ராம நாமமே மூச்சு!

ராம நாமமே மூச்சு!

நாம சங்கீர்த்தன மார்க்கத்தின் மூல புருஷர்களாகத் திகழ்ந்த மும்மூர்த்திகள் ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள், ஸ்ரீவெங்கடராம ஸத்குரு ஸ்வாமிகள். இதில் முதலாமவர், காஞ்சி காமகோடி மடத்தின் 59}ஆவது பீடாதிபதியாக விளங்கியவர். 

ஸ்ரீபோதேந்திரரின் பூர்வாஸ்ரமப் பெயர் புருஷோத்தமன். காஞ்சியில் பிறந்த இவர் ஸ்ரீமடத்துக் குழந்தையாகவே வளர்ந்து வந்தார்.  இளம் வயதிலேயே வேதம் முதலிய சகல சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்று, தோற்றப் பொலிவுடன் விளங்கிய இவர் மீது ஸ்ரீமடத்தின் 58}வதுபீடாதிபதியாகத் திகழ்ந்த ஆத்ம போதேந்திரரின் (விஸ்வாதிகேந்திரர்) அருள்பார்வை எப்போதும் படிந்திருந்தது.

வேத சாஸ்திரங்களின் சாரம் ஸ்ரீராம நாமமே என்றுணர்ந்து தினம்தோறும் லட்சத்து எண்ணாயிரம் ராம நாம ஜபம் செய்வதாக குருவின் முன்னிலையில் உறுதி எடுத்துக் கொண்டார் புருஷோத்தமன்.  இன்றும் கோவிந்தபுரத்தில் அவர் ஜீவ சமாதியில் இருந்து கொண்டே ராம நாம ஜபம் செய்வதாக ஐதீகம்.

ஒருமுறை ஆத்மபோதேந்திரர் காசிக்குச் சென்று சிலகாலம் தங்க விருப்பம் கொண்டு விஜய யாத்திரைமேற்கொண்டார்.  குருவைக் காண வேண்டி சிலநாள் கழித்து புருஷோத்தமன் தனது ஆத்ம நண்பனான ஞானசாகரனுடன் காசிக்குப் புறப்பட்டார். வழியில் நண்பன் அகால மரணம் அடைய நேரிட்டது.  காசிக்குச் சென்று ஆசார்யாளைத் தரிசனம் செய்தவுடன் தன்னுடைய நண்பனுடன் ஏற்கெனவே செய்துகொண்ட சபதப்படி கங்கையில் இறங்கி பிராணத் தியாகம் செய்ய முற்பட்டார் புருஷோத்தமன். அவரைத் தேற்றிய ஆசார்யாள் புருஷோத்தமனுக்கு சந்நியாச ஆஸ்ரமம் அளித்து,  மறுஜென்மம் அடைந்துவிட்டதாகக் கூறி, இந்த இக்கட்டிலிருந்து விடுவித்தார்.

குருவின் ஆக்ஞையை மேற்கொண்ட புருஷோத்தமன் காஷாயத்தை ஏற்றார்.  உணர்விழந்து கிடக்கும் உலகத்துக்கு பகவன் நாமமாகிய உணர்வைத் தரப் போகிறவர் என்று தீர்க்கத் தரிசனத்தால் அறிந்த குரு, புருஷோத்தமனுக்கு "பகவன்நாமபோதேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள்' என்ற பட்டப் பெயரை சூட்டினார்.

குருவின் வழிகாட்டுதலின்படி,  ஜகநாத பூரி சேஷத்திரத்துக்குச்சென்றார் போதேந்திரர்.  அங்கு லக்ஷ்மி தரகவி என்பவர் எழுதிய  "பகவன் நாம கெüமுதி'  என்ற கிரந்தத்தை அவரது மகன் ஜெகந்நாதகவியிடமிருந்து பெற்றார். மிலேச்சர்களால் கடத்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட ஒரு குலஸ்திரீக்கு ராமநாமத்தால் உலகமறிய விமோசனம் அளித்து நாம மகிமையை நிரூபித்தார்.

பிறகு தென்னகம் வந்த போதேந்திரர்,  கலியுகத்தில் திருநாமங்களை உச்சரிப்பதால் மட்டுமே பரம் பொருளை அடைய முடியும் என்ற நோக்குடன் தனக்குப் பிறகு மடாதிபதி யாகத் தகுந்த நபரை நியமனம் செய்த பிறகு நாம கீர்த்தனப் பிரசாரம் செய்வதற்கு கிராமம், கிராமமாகச் செல்லஆரம்பித்தார்.  பல கிரந்தங்களை அருளினார். 

இந்தக் காலகட்டத்தில்தான் திருவிடைமருதூரில் தனது சமகாலத்தவரான ஸ்ரீதர ஐயாவாளைச் சந்தித்தார். இருவரும் சேர்ந்து நாம பிரசாரத்தில்ஈடுபட்டனர். 

அக்காலத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பெரம்பூர்,  ராயபுரம், களாஞ்சிமேடு போன்ற கிராமங்கள் பாகவத சம்பிரதாயங்களைப் பின்பற்றி வாழும் பாகவதோத்தமர்கள் வாழும் ஊர்களாகத் திகழ்ந்திருக்கிறது. 

பெரம்பூர் கிராமத்துக்கு வந்த போதேந்திர ஸ்வாமிகள் ஓர் அன்பர் இல்லத்தில் சந்நியாச தர்மத்துக்கு ஏற்ப பிட்சை (உணவு)  ஏற்க வந்தார். அந்த அன்பரின் சிறு பையன் பிறவி ஊமையாக இருப்பதையும்,  அதனால் அவன் குடும்பத்தினர் படும் வேதனையையும் கண்டார்.  தனக்கு அளிக்கப்பட்ட உணவிலிருந்து சிறிதளவு ராமர் பிரசாதமாக அப்பையனுக்கு அளித்தார்.  அதை உண்ட உடனே சிறுவனின் ஊமைத்தன்மை நீங்கியது.   விடைபெற்ற போதேந்திரர் பூவனூர்,  திருவிசலூர் வழியாக கோவிந்தபுரம் சென்றதாக வரலாறு.  பெரம்பூரில் அவரால் ஸ்தாபிக்கப்பட்ட பெருமாள் ஆலயமும் இருக்கிறது. 

பெரம்பூர் அக்ரஹார வீதியில் காஞ்சி மகா ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஸ்ரீபோதேந்திராள் மடம் நிர்ணயிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஸ்ரீபகவன் நாமபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை மகோத்ஸம் ஸ்ம்பிரதாயப்படி, அஷ்டபதி பஜனையுடன் நடைபெறுகிறது.
இவ்வாண்டு 330}ஆவதுஆராதனை மகோத்ஸவம் செப்.  22}இல் (வியாழக்கிழமை) துவாதசியன்று  (ஸன்யஸ்தமஹாளயம்)  அன்று மாயூரம் ஸ்ரீஞான குரு பாகவதர் குழுவினரின், திவ்ய நாம பஜனையுடன் நடைபெற உள்ளது.

தொடர்புக்கு} 9442616854 
எஸ்.வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com