குலம் தழைக்க குழந்தை வரம்!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் உள்ள காருகுறிச்சி, கன்னடியன் கால்வாயின் வடகரையில் அமைந்திருக்கும்
குலம் தழைக்க குழந்தை வரம்!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் உள்ள காருகுறிச்சி, கன்னடியன் கால்வாயின் வடகரையில் அமைந்திருக்கும் ஒரு வளமிக்க சிற்றூர் ஆகும். கறவை நின்ற காராம்பசு கூட மீண்டும் பால் சுரக்கும் சக்தி பெற்ற ஊர் எனவும் இத்தலத்தை நம் முன்னோர்கள் புகழ்ந்து போற்றியுள்ளனர்.

இதனால் இத்தலம் "காரான்குறிச்சி' என்ற பெயர் பெற்று, அதுவே மருவி "காருகுறிச்சி' என விளங்குகிறது. நாதஸ்வர மேதையான அருணாசலம் இவ்வூரில் பிறந்து, தன் இசையால் பெருமைகளைத் தேடித்தந்துள்ளார் என்ற சிறப்பும் உண்டு. 

பழைமையும், பெருமையும் நிறைந்த காருகுறிச்சியில் குழந்தையின்றி தவிப்பவர்களுக்கு குழந்தை வரமும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதிகளுக்கு ஒருமித்த உணர்வும் அளிக்கும் திருத்தலமாக அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத குலசேகர நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

தல வரலாறு: கி.பி. 655}ஆம் ஆண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த பூதல வீர உதய மார்த்தாண்டன் என்ற மன்னர் கருத்து வேறுபாடின் காரணமாக தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். மன்னர், தன் குலம் தழைக்க குழந்தை வரம் வேண்டி, குலசேகர நாதரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தார். பின்பு மன்னர் மேற்கொண்ட கார்த்திகை சோமவார விரதத்தின் பயனாக, பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைந்து, அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. 

மன்னரின் வம்சம் விருத்தியாக அருளியதால், குலசேகர நாத சுவாமிக்கு "வம்ச விருத்தீஸ்வரர்' என்ற சிறப்பு பெயரும் உண்டு. பரிகாரத் தலம்: களத்திர தோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் குலசேகர நாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாளையும், ஒரே இடத்தில் நின்றவாரே தரிசனம் செய்து, மனமுருகி வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடி வரும்.

குழந்தையின்றி தவிக்கும் தம்பதிகள் தங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், சுவாமி அம்பாளின் பரிபூரண அருளால் தம்பதிகளின் குலம் தழைக்க குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம். மேலும் கருத்து வேறுபாடின் காரணமாக பிரிந்த தம்பதிகள் வந்து வழிபட்டால் விரைவில் அவர்கள் மனமொத்து இணைந்து விடுகின்றனர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

நேரம்: காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். 

அமைவிடம்: சேரன்மாதேவி வழியாக திருநெல்வேலி } பாபநாசம் செல்லும் சாலையில் சுமார் 26 கி.மீ. தூரத்தில் காருகுறிச்சி அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத குலசேகர நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: 78250 62168.

-சாய் கார்த்திக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com