பொருநை போற்றுதும்! - 188

கல்லின் மீது அமர்ந்த ஆவுடை  ஏதோ சிந்தித்தாள். பின்னர் எழுந்தவள், மலைமீது சிறிது நேரம் தியானம் செய்து வருவதாகக் கூறி, வைத்திருந்த சின்னஞ்சிறு பெட்டியைக் கையில் பிடித்துக் கொண்டு, பாறைகளில் தாவி ஏறினாள்
பொருநை போற்றுதும்! - 188

கல்லின் மீது அமர்ந்த ஆவுடை  ஏதோ சிந்தித்தாள். பின்னர் எழுந்தவள், மலைமீது சிறிது நேரம் தியானம் செய்து வருவதாகக் கூறி, வைத்திருந்த சின்னஞ்சிறு பெட்டியைக் கையில் பிடித்துக் கொண்டு, பாறைகளில் தாவி ஏறினாள். 

அக்காள் வருவாள், வருவாள் என்று காத்திருந்தார்கள். இதன்பின்னர், ஆவுடை அக்காளின் வடிவத்தை யாரும் காணவில்லை. எந்த அடையாளமோ தடயமோ இல்லை. ஆயினும், அக்காளின் பாடல்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான பாடல்கள். எளிமையான சொற்களில் ஏற்றமிக்க கருத்துகளை எடுத்துரைக்கும் பாடல்கள். பரிபூராணானந்த அமுதத்தைப் பக்குவமாய்ப் பிழிந்து கொடுக்கும் பாடல்கள். 

முதன்முதலில், ஆற்றங்கரை மண்டபத்தில் ஐயாவாள் எந்த மந்திரத்தை உபதேசித்தார்? வந்தவர் ஐயாவாள் என்னும் வடிவமா? எங்கும் நிறைந்த பரபிரும்மமே ஐயாவாளாக வந்ததா? 
பிரஹலாதருக்காகத்தாண்டி பெரும் தூணில் அவதரித்தாண்டி பழையவினை தீர்க்கத்தாண்டி பரமகுருவாய் வந்தாண்டி எங்கிருந்து எங்கே வந்தாண்டி அவன் எங்கும் நிறைந்தவன் தாண்டி
மாயையினால் மறைந்தாண்டி, இவன் மனதுக்குள்ளே இருந்தாண்டி அத்வைத மெய் ஞான ஆண்டி என்னும் தலைப்பில் அக்காள் பாடுவதைக் கேட்கும்போது, எத்தனையோ  விஷயங்கள், புரியாமல் புரிகின்றன. ஆனால், சிற்றாற்றாளின் செல்வச் சீராட்டல் மட்டும் தெளிவாகவே புரிகிறது.  

பொருநையாளும் சிற்றாற்றாளும் எளிமையான சூழலில் பொங்கிப் பிரவாகம் எடுப்பது போலவே, அக்காளின் பாடல்களும் எளிமையான சொற்களில் பொங்கி, ஏற்றமான கருத்துகளில் பிரவாகம் கொண்டன. ஏதாவது ஒன்று கிடைத்தாலோ, நடந்தாலோ, "ஆச்சு' என்று சொல்வதும், கைநழுவியதையும் கிட்டாததையும் "போச்சு' என்று குறிப்பதும் கிராமிய வழக்கம். "ஆச்சே' என்பதையும் "போச்சே' என்பதையும் வேதாந்த விளக்கங்களுக்கான வாயில்களாகக் கண்டாள் அக்காள். 

ஆசைக் கயற்று ஊஞ்சலாடித் திரிந்ததும் போச்சே
அசஞ்சலமான அகண்ட ஸ்வரூபமாச்சே
ஆணென்றும் பெண்ணென்றும் அலைந்து திரிந்ததும் போச்சே
அசையாமல் ஞான ஸ்தலத்தில் இருக்கவும் ஆச்சே

சின்னச் சின்ன சொற்களில், வேதம், வேதாந்தம், ஞானம், பக்தி, அன்பு, ஆதுரம், இருவினை ஒப்பு, பரமானந்தம் என்று எல்லாவற்றையும் கொட்டிவிடுகிறாள். வாசிக்கும்போதும் செவியுறும்போதும் மிகவும் சாதாரணமானவையாகத் தெரியும் இத்தகைய வரிகள், எண்ண எண்ணத் தெவிட்டாத ஆனந்தம் அளிப்பவை. சித்தர்கலைப் போல், வெற்றுச் சடங்குகளைச் சாடவும் செய்கிறாள். 

பஞ்சகவ்யத்தால் பலன் வருமென்பதும் போச்சே
பஞ்ச தன்மாத்திரைக்குப் பலனாய் இருக்கவும் ஆச்சே
பேதங்கள் இல்லையென்பதைப் போகிற போக்கில் புலப்படுத்துகிறாள். 
கோத்திரங்கள் கல்பித குணங்கள் குடிகளும் போச்சே
குணாதீதமான பரபிரம்மம் நான் என்பதாச்சே
வேத மகா வாக்கியங்களைச் சுருட்டிப் பொதித்து, பேச்சு வழக்கிலேயே புகுத்திவிடுகிறாள். 
நாம ரூபம் நாம் என்ற பேரெல்லாம் போச்சே
நான்முகனாலே அறியப்படாதவன் ஆச்சே
லோகாதி லோகங்கள் எனக்குள்ளிருந்ததும் போச்சே
ஒன்றுமில்லை என்று தானாய் இருக்கவும் ஆச்சே
அனந்த ஜன்மத்திற்கு அடியிட்டிருந்ததும் போச்சே
அனந்த ஜன்மங்களும் இல்லாதிருக்கவும் ஆச்சே

