ஆதவனை ஆராதிப்போம்!

உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் ஆதார சக்தியாக விளங்குபவன் ஆதவன், ஆதித்தன் என்றெல்லாம் அழைக்கப்படும் சூரியன்.
ஆதவனை ஆராதிப்போம்!

உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் ஆதார சக்தியாக விளங்குபவன் ஆதவன், ஆதித்தன் என்றெல்லாம் அழைக்கப்படும் சூரியன். சூரியனிடமிருந்து வரும் சக்தியாலேயே உலக இயக்கம் நடைபெறுகிறது. 

பஞ்சபூதங்கள் என்றழைக்கப்படும் ஐவகை ஆற்றல்களும் தங்களுடைய சக்தியை சூரியனிடமிருந்தே பெறுகின்றன. கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் "ஜோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாக' அருள்கிறார். 

சூரியனை "சூரியநாராயணன்' என்றழைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நவகிரகங்களில் முதன்மையாக விளங்கும் சூரியனை வழிபட்டாலே, மற்ற எல்லா கிரகங்களையும் வணங்கிய பலன் கிடைக்குமென்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

அன்ன ஆகாரமின்றி தவமியற்றி வாழ்ந்த ரிஷிகளும், சித்தப்புருஷர்களும் சூரிய சக்தியையே தங்கள் உணவாகக் கொண்டு உயிர் வாழ்ந்தனர் என நம் புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆதிசங்கரர், சனாதன தர்மம் என்றழைக்கப்படும் நம் சமயத்தில் அன்று இருந்த குறைகளை நீக்கி, கலாசாரத்தால் ஒன்றிணைந்த எல்லா வழிபாட்டு முறைகளையும் சீர்திருத்தி, முக்கியமாக இருந்த ஆறு வழிபாடுகளில் மற்றவற்றை இணைத்து, ஒரு முழுமையான பரந்த கொள்கைகளையுடைய சமயத்தைத் தோற்றுவித்தார். 

அதுவே இந்நாளில் இந்து சமயமாக அறியப்படுகிறது. இச்சமயத்தில் உள்ள வழிபாட்டு முறைகளில் முதலில் இருப்பது "செüரம்' என்று அழைக்கப்படும் சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும் முறையாகும். சிலர் தினமும் சூரியனைப் பார்த்த பின்னரே உணவுண்னும் பழக்கத்தைக் கைக்கொண்டுள்ளனர். இந்து சமயத்தில் பல கடவுள்கள் இருந்தாலும் நம் கண்களால் கண்டு தரிசிக்கும் வண்ணம் இருப்பது பிரத்யட்ச தெய்வமாக விளங்கும் சூரிய பகவான் மட்டுமே.

"சூரிய குலம்' அல்லது "ரகு வம்சம்' என்பது அரச பரம்பரைகளில் ஒன்றாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. புராணங்களில் வைவஸ்வத மனு என்பவர் சூரியனின் மகனாக கருதப்படுகிறார். இவரே, உலகின் முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான இஷ்வாகுவின் வம்சம் சூரிய வம்சமாக அறியப்படுகிறது. 

பகீரதனும், ராமரும் சூரிய குலத்தில் உதித்தவர்களாவர். 

"தின மணி வம்ஸ திலக லாவண்ய தீன ஸரண்ய...' என்று தியாக பிரும்மம் தன் கீர்த்தனை ஒன்றில் ராமபிரானை "தினமணி குல திலகமே!' என்று போற்றுவார் (தினமணி } சூரிய பகவானின் பெயர்களில் ஒன்று).

சூரிய வழிபாட்டில் மன நலன் மட்டுமல்லாமல், உடல் நலமும் பேணப்படுகிறது. சூரியனை வணங்கினால் நோய் தீர்ந்து, உடல்நலத்துடன் வாழ்வர் என்றும், ஆயுள் பெருகும் என்றும் புராணங்கள் மட்டுமல்லாமல் சித்த சாஸ்திரமும் கூறுகிறது. 

யோகாசனத்தில் சூரிய நமஸ்காரம் என்ற ஒரு தனிப்பிரிவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் நம் உடல், நாம் உண்ணும் உணவிலிருந்து தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற வேண்டுமானால் அதற்கு "வைட்டமின் இ' தேவை. இவை நாம் உண்ணும் உணவில் அறவே இல்லையெனலாம். 

ஆனால் சூரிய ஒளியில் இச்சத்து அதிக அளவில் உள்ளது. இச்சத்தைப் பெறுவதற்காகவே மேல்நாடுகளில் "சூரிய குளியல்' என்ற பெயரில் காலையிலும் மாலையிலும் தங்கள் உடலில் சூரிய ஒளி படுமாறு படுத்தும், அமர்ந்தும் சூரிய ஒளியைப் பெறுகின்றனர்.  

