மண்ணில் உயர் மழிசை!

அத்ரி, பிருகு, வசிட்டர், பார்க்கவர் முதலிய  பிரம்மரிஷிகள் சத்யலோகத்திற்குச் சென்று பிரம்மதேவரைத் தரிசித்து திருவடிகளை வணங்கினர்.
மண்ணில் உயர் மழிசை!

அத்ரி, பிருகு, வசிட்டர், பார்க்கவர் முதலிய  பிரம்மரிஷிகள் சத்யலோகத்திற்குச் சென்று பிரம்மதேவரைத் தரிசித்து திருவடிகளை வணங்கினர். இவ்வுலகில் தவம் செய்ய உகந்த இடம் எது என்பதை கேட்டு தெளிவுபெற விரும்பினர்.   அவர்கள் கருத்தினை உணர்ந்த பிரம்ம தேவரும்  தேவ சிற்பியான சதுர்முகனைத் துலாக்கோல் கொண்டு வரும்படிக் கூறினார். அத்துலாக்கோலின் ஒருதட்டில் திருமழிசை என்னும்  தலத்தையும் , மற்றொரு தட்டில் ஐம்பது யோசனை பரப்பளவுள்ள ஏனைய மண்ணுலகம் முழுமையையும் வைத்து,  காட்டச் சொன்னார். துலாக்கோலில் திருமழிசையிருந்த  தட்டே கனமாகித் தாழ்ந்து நின்றது. பிந்திய தட்டு மேலெழும்பி நின்றது.

திருமழிசையின் உயர்வுக்கும், மேன்மைக்கும்  காரணம் கேட்டனர். அது உலகுக்கே நாதனான திருமால் தேவியருடன் வதியும் இடம். அவன்உலகுக்கே நாதனான  ஜெகந்நாதனாதலால் மண்ணில் நல்ல மழிசையாக,  மத்திய ஜெகந்நாதமாக விளங்கும் என்றார்.    

 மழிசை என்றால் பூமிக்கே ஆதாரமானது என்பது பொருள்  பல மகிமைகளின்  சாரம் செறிந்த  தலமே திருமழிசை. அதன் பெருமை, அகிலத்தினும் பெரியது. "உங்களது தவத்திற்கு உற்ற உரியதலம் திருமழிசையே, அது சிறந்த வளங்களைக் கொண்ட தலம். அங்கே தவங்களியற்றி தனிப்பெரும் பலன்களைப் பெறுவீர்களாக" என்று நான்முகன் நல்லாசியும் நல்கினார்.

முதலாழ்வார்கள் மூவர் அவதரித்த தொண்டை மண்டலத்தில் சிறந்து விளங்கும் திருமழிசை  மகிமை பொருந்திய ஸாரமான ஷேத்ரம் ஆதலால் மஹிஸாரம் (மழிசை) எனப்பட்டது. 'திருமகளும், மண்மகளும், ஆய்மகளும் சேர்ந்ததால் திருமகட்கே தீர்த்தவாறு என்கொல்' என்னும் ஆழ்வார் பாசுரத்தின் படி, திருமகள் இத்தலத்தில் திருமங்கைவல்லி என்னும் பெயருடன் திகழ்கிறாள்.  திருமகள் பொருந்தி உறையும் தலமாதலால்  திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருமழிசை ஆயிற்று . இங்கே அவதரித்த திருமழிசை ஆழ்வார். ஆழ்வார்களுள்  சிறந்தவராகக் கருதப்படுகிறார். 

கல்வெட்டுகள்: பொது ஆண்டு 1178 ஆண்டு முதல் 1218 வரை   மூன்றாம் குலோத்துங்க சோழன் , 1243-1261காலத்திய கோப்பெருங்சிங்கன்; 1250 -1280 இல் இருந்த  விசயகண்ட கோபாலன் ; 1376-1404 காலத்திய அரியண்ண உடையார் ; 1465-1485இல் இருந்த  விருபாட்சன்  ஆகிய அரசர்கள் காலத்தில் இக்கோயில் பராமரிக்கப்பட்டது. கி.பி.1255-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் கோயிலுக்கும் நிலம் வழங்கியது தொடர்பான தகவல்கள்  உள்ளன. 3 ஆம் குலோத்துங்கன் கல்வெட்டில்   திருமழிசை சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கப்பட்டதுடன்,  தமிழ் வேதமான திவ்விய பிரபந்தத்துடன்  சதுர்வேதங்களும் ஓதப்பட்டன என்பதும் அறிய முடிகிறது. அதனால் இதனை  உபய வேதபுரம் எனவும் குறிப்பர்.