கும்மி, குறவஞ்சி, பள்ளு, கண்ணி என்று பல்வேறு வகைகளில் ஞானப் பாடல்களை ஆவுடையக்காள் கொட்டியிருக்கிறாள். வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கிறாள். அனுபல்லவி, சரணம் போன்ற பாகங்களைக் கொண்ட கீர்த்தனங்களையும் இயற்றியிருக்கிறாள். 
செங்கோட்டையில், ஆற்றங்கரை மணடபத்தில் ஆவுடைக்கு மந்திர உபதேசம் செய்தாரில்லையா ஸ்ரீதர ஐயாவாள்? எப்படி உபதேசித்தார் என்பதை ஆனந்தபைரவி ராகக் கீர்த்தனம் ஒன்றில் தெரிவிக்கிறாள். 

ப:    பரிபூர்ணானந்த சுகம் தந்த குருநாதா
பவக் கடலைத் தீர்த்து வைத்தீர், வெங்கடேசா (பரி)
அனு:  ஹரிஹர ப்ரம்மாதியுடன் அண்டமெல்லாம் ஏகமென்று
த்ருடம்சொல்லி என்னை அழைத்து எனது வலச்செவியில்

"அஸி' வாக்கியத்தை உபதேசித்தீர்      (பரி)
ச:    ஆகாச மலரதுபோல் அகிலம் தன்னை உரைத்தீர்
  ...............................
  ...............................
ஏகாந்த வெளி தன்னிலே எப்போதும் இருத்தி வைத்தீர்
இன்னமுண்டோ சுவாமி இன்னமுண்டோ என்ற பயம் 
சொன்னதைக் கேட்டபின்                (பரி)

இந்தப் பாடலில் அக்காள் சொல்லக்கூடியவற்றைக் காண்கையில், "தத்வமஸி' என்னும் மகாவாக்கியத்தையே ஐயாவாள் உபதேசித்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது. 
பகவான் ரமண மகரிஷியும் மகாகவி பாரதியாரும் அக்காளின் பாடல்களில் நிரம்ப ஈடுபாடு கொண்டிருந்தார்கள். 

ஆவுடையக்காளின் பாடல்கள், நெல்லை, தென்காசி, திருவாங்கூர் பகுதிப் பெண்களிடம் பிரபலமாகத் திகழ்ந்தன. மதிய வேளைகளில், வீட்டின் வேலைகளை முடித்துவிட்டு, பெண்கள் கூடியமர்ந்து இப்பாடல்களைப் பாடினார்களாம். பூஜைகளிலும் திருமணக் காலங்களிலும்கூட இவை பாடப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 1000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அக்காளின் பாடல்கள் இருக்கவேண்டும். எல்லாமும் அச்சுக்கோ பதிப்புக்கோ வரவில்லை. சிவானந்த ஆச்ரமத்தில் தீûக்ஷ பெற்ற ஆயக்குடி வேங்கடராம சாஸ்திரிகள் என்பவர் இவற்றில் பலவற்றைத் தொகுத்து 1950}களில் வெளியிட்டார். 

இதற்கும் முன்பாக, 1910}களிலேயே தஞ்சாவூரைச் சேர்ந்த வைத்தியநாத பாரதி என்பவர் சில பாடல்களைப் பதிப்பித்ததாகத் தெரிகிறது. பின்னர், ஆங்காங்கே கிட்டிய சிறுசிறு பிரசுரங்களையும் கைபெழுத்துப் பிரதிகளையும் புழக்கத்தில் இருந்த பாடல்களையும் ரமணாச்ரமம், சங்கரக்ருபா போன்ற நிறுவனங்களின் ஆவணங்களிலிருந்தும் தேடித் தொகுத்து, நிறைவானதொரு நூலை ஸ்ரீ ஞானானந்த தபோவனத்திலிருந்து ஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமிகள் வெளியிட்டு அருளினார்கள். 

வேதாந்த ஆச்சே போச்சே, வேதாந்த குறவஞ்சி, வேதாந்த அம்மானை, வேதாந்தப் பள்ளு, வேதாந்த ஆண்டி, வேதாந்த வண்டு, வேதாந்தக் கப்பல், வேதாந்தபல்லி, வேதாந்த வித்யா சோபனம், வேதாந்த பிரத்யோத்திர கும்மி போன்றவற்றோடு, ப்ரும்ம ஸ்வரூபம்,  ப்ரும்ம மேகம், தட்சிணாமூர்த்தி படனம், பகவத்கீதை சாரம் போன்ற பாடல்களையும் அக்காள் இயற்றிக் கொடுத்திருக்கிறாள். இவை தவிர, இன்னும் பல.  வெளியுலகத்திற்கு வராத பாடல்கள் இன்னமும் இருக்கக்கூடும். எப்படியாயினும், ஆவுடையக்காளின் பாடல்கள் மேலும் புழக்கத்திற்கு வருமென்றால், ஆன்மிக உலகத்திற்கு யோகம்தான்! 
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com