தமிழ்நாட்டில் சூரியனை வழிபடும் நாளையே பொங்கல் பண்டிகையாக, தை முதல் நாளில் கொண்டாடுகிறோம். விவசாயம் செய்யும் மக்கள் சூரிய பகவானின் அனுகிரகத்தால் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்லை அறுவடை செய்து ஆனந்தமாக இருப்பது இந்தத் தை மாதத்தில்தான். பனிமாதமான மார்கழி கழிந்ததும் எல்லா இடங்களிலும் செடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கத் துவங்குவதும் இந்த மாதத்தில் தான். மேலும் சூரியன் தன் பயணத்தை வடக்கு நோக்கித் திருப்புவதும் இந்நாளில்தான். அதனால் குளிர் நீங்கி இதமான சூட்டில் உடலில் சுறுசுறுப்பு ஏற்படுவது இயற்கையல்லவா!

சூரியனை வழிபட்டு, நமக்கு உணவை அளித்திடும் உழவர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளையும் வழிபட்டு, நம் நன்றிக் கடன்களைச் செலுத்தும் இந்த பண்டிகை பொங்கல் பண்டிகையாக நான்கு நாள்கள் கொண்டாடப்படுகிறது. இதனை "மகர சங்கராந்தி' என்றும் அழைப்பர். 

வடமொழியில் "சங்கரமணம்' என்றால் "நகரத் துவங்குதல்' என்று பொருள். சூரியன் தனது ராசி மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் ஒரு ராசியில் இருந்து, இன்னொரு ராசிக்கு நகர்வதே "சங்கராந்தி' ஆகும்.  மகர ராசிக்கு மாறுவதால்  "மகர சங்கராந்தி' எனப்படுகிறது.தேவர்களுக்கு காலைப் பொழுதின் ஆரம்பம் மகர மாதம் ஆகும். ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாதம் இரவு என்பது தேவர்களின் ஒரு நாள் என்று கூறப்படுகிறது. காலை பொழுதின் துவக்கமே தை மாதம் ஆகும். எனவே தான் சூரியன் முதலான தேவர்களுக்கு இந்த ஆரம்ப நாளில் நாம் பூஜைகள் செய்து வழிபடுகிறோம். 

பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை. போகி என்றால் மழைக்கு அதிபதியான இந்திரனை குறிக்கும். அந்நாளில் இத்தினத்தில் இந்திர விழா கொண்டாடப்பட்டது. மறுநாள் விவசாயிகள் ஆதவனுக்கு நன்றி சொல்லும் விதமாகத் தை முதல் நாள் நல்ல நேரத்தில் பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.  

பொங்கல் பண்டிகை நாளன்று புதுப்பானையை அலங்கரித்து, அதில் அறுவடை செய்த புது நெல்லிலிருந்து எடுத்த அரிசியைப் போட்டு, பால் பொங்கலிட்டு, பால் பொங்கி வழியும் போது "பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சியில் கூவுவர். பொங்கல் பொங்குவதுபோல நம் வாழ்வில் மங்கலமும் பொங்கும் என்பது நம் நம்பிக்கை. பொங்கல் தயாரானதும் மற்ற நிவேதனங்களையும் செய்து சூரியனுக்கு படைப்பர்.    

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல். அதிகாலையில் தங்களின் சகோதரர்கள் நலமுடன் இருக்க வேண்டி கணுப் பிடி வைக்கும் பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளைக் குளிப்பாட்டி, நன்கு அலங்கரித்து, பசுக்களைத் தெய்வமாகப் பாவித்து, பூஜைகள் செய்து, எல்லாவற்றிற்கும் பொங்கல் அளித்து மகிழ்வர். பசுக்களிடத்தில் முக்கோடி தேவர்களும் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

பொங்கல் பண்டிகையின் நான்காம் நாள் காணும் பொங்கல் திருநாள். இப்பண்டிகையின் போது வீட்டில் இருக்கும் மூத்தவர்களின் கால்களில் பணிந்து இளையோர் ஆசி பெற்றுச் செல்வர். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து அமர்ந்து உணவருந்தி, மகிழ்ச்சியுடன் இருப்பர். உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அவர்களையும் விருந்துக்கு அழைப்பர்.  அனைவரும் ஒன்றுகூடி காணப்படுவதால்தான் இது காணும் பொங்கல். 

இவ்வாறு சூரியனை மையமாகக் கொண்டு கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை இந்தியாவின் பல பகுதிகளிலும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சியோடும், குதூகலத்தோடும் நாமும் இப்பண்டியையைக் கொண்டாடுவோம். சூரியனுடைய தோத்திரமான ஆதித்ய இருதயம் மிகுந்த சக்தி வாய்ந்தது. ஸ்ரீராமபிரான் இத்தோத்திரத்தால் சூரியபகவானைத் துதித்து அவர் அருள் பெற்றே ராவணனை வென்றார் என்கிறது ராமாயணம்.  

பொதுவாக உள்ள காயத்ரி மந்திரம் சூரியனையே துதிப்பதாகும். நாமும் இந்நன்னாளில் ஆதவனை ஆராதித்து, அவரருளால் ஆரோக்கியமான வாழ்வு பெறுவோம். இவ்வாண்டு ஜனவரி 14}ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

- அபிராமி மைந்தன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com