பொருநை போற்றுதும்! - 196

சிற்றாற்றின் கரையிலும் பொருநையின் கரையிலுமாக  உலவும்போது, நெல்லைப் பகுதி ஊர்கள் சிலவற்றின் பெயர்கள், கண்களையும் கருத்தையும் கவர்கின்றன.
பொருநை போற்றுதும்! - 196


சிற்றாற்றின் கரையிலும் பொருநையின் கரையிலுமாக உலவும்போது, நெல்லைப் பகுதி ஊர்கள் சிலவற்றின் பெயர்கள், கண்களையும் கருத்தையும் கவர்கின்றன.  இந்தப் பெயர்களுக்கு என்ன பொருள் என்று சிந்திக்கும்போதே, கால்டுவெல்பாதிரியாரும் ரா. பி. சேதுப்பிள்ளையும் ஐயங்களைத் தீர்த்து வைக்கிறார்கள். 

பழைய கால பிரிட்டிஷ் மற்றும் போர்த்துகீசியப் பதிவுகளில், கங்காதரம் என்றோர் ஊரின் பெயர் குறிக்கப்படுகிறது. கங்கை கொண்டானைத்தான் இப்படிக் குறித்தார்களாம். நெல்லிதங்கவில்லி  என்பது நெற்கட்டுஞ்செவ்வல். செவக்கேரி என்பது சிவகிரி.  ஊத்மலங்காடு என்பது ஊற்றுமலை என்றும்,சொரந்தா என்பது சுரண்டை என்றும் புரிந்து கொள்ளலாம். இந்த வகையில், வாசுதேவநல்லூர், வாஷின்எல்லூர் என்று கூட ஆகியிருந்திருக்கிறது. 

வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியவர்களின்பெயராலும், குறிப்பிட்ட பகுதியின் வளர்ச்சிக்கு  உதவியவர்களின் பெயராலும், ஊர்கள் வழங்குகின்றன. டோனாவூர்என்றோர் ஊர். இவ்வூரின் பழம்பெயர் புலியூர்க்குறிச்சி என்று ரா. பி. சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார். மேல்நாடுகளிலிருந்து வந்த கிறித்தவர்கள், இப்பகுதியில் தங்க முற்பட்டபோது, குறிச்சியின் நிலங்களைத் தேர்ந்தெடுத்தனராம். 

இந்த நிலங்களைக் கிரயப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான நன்கொடையை வழங்கியவர் ஜெர்மன் நாட்டவரான டோனா என்பார்.  இவரின் பெயரால், ஊரே டோனாவூர்  ஆகிவிட்டது.  இதேபோல, சாயர்புரப் பகுதியில் நில மனைகளை வாங்கியவர் போர்த்துகீசியரான சாயர் என்பார். இவரின் பெயரால் சாயர்புரம் உருவானது.

மலைப் பகுதியிலேயே பெரும்பாலும் பாய்வதால், சிற்றாற்றாளுக்குத் துணை ஆறுகளும் துணைத் துணை ஆறுகளும் நிறையவே உள்ளன.  ஐந்து துணையாறுகள்- முறையே தொடக்கத்திலிருந்து ஐந்தருவியாறு, ஹரிஹர ஆறு, அழுத கன்னியாறு, அனுமனாறு,  உப்போடை என்னும் கயத்தாறு ஆகியவை ஆகும்.

ஹரிஹர ஆற்றுக்கும் அனுமனாற்றுக்கும் துணையாறுகள் இருப்பதனால், துணைத் துணை ஆறுகளையும் சிற்றாற்றாள் பெறுகிறாள். 

இவளுடைய முதல் துணையாறு- ஐந்தருவி ஆறு. குற்றால ஊரிலிருந்து சற்று தொலைவு சென்றால் ஐந்தருவி என்றழைக்கப்படும் ஐந்தலையருவி காணப்படும்.  குற்றாலத்தைச் சுற்றியிருக்கும் காடு - மலைப் பகுதிகளில் நீரோடை ஒன்று தொடங்குகிறது. இதுவே,  ஐந்து வீழ்ச்சிகளாக இறங்குகிறது.

