பொருநை போற்றுதும் - 189

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் செங்கோட்டைக்கு வருகை புரிந்திருக்கிறார்.
பொருநை போற்றுதும் - 189

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் செங்கோட்டைக்கு வருகை புரிந்திருக்கிறார். மகிழ்ச்சி, துன்பம் } இரண்டு வகையான உணர்ச்சிகளும் அவருக்குக் கிட்டியுள்ளன. அது சீவகசிந்தாமணியை அவர் பதிப்பித்துக் கொண்டிருந்த காலம். அச்சகத்தில் பணி நடந்துகொண்டிருந்தது. பல்வேறு ஏடுகளைத் தேடிக் கண்டுபிடித்து, ஒப்பிட்டுப் பார்த்துப் பதிப்பித்துக் கொண்டிருந்த நேரம். செங்கோட்டையில் கவிராச பண்டாரம் என்னும் பண்டிதரின் வம்சாவளியினரின் வீட்டில் தங்கி, அவ்வீட்டிலிருந்த சுவடிகள், கிருஷ்ணாபுரம், கடையநல்லூர் போன்ற ஊர்களில் கிட்டிய சுவடிகள் ஆகியவற்றையெல்லா ம்  ஆய்ந்து கொண்டிருந்த நிலையில்தான், குமாரசுவாமிப் பிள்ளை அவர்களின் முழுமையான சிந்தாமணிப் பிரதி அவருக்குக் கிடைத்தது. இது மகிழ்ச்சி. செங்கோட்டையிலிருக்கும்போது, இவ்வூர் கனவான் ஒருவரைச் சந்திப்பதற்காக சாமிநாதையரின் நண்பர் சென்றார். 

சீவகசிந்தாமணி நூலைப் பெறுவதற்காக முன்னமே கையொப்பமிட்டு ஒப்புதல் கொடுத்திருந்த கனவான் அவர். அவரிடம் சென்று பணத்தைக் கேட்டபோது, கனவான் பின் வாங்கிவிட்டார். "இந்தப் பதிப்பு எனக்கு வேண்டாம்; இவர் பிழையாகப் பதிப்பிக்கிறார்' என்று கூறிவிட்டாராம். தம்முடைய சிந்தாமணிப் பதிப்புக்கு எதிரான வதந்திகளும் புரளிகளும் செங்கோட்டை வரை பரவிவிட்டதை உணர்ந்த தமிழ்த்தாத்தா, ஏடு தேடுவதை நிறுத்திவிட்டு, விரைவிலேயே நூலைப் பதிப்பிக்கவேண்டும் என்னும் உறுதி பூண்டார். 

இப்போது எண்ணினாலும், உ .வே. சா. என்னும் அப்பெருந்தகை பட்ட பாட்டை நினைத்தால் சங்கடமாகத்தான் இருக்கிறது. இருப்பினும், கனவான் வாக்குப் பொய்த்ததைப் பயன்படுத்தி, தமிழ்த் தாத்தாவின் வைராக்கியத்தைச் சிற்றாற்றாள் தூண்டிவிட்டாள் போலும்! 
அது சரி, அந்தக் கனவானின் பெயர் என்ன என்கிறீர்களா? தமிழ்த் தாத்தா சொல்லவில்லையே!

செங்கோட்டையிலிருந்து கிழக்கு முகமாக நகர்ந்து தென்காசியை அடைந்துவிடலாம். காசி விசுவநாதரை வணங்கிவிட்டு, அவர் காலடியிலேயே தங்கி, வடக்கிலும் மேற்கிலும் பார்வையைச் செலுத்தினால், பண்டைய பெருமையையும் சிற்றாற்றுப் படுகையின் பெருமிதத்தையும் நினைவூட்டுகிற ஊர்கள் பல! 

தென்காசிக்கு வடக்காகச் சொக்கம்பட்டி; வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி. பண்டைய ஆவணங்களில் வடகரை அல்லது வடகேரி. பிரிட்டிஷாரின் ஆவணங்கள், வெர்டிகேரி என்றுகூடக் குறிக்கின்றன. வெர்டிகேரிப் (சொக்கம்பட்டிப்) பாளையக்காரர், தமது பொள்ளம் (பாளையம்) முழுவதையும் தொலைத்திருந்ததாகவும், 1767}ல் ஏற்பட்ட சில உடன் படிக்கைகளின்படி, பாளையத்தின் சில பகுதிகள் திரும்பக் கொடுக்கப்பட்டதாகவும், கால்டுவெல் பாதிரியார் எடுத்துரைக்கிறார். 

தென்காசியிலிருந்து சிவகிரி செல்லும் மார்க்கத்தில், தென்காசியிலிருந்து சுமார் 14 மைல் தொலைவிலுள்ளது சொக்கம்பட்டி (மதுரை மேலூர் பகுதியிலும் வேறு சில இடங்களிலும்கூட சொக்கம்பட்டி என்னும் பெயரில் ஊர்கள் உள்ளன; சொக்கம் என்றால் அழகு, தங்கம், நன்மை போன்ற பொருள்கள் உண்டு; சிவபெருமானுக்குச் சொக்கன் என்றொரு பெயர்; இதனால், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் பலவற்றுக்குச் சொக்கம்பட்டி என்னும் பெயர் வழங்கலானது).

