பொருநை போற்றுதும் - 191 

வெள்ளக்காலிலிருந்து தென்காசியை அடைந்து, தென்காசி விச்வநாதரை தரிசித்துவிட்டே மேலே தொடரலாம் என்று தோன்றுகிறது.
பொருநை போற்றுதும் - 191 

வெள்ளக்காலிலிருந்து தென்காசியை அடைந்து, தென்காசி விச்வநாதரை தரிசித்துவிட்டே மேலே தொடரலாம் என்று தோன்றுகிறது. தென்காசியை அடைந்துவிடுகிறோம். சிற்றாற்று வீரியம்மன் திருக்கோயில்களைப் பற்றிச் சிந்தித்தபோது, தென்காசியின் பராக்கிரம பாண்டியனைக் குறித்தும் சற்றே சிந்தித்தோம். விரிவாகவே இப்போது காண்போம்.

தமிழ்ச்சங்கங்களின் காலத்திற்கும் முன்பாகவே பாண்டிய மன்னர்களின் காலத்திலும் தமிழ்  செழித்திருந்தது. இயற்கைச் சீற்றம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி, பாண்டியர்களின் ஆட்சி குன்றியது. மீண்டும் 6}ஆம் நூற்றாண்டில் கடுங்கோன் பாண்டியனின் பெருமுயற்சியில் பாண்டியர் ஆட்சி செழிக்கத் தொடங்கியது. அவ்வப்போது சில இடையீடுகள், சோழப் பேரரசின் ஆதிக்கம் ஆகிய காரணங்களால் சிற்சில தடங்கல்கள் தோன்றிடினும், 13}ஆம் நூற்றாண்டுவரை பாண்டியர் ஆட்சி தொடர்ந்தது.

இதன்பின்னர், ஆங்காங்கே சிறுசிறு ஆட்சிப் பரப்புகளைப் பாண்டிய வம்சத்தினர் ஆண்டுவந்தனர். இவ்வாறு ஆண்டவர்களைப் "பிற்காலப் பாண்டியர்கள்' என்றழைப்பது வழக்கம். 15}ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில், தென்பாண்டிச் சீமையில், பராக்கிரம பாண்டியன் என்னும் பெயரோடு மூன்று மன்னர்கள் இருந்ததாகத் தெரிகிறது. 1360 வாக்கிலிருந்து 1440 வரை, மேலும் கீழுமாக இவர்கள் ஆண்டிருக்கிறார்கள். கொற்கை, தென்காசி, கரிவலம்வந்த நல்லூர் ஆகிய பகுதிகளில் இவர்களுடைய ஆளுகை இருந்தது. மூவரைப் பற்றிய முழுமையான தகவல்கள் இல்லையென்றாலும், தென்காசிப் பராக்கிரம பாண்டியனைப் பற்றி ஓரளவு தெரிகிறது. 

செந்தமிழ்ப் புலமையும் வடமொழித் திறமையும் கொண்டிருந்த சடையவர்மன் பராக்கிரம பாண்டியர், 1411 முதல் 1463 வரையில், தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்தினார். தலைநகரத்தின் பெயரால், இவரும் இவரின் வழித்தோன்றல்களும் "தென்காசிப் பாண்டியர்கள்' என்றே சுட்டப்படுகின்றனர். தென்காசித் திருக்கோயிலில் உள்ள மெய்கீர்த்தி, இவரின் திருப்பணிகளையும், சிறப்புக் குணங்களையும் தெளிவாக விளக்குகிறது. சங்கரநயினார் கோயில், குற்றாலம், வீரகேரளம்புதூர் போன்ற இடங்களில் தன்னுடைய பகைவர்களை வெற்றிகொண்ட இம்மன்னர், குற்றாலப் போரில் சேர மன்னரை வென்றதாகத் திருவாங்கூர் தொல்லியல் களஞ்சியத்தின் தளவாய் அக்ரஹாரச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. 