ஐந்து தலை நாகம் போல்  ஐந்து கிளைகளாக வீழ்வதால், ஐந்தலையருவி என்றும் ஐந்தருவி என்றும் பெயர் பெறுகிறது. கீழே விழுந்த ஐந்து கிளைகளின் நீரும் ஒன்றிணைந்து ஓடும்போது ஐந்தருவியாறு என்றழைக்கப்பட்டு, காசா மேஜர்புரம்  பகுதியில், சிற்றாற்றுடன் இணைகிறது. 

ஆற்றின் கலப்பு,  காட்டு வளம் ஆகியவை சேர்ந்ததால், காசாமேஜர்புரம் என்பது இப்போதெல்லாம் கஜமோட்சபுரம்என்றும்கூடஅழைக்கப்படுகிறது. 

அடுத்த துணையாறு, ஹரிஹர ஆறு. செங்கோட்டைக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்த நதி, செங்கோட்டையின் சுற்றுப்பகுதியில், முண்டன்கோயில் பகுதியில் புறப்பட்டு ஓடி வரும் குண்டாறு என்னும் துணை நதியைப் பெறுகிறது.  இதற்கு முன்னதாகவே மொட்டையாறு என்னும் நீரோடை, குண்டாற்றில் கலந்துவிடுகிறது. ஆக, மொட்டையாற்று நீரும் குண்டாற்று நீருமாகச் சேர்ந்து ஹரிஹர நதியில் கலக்க, தென்காசி நோக்கிப் பாயும் ஹரிஹரநதி, இங்கு சிற்றாற்றுடன் இணைகிறது. 

மத்தளம்பாறை மலைக் காடுகளிலிருந்து ஓடி வரும் அழுத கன்னியாறு, தென்காசி கடப்பாக்கொத்திப் பகுதியில் சிற்றாற்றுடன் கலக்கிறது.  பம்புளிப் பகுதியில் தோன்றும் அனுமனாறு, சொக்கம்பட்டியில் தோன்றிப் பாயும் கறுப்பாற்றுடன் கலந்து, வீர கேரளம்புதூரில் சிற்றாற்றுடன் சேர்கிறது. கயத்தாறு  என்னும்  உப்போடை,  கங்கைகொண்டானில் சிற்றாற்றை அடைகிறது. இப்படியாகத்தான்,சிற்றாற்றாளின் ஆற்று நிலவரங்கள் திகழ்கின்றன. 

பொருநைக்கரையில் கண்டதுபோலவே, சிற்றாற்றுக்கரைப் பகுதிகளிலும், பண்டைய தடயங்கள் பலவும் கிட்டுகின்றன.  அழுத கன்னியாற்றுப் பகுதிகளிலும் அனுமனாற்றுப் பகுதிகளிலும் பெருங்கற்காலப் பொருள்களும் குறுனிகற்காலப் பொருள்களும் கிட்டியுள்ளன. 

பெருங்கற்காலம் என்பது பெரிய பெரிய கல் பாறைகளையும் பதுக்கைகளையும் வைத்து அமைப்புகளை உருவாக்கிய காலம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பெருங்கற்காலம் என்பது கி.மு. 2000-லிருந்து கி.மு. 100 வரை இருந்திருக்கும்.  ஆதிச்சநல்லூர்,  கழுகுமலை போன்ற பகுதிகளில் செழித்த நாகரிகத்தின் அடையாளங்களும் காணப்படுவதால், ஆற்றங்கரைக் குடியிருப்புகள் வெகு காலத்துக்கு முன்னரே தொடங்கி,  காலப் போக்கில், மெல்ல மெல்லஉட்பகுதிகளுக்கும் மக்கள் புலம் பெயர்ந்தனர் எனக் கொள்ளலாம். 

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com