மேற்குப் பகுதிப் பாளையங்களில், பூலித்தேவனின் நெற்கட்டும் செவ்வலுக்கு அடுத்தபடியாக, வலிமைமிக்க பாளையமாக வடகரை (இதுதானே சொக்கம்பட்டியின் அப்போதைய பெயர்) திகழ்ந்தது. 1757}58 ஆம் ஆண்டுகளில், நெல்லைப் பகுதிகளின் ஆட்சியாளராக யூசுஃப்கான் விளங்கிய காலகட்டத்தில், கப்பம் கட்ட மறுத்து, நவாப் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கத்தை எதிர்த்த வீரர்களில் முக்கியமானவராக வடகரைப் பாளையத்தார் திகழ்ந்தார்.  

பாளையங்கள் ஒன்றுபட்டு யூசுஃப்கானை எதிர்த்தபோது, வடகரை வீரர்கள் முன்னணியில் நின்றனர். எதிர்ப்பாளர்களில் வடகரைக்காரரே தலையாயவர் என்றெண்ணிய யூசுஃப்கான், தன்னுடைய முதல் தாக்குதலை வடகரைமீதே ஏவினான். இப்பகுதி கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வடகரைக் கோட்டை ஏகத்துக்கும் சேதமாக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான், யூசுஃப்கான் முழுமையாகத் தங்களின் அடிமையாக இருக்கவில்லை, தனியாட்சி அமைக்க எண்ணுகிறார் என்னும் ஐயம், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வந்தது. யூசுஃப்கான் மதராஸýக்குத் திரும்ப அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட சிக்கல்களில் வடகரை சிக்குண்டிருந்த காலத்தில், வடகரையின் பாளையக்காரராக இருந்தவர், சின்னநஞ்ச தேவர் என்பார் (சில பதிவுகளில், இவரின் பெயர் சின்னனைஞ்சா தேவர் என்றும் காணப்படுகிறது; இந்தப் பரம்பரையின் முன்னோர் பெயர் "சிவனணைஞ்சத் தேவர்' என்பதாகும்; இந்தப் பெயரே, காலப்போக்கில் சின்னனைஞ்சா என்றும், பிரிட்டிஷ் பதிவுகளில் சின்னநஞ்ச என்றும் மாறியிருக்கக்கூடும்). 

வழக்கம்போல் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கம்பெனி செய்யத் தொடங்கியது. சின்னநஞ்ச தேவருக்குப் போட்டியாக, பாளையத்திற்கு உரிமை கொண்டாடிப் புறப்பட்டார் வெள்ளையத் தேவர். 1767 உடன்படிக்கைகளின்படி, பாளையப் பகுதிகள் சின்னநஞ்ச தேவருக்குத் திருப்பப்பட்ட நிலையில், இந்த உரிமைப் போராட்டம் தொடங்கப்பட்டிருந்தது. உரிமைப் போராட்டத்தின் உச்சத்தில், அதாவது, 1768க்கும் 1778க்கும் இடைப்பட்ட காலத்தில், வடகரை என்ற பெயர், சொக்கம்பட்டி என்று மாறியதாகத் தெரிகிறது. 1779 வாக்கில், தன்னோடு இன்னும் சில 
பாளையங்களைச் சேர்த்துக் கொண்ட வெள்ளையத் தேவர், கம்பெனிக்கு முழு அடிமை ஆனார். இதனால், கம்பெனியை எதிர்த்த பிற பாளையத்தாரின் பகைமைக்கும் உள்ளானார். 

ஆற்காடு நவாப் } ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி } பாளையத்தார் என்னும் மும்முனை உறவுகள், பலவேறு அரசியல் காரணங்களால் மாறிக் கொண்டேயிருந்த நிலையில், 1787}ல், நவாப்}பாளையத்தார் இணைப்புத் துருப்புகள் சொக்கம்பட்டியின்மீது படையெடுத்தன. வெள்ளையத் தேவர் தப்பித்து ஓடிவிட, சின்னநஞ்ச தேவர், மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். 1790}இல், சின்னநஞ்ச தேவர் காலமானபோது, அவருடைய மகன் சிறு குழந்தை. எனவே, மீண்டும் குழப்பம். பதுங்கியிருந்த வெள்ளையத் தேவர்,  கம்பெனியுடனான உறவைப் புதுப்பித்துக் கொண்ட நிலையில், 1796}இல், மீண்டும் ஆட்சி உரிமையைப் பெற்றார். 1803}இல், ஜமீன்தார் அந்தஸ்தும் கொடுத்துச் சிறப்பித்தது கம்பெனி. போனால் போகிறதென்று, சின்னநஞ்ச தேவரின் மகனுக்கு உதவித் தொகையையும் வழங்கியது. 

1810-இல், வெள்ளையத் தேவர் இறந்தபோதுதான், சொக்கம்பட்டிப் பாளையத்தின் பெருவீழ்ச்சி தொடங்கியது எனலாம்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com