பரிபூர்ண வாழ்வருளும் பரமகல்யாணி!

புராண வரலாற்றுப் பின்னனியுடன், மாமன்னர்கள் பேராதரவைப் பெற்றதும், இன்னும் பல சிறப்புகளுடன் திகழ்வதுமாகிய..
பரிபூர்ண வாழ்வருளும் பரமகல்யாணி!

புராண வரலாற்றுப் பின்னனியுடன், மாமன்னர்கள் பேராதரவைப் பெற்றதும், இன்னும் பல சிறப்புகளுடன் திகழ்வதுமாகிய சிவசைலம் அருள்மிகு பரமகல்யாணி அம்பாள் உடனாய அருள்மிகு சிவசைல நாதஸ்வாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜூன் 23-இல் (வியாழக்கிழமை) நடைபெறுகின்றது.

தல இருப்பிடம்:  தென்காசி மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சியிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ளது "சிவசைலம்'.  சிவன் உறையும் கைலாசத்தை சிவசைலம் என்று அழைப்பதுண்டு.  கைலாசத்துக்கு இணையான பல சைலங்கள் (மலைகள்) தென்னகத்தில் உள்ளன.  அவற்றுள் ஒன்றாக சிறப்பித்துப் போற்றப்படும் "சிவசைலம்' என்னும் அரிய தலம். 

கடனா நதி வந்த வரலாறு: தனது சீடர்களில் ஒருவரான கோரட்சகனின் கங்கையில் குளிக்க வேண்டும் என்ற தாபத்தை நீக்குவதற்காக அத்திரி மகரிஷி தன் தவ வலிமையால் யோகத் தண்டத்தை நிலத்தில் ஊன்றி கங்கையை சிவசைலத்துக்கு  வரவழைத்தாராம். கங்கையிலிருந்து கடனாகப் பெறப்பட்ட நீர் என்பதால் "கடனா நதி' என்ற பெயரில் அந்நதி மேற்கு தொடர்ச்சி மலையில் 1500 அடி உயரத்தில் உற்பத்தியாகி பாய்ந்து வந்து சிவசைலம் கோயிலுக்கு வடபுறத்தில் ஓடி திருப்புடைமருதூருக்கு அருகில் தாமிரவருணி ஆற்றுடன் கலக்கிறது. 

மூலவர் பெருமை: "சிவ சைலநாதர்' என்ற திருநாமத்துடன் சுயம்பு மூர்த்தியாய் மேற்கு திசையை பார்த்த வண்ணம் சந்நிதி கொண்டுள்ளார். சிவலிங்கத்தின் பின்புறம் தலைமுடி (ஜடாமுடி) இருப்பதைப் போன்ற தோற்றம் தென்படுகின்றது. ஒரு சமயம் இத்தேச மன்னனுக்கு அர்ச்சகர் வழங்கிய மாலையில் தலைமுடி இருக்க, மன்னரின் கோபத்துக்கு  ஆளானார் அர்ச்சகர். அர்ச்சகரைக் காப்பாற்றுவதற்காக ஜடாமுடியுடன் மன்னனுக்கு காட்சியளித்தாராம் ஈஸ்வரன். அதனால் "சடையப்பர்' என்ற பெயரும் ஏற்பட்டது. 

நந்தி அழகு "சொல்லி' மாளாது:
சிவன் கோபத்துக்கு  ஆளான இந்திரன் சாப நிவர்த்தி வேண்டும் பொருட்டு தேவலோக சிற்பியினால் செய்யப்பட்டு பிரதிஷ்டையானதாக வரலாறு.  அவ்வாறு வடிக்கும்போது கல், நந்தி உயர்பெற்று எழுந்ததாம். அதனால் சிற்பி உளியினால் முதுகில் அழுத்திய, கீறலை இன்றும் காணமுடிகிறது. சிவபெருமானுக்கு முன்பாக அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த 
நந்திகேசுவரர்க்கு ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு சாற்றப்படுகிறது.

பார் புகழும் "பரமகல்யாணி':  இங்கு அம்பாள் வந்த விதமும் சுவையானது. இத்தலத்துக்கு அருகிலுள்ள கீழாம்பூரிலிருந்த ஒரு தம்பதியினர் குழந்தை பாக்கியம் வேண்டி அம்பிகை பராசக்தியை நினைத்து விரதம் இருந்தனர். அவர்களின் தவத்துக்கு மெச்சி,  அம்பாள் அசரீரிவாக்காக அக்ரஹாரம் நடுவில் ஒரு கிணற்றில் தான் இருப்பதை உணர்த்தி, அந்த விக்கிரகத்தை (கற்திருமேனி) சிவசைல நாதர் அருகில் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு பணித்தாள். அத்தம்பதியினரும் பரமகல்யாணி என்று பெயரிட்டு அந்த சிலா திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். நாளடைவில் மழலைப்பேறு வாய்க்கப்பெற்றனர். 

விழாச் சிறப்பு:  சிவசைலநாதர்கோயில் அமைந்துள்ள இடம் ஒரு வனாந்திரப் பகுதியாக இருப்பதால் இவ்வாலய திருவிழாக்கள் அருகிலுள்ள ஆழ்வார்குறிச்சியில் நடைபெறுகின்றன. 

நடைபெறும் கும்பாபிஷேகம்: தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியுடனும், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள் ஸ்ரீ விது சேகரபாரதி சுவாமிகள் அனுக்கிரகத்துடனும், தருமை ஆதீனகுருமகா சன்னிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுடனும் நடைபெறும். இந்த கும்பாபிஷேகத்தை ஒட்டிய யாகசாலை வைபவங்கள் ஜூன் 20}இல் கும்பாபிஷேகத்தன்று மாலை திருக்கல்யாணம் உற்சவம், திருவீதி உலா நடைபெறும். 

- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com