்படும் கோயில்கள் 70-ஐ அமைத்தார்.  இதனை "எண்டோளீசர்க்கு எழில் மாடம் எழுபது  சமைத்தோன்' என வரலாறு புகழ்கிறது. இந்த எழுபதில் ஒன்று தேவூர்  தேவபுரீஸ்வரர் கோயிலாகும். 

மூலவர் லிங்க வடிவில். சதுர பீடத்தில் காட்சி தந்து தேவகுருநாதர் என்ற பெயரோடு  அருளுகிறார். தனி சந்நிதியில் தேன்மொழியம்மை என்னும் மதுரபாஷிணி அம்பாள் என்ற பெயரோடு,  நின்ற திருக்கோலத்தில் அருளுகிறாள். 

கவுதமரும் அகலிகையும் அன்னதானம் செய்ய நினைத்தபோது தானியமும் தண்ணீரும் தந்து அருளிய அன்னபூரணி என அழைக்கப்படுகிறாள். குரல் வளத்துக்கு காரணமானவள் ஆதலால் பல புகழ்பெற்ற பாடகர்கள் வந்து புகழ்ந்து பாடி  விட்டுச்  செல்லும் ஊர் தேவூர். "வளர் தேவ தேவனே'  என்று அருட்பாவில் மட்டுமில்லாமல் திருஞான சம்பந்தரின் தேவாரம், திருநாவுக்கரசு சுவாமிகளின் திருத்தாண்டகம். அருணகிரி நாதர் திருப்புகழ், சேக்கிழார், வள்ளலார் ஆகியோர்  படைப்புகளில் தேவூர் எனவே இவ்வூரைக்  குறிப்பிடுகின்றனர். பாண்டியர்கள்  காலத்துக் கல்வெட்டில் அருண்மொழித் தேவ  வளநாட்டுத் தேவூர்  நாட்டுத் தேவூர் என நாட்டின் தலைநகராய்  குறிக்கப்பெற்றிருக்கிறது தேவர்கள் வழிபட்டு வணங்க வரும்போது வந்து நீராடிய தீர்த்தம் தேவ தீர்த்தம் என்ற பெயரோடு அமைந்துள்ளது.

இத்தலத்தின் தலவிருட்சம் வாழை. இதற்கு நீர் ஊற்றுவதில்லை. கருங்கல்லால் ஆன கட்டுமலையில் வளர்கிறது. 

வழிபட்டவர்கள்:  விருத்திரன் என்னும் அசுரன் சொர்க்கத்தினையடைய ஆசைப்பட்டு தேவர்களுக்கு அல்லல் தந்தான். அனைத்து தேவர்களும் இந்திரனை வேண்ட  விருத்தாசுரனுடன் போரிட்டு அவனைக் கொன்றான்.   விருத்தாசுரனைக் கொன்ற  பாவமும் பிரும்மஹத்தி தோஷமும் பீடித்து இந்திர பதவியை இழந்தான்,   பாவம் நீங்க  இத்தலத்துக்கு வந்து  இறைவனை வணங்கி சாபம் நீங்கியது. இழந்த இந்திர பதவியையும்  மீண்டும் பெற்றான்.

ராவணன் குபேரனுடன் போரிட்டு அவனுடைய  பஞ்ச நிதியங்களில் முக்கியமான  சங்கநிதி, பதுமநிதி என்ற  இரண்டு கலசநிதிகளைக்   கவர்ந்து போனான். தேவர்கள் கூறியபடி  முக்கிய நிதியங்களை  இழந்த குபேரன் தேவூர் தலத்து  இறைவன்  தேவகுருநாதனை பூஜை செய்து அதனைத் திரும்பப் பெற்றான் .அதன்மூலம் மீண்டும் இழந்த  குபேர பட்டத்தையும்  பெற்றான். 

மகாபாரதத்தில்  வனவாசம் போன   பஞ்ச பாண்டவர்கள் விராடன் அரண்மனையில் தங்கி இருந்தனர். அப்போது விராடன் பஞ்ச பாண்டவர்களை தேவூருக்கும்  அழைத்து வந்து மறைந்து வாழவும் இவ்விறைவனை வழிபடவும்  ஏற்பாடு செய்திருந்தான்.

ராமாயணத்தில் அசோக வனத்தில் சிறையிலிருந்த சீதையைக் காணச்சென்ற அனுமன் இத்தலத்தில் இறங்கி வணங்கி இத்தலத்து இறைவன் அருள் பெற்று சென்றார். 

மகத நாட்டு மன்னன் குலவர்த்தனன் அஸ்வமேதயாகம் செய்து தன் ஜெயக்கொடியை நிலை நாட்ட  தேவூர் வாழும் தேவ குருநாதனின் அருளை வேண்டி  வெற்றியை பெற்றான்.

இவ்விறைவனை வழிபட்டிருப்பதால்,  பாஸ்கர úக்ஷத்திரம் என அழைக்கப்படுகிறது.

பலன்கள்: இங்கு வழிபாடு செய்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்; குரு தோஷங்கள் விலகும்.  உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை அருள்பவர் தேவ குரு பகவான். அதோடு, கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்களும் தீரும்.

குருபெயர்ச்சியன்று இங்குள்ள குருவை வழிபடுவதால் குருபார்வை குறையுள்ள இடங்களில் உள்ளவர்களுக்கு நிவர்த்திப் பலனும் மற்றவர்களுக்கு பூரண அனுக்கிரகமும் கிடைக்கும்.

கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. ஆகஸ்ட் 17-இல் யாக சாலை பூஜைகள் தொடங்கின.  21-இல் (ஞாயிற்றுக்கிழமை)  காலை 9.15 மணிக்குமேல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு திருக்கல்யாணமும் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெற உள்ளது

தேவகுரு பார்க்க தேடிவரும் நன்மை என்பதால்  தேவ குருவினை திருவாரூர் மாவட்டம்  கீழ்வேளூர் - திருத்துறைப்பூண்டி சாலை பேருந்து வழித்தடத்தில் உள்ள தேவபுரீஸ்வரர் திருக்கோயிலில்திருக்குடமுழுக்கிலும் பங்கு கொண்டு  வணங்கி பலன் பெறலாம்!

தொடர்புக்கு: 9486278810, 9751222913.
-இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com