திருக்குற்றாலம், திருப்புடைமருதூர் திருக்கோயில்களில் மண்டபங்கள் அமைத்த பராக்கிரம பாண்டியர், நெல்லையப்பரின் அர்த்தஜாம வழிபாட்டு நிவந்தங்களையும் ஏற்படுத்தினார். பொன்கொண்டு கோயில் திருப்பணிகள் செய்தமையால் "பொன்னின் பெருமாள்' என்றும், மானத்தைக் கவசமாகக் கொண்ட குணத்தார் என்பதால் "மானகவசன்' என்றும் இவருக்குப் பெயர்கள் விளங்கின. 

பராக்கிரம பாண்டியருடைய கனவில், காசி விச்வநாதர் எழுந்தருளினார். தம்முடைய வடகாசி (வாரணாசி) திருக்கோயில் சிதிலமுற்றுவிட்டதாகவும், சிற்றாற்றின் வடகரையில் நகரம் ஒன்றை நிறுவி, தமக்கோர் ஆலயமும் எழுப்புவிக்கக் கட்டளையிட்டார். இதன்படி, தென் காசி என்னும் நகரை அமைத்து, திருக்கோயிலையும் இம்மன்னர் எழுப்புவித்தார். பதினேழு ஆண்டுகள் இத்திருப்பணி நடைபெற்றது. 

தனி ஒருவரின் பணியன்று, பலரும் இயைந்து இசைந்து செய்வதே திருக்கோயில் திருப்பணி என்னும் கொள்கையில் இம்மன்னருக்கு மிகுந்த நம்பிக்கை. எனவேதான், குறைவேதுமின்றி இக்கோயிலைப் பாதுகாக்கவேண்டுமென்று சிவனடியார்களையும் தன்னுடைய வழித்தோன்றல்களையும் இவர் வேண்டினார். கோயில் திருப்பணியில், அன்பர்கள் அளித்த பொருளையும் இவர் சேர்த்துக்கொண்டார் என்பர். தமிழ்ப் புலமையும் தமிழ் நெஞ்சமும் கொண்டிருந்தார் என்பதற்கு, இவர் இயற்றிய பாடல்களே சான்றுகள். தென்காசித் திருக்கோயிலை கவனமாகப் பாதுகாக்கும்படி உள்ளமுருக இவர் கோரியிருக்கும் இப்பாடல்களை வாசிப்பவர் உள்ளமெல்லாம் உருகும்; நெஞ்சமெல்லாம் கரையும். 

 மனத்தால் வகுக்கவும் எட்டாத 
         கோயில் வகுக்க முன்னின்(று)
எனைத்தான் பணிகொண்ட நாதன் 
         தென்காசி என்று மண்மேல்
நினைத்து ஆதரம் செய்து 
         தம்காவல் பூண்ட நிருபர் பதம் 
தனைத் தாழ்ந்து இறைஞ்சித் 
         தலைமீது யானும் தரித்தனனே ...
சேலேறி வையத் தென்காசி ஆலயம் 
         தெய்வச் செயல்
 ஆலே சமைத்ததிங்கு என் செயலல்ல 
         அதனை இன்ன
 மேலே விரிவு செய்தே புரப்பார் 
         அடி வீழ்ந்தவர்தம் 
பால் ஏவல் செய்து பணிவன் 
         பராக்கிரம பாண்டியனே
சாத்திரம் பார்த்து இங்கியான் 
         கண்ட பூசைகள்தாம் நடத்தி
ஏத்தி அன்பால் விசுவநாதன் 
         பொற்கோயில் என்றும்புரக்க
பார்த்திபன் கொற்கைப் பராக்கிரம மாறன் 
         பரிவுடன் அக் 
கோத்திரம் தன்னில் உள்ளார்க்கும் 
         அடைக்கலம் கூறினனே

இப்பாடல்கள், தென்காசிக் கோயில் கோபுரத்தில் செதுக்கப்பட்ட பாடல்கள். 

கோயில் திருப்பணியில், ஒன்பது நிலை கோபுரம் எழுப்பவேண்டும் என்னும் இம்மன்னரின் அவா மாத்திரம் நிறைவேறவில்லை. இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இவருடைய தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டிய மன்னர், இதனைப் பூர்த்தி செய்தார். 1463}ல் பராக்கிரம பாண்டியர் விண்ணுலகெய்தியபோது, எந்தத் திருக்கூட்டத்தில் இவர் கலந்திருக்கக்கூடும் என்பது பற்றி, புலவர் ஒருவர் பாடினார்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com