'மஹீசாரம்' என வடமொழியாக்கம் பெற்று வழங்கப்பட்ட திருமழிசை 12,13-ஆம் நூற்றாண்டிலேயே திருமழிசை, திருமழிசை அகரம் என வழங்கப்பட்டுள்ளது. திருமழிசை ஆழ்வாரின் அவதாரத் தலமான இவ்வூரில் "பிருகு தீர்த்தம்' என்னும் திருக்குளம் உள்ளது.

திருமழிசையாழ்வார்: பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முக்கியமானவர்.  தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாகத் திருமழிசையில் அவதரித்தவர்.

பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிய  அவர் மனைவி கருவுற்று பன்னிரண்டு திங்கள் கழித்து, கை, கால், முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டம் பிறக்க, அதனை   பிரம்பு புதரில் இட்டுச் செல்ல திருவாளன், பங்கயச்செல்வி என்பவர்கள் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்தனர்.  ஒரு வயதான தம்பதியர்  கொடுத்த பாலை உண்டு தனக்குக் கொடுத்த பாலில் மீதத்தை அவர்கள் சரிபாதி உண்ணுமாறு செய்தார். இதன் மூலம் இளமை மீண்ட அத்தம்பதிகளுக்குப் பிறந்த ஆண்மகவே பின்னாளில் கணிகண்ணன் எனும் பெயரில் திருமழிசையாருக்கு அணுக்க சீடரானார்.

வேறு தெய்வங்களுக்கு மேலாகத் திருமாலை உயர்வாகச்சொல்லி நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட பாசுரத்தையும் இயற்றியுள்ளார். இவை நாலயிர திவ்விய பிரபந்தத்தில் உள்ளன பக்தியில் தலை சிறந்தவராக  விளங்கியதால் பக்திசாரர் என பெயர் பெற்றவராவார்.தன் தமிழ் பாசுரங்களால்  திருவெஃகாவில் குடிகொண்டுள்ள இறையாகிய யதோத்காரி  பெருமாளை மன்னனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெருமாளை தன்னுடன் கிளம்பி வரவும், மீண்டும் சென்று சந்நிதியில் படுத்துக் கொள் என உத்திரவிட வல்லவராக இருந்தார். இதேபோல் குடந்தையிலும் பல அற்புதங்கள் செய்து தன் யோகபலத்தால் 2300 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்து  திருநாடலங்கரித்தார். அவரது திருவரசு குடந்தையில் உள்ளது.

திருக்கோயில்: திருமழிசையாழ்வார் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் கிழக்கு நோக்கிய  5 நிலை ராஜ கோபுரத்துடன் உள்ள கோயில் கருவறையில் அருள்மிகு ஜெகந்நாதப் பெருமாள் ருக்மணி சத்யபாமாவும் பிருகு மார்க்கண்டேயருடன் கிழக்கு நோக்கிய சந்நிதியில் காட்சி அருளுகிறார். தனிக்கோயில் தாயார் திருமங்கைவல்லித்தாயார், லட்சுமி நரசிம்மர் ஆண்டாள், மணவாள மாமுனிகள் ஆகியோரின் தனிச் சந்நிதிகளோடு திருமழிசை ஆழ்வார்  தெற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.
 

மகா சம்ப்ரோக்ஷணத் திருக்குடமுழுக்கு: 
ஸ்ரீ மகா சம்ப்ரோக்ஷணம் விழா வரும் மார்ச் 19-ஆம் தேதி மாலை முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி இருபதாம் தேதி முதல் தினமும் இரண்டு காலங்கள் கடந்து இருபத்தி மூன்றாம் தேதி புதன்கிழமை காலை எட்டாம் காலம் பூஜை நடந்து ஜெகந்நாத பெருமாள் திருமழிசை ஆழ்வார் திருமங்கை வல்லித் தாயார் அழகியசிங்கர் கண்ணன் கருடாழ்வார் அனுமன் மணவாளமாமுனிகள் விமானங்களுக்கும் ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு விழா திவ்ய பிரபந்த சாற்று முறைகளோடு நடைபெற இருக்கிறது.

தொடர்புக்கு: 04426810542; 9840343535
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com