வழிகாட்டும் வள்ளல்! 

கங்கை வந்து நீராடும் சிறப்புப் பெற்றதால் காசிக்குச் சமமான தலங்களுள் மயிலாடுதுறையும் திகழ்கின்றது.
வழிகாட்டும் வள்ளல்! 

கங்கை வந்து நீராடும் சிறப்புப் பெற்றதால் காசிக்குச் சமமான தலங்களுள் மயிலாடுதுறையும் திகழ்கின்றது.  இங்கும் காசி விஸ்வநாதர், விசாலாட்சி கோயிலும் அமைந்திருக்கிறது.  துறை என்பது தீர்த்த விசேஷமுள்ள இடத்தைக் குறிக்கிறது.  இத்தலத்து காவிரித் துறையில் துலா நீராடுதல் மிகவும் சிறப்பானது. 

துலா என்றால் மாதங்களில் ஐப்பசி என்றும், எடைகோல் (தராசு)  என்றும் பெயர்.   இந்த மாதத்தில் இரவு நேரமும், பகல் நேரமும் சரிசமமாக இருக்கும். இங்குள்ள ரிஷப தீர்த்தக்கட்டத்தில் காவிரியின் நடுவில் உள்ள ஒரு மண்டபம் உத்தர, தக்ஷிண மாயூரங்களைப் பிரிக்கும் தராசின் முள் போல் உள்ளது. தட்சிண பாகத்தில் மயூரநாதர் கோயிலும், உத்தர பாகத்தில் மேதா தட்சிணாமூர்த்தி எனப்படும் வள்ளலார் கோயிலும் உள்ளன. 

மயிலாடுதுறையை நடுநாயகமாகக் கொண்டு, மயூரநாதசுவாமி கோயிலில் அனைத்தும் நல்கும் வள்ளலாகவும், அதன் நான்குபுறமும் நால்வகை வள்ளன்மை பூண்டு கிழக்கில் விளநகரிலும், மேற்கில் மூவலூரிலும், தெற்கில் பெருஞ்சேரியிலும், வடக்கில் உத்தர மாயூரத்திலும் இறைவன் கோயில் கொண்டு அருளுகின்றார். இதில் வள்ளலார் கோயிலில் குடி கொண்டருளும் இறைவனின் பெயர் ஸ்ரீவழிகாட்டும் வள்ளல் என்பதாகும்.  வடமொழியில் ஸ்ரீ வதான்யேஸ்வரர் என வழங்கப் பெறுவர். அம்மை பெயர் ஸ்ரீ ஞானாம்பிகை.

தல வரலாறு: ஒருசமயம் பார்வதி தேவி மயிலுருவு கொண்டு பூலோகத்தில் சிவபூஜை செய்யும் வைபவத்தைக் காண அனைத்து தெய்வங்களும் தங்கள் வாகனத்தில் வருவதற்கு முன் சிவனை சுமந்தபடி ரிஷபம் முந்திவிட்டது. இதன்பொருட்டு ரிஷப தேவர் எல்லாம் வல்ல இறைவனைத் தாங்கிவரும் புண்ணியமும், வன்மையும் தனக்கே உள்ளது எனக் கருதி சற்று செருக்குற்றார். 

இதனை அறிந்த பெருமான் ரிஷப தேவருக்கு ஞானம் கை வரச் செய்ய வேண்டும் எனத் தன் சடைமுடி ஒன்றின் முனையை ரிஷப தேவர் மேல் விழச் செய்தார். அதன் சுமையைத் தாங்க முடியாமல் ரிஷப தேவர் நிலத்துள் அழுந்தினார். தவறுணர்ந்து பெருமானை வேண்ட, அவர் மீது கருணை கொண்டு இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சொரூபம் கொண்டு தென்முகம் வீற்றிருந்து ஐப்பசி அமாவாசை நாளில் ரிஷப தேவருக்கு ஞானோபதேசம் செய்தருளினார். 

இதனை உணர்த்தும் நிலையில் இக்கோயிலிலுள்ள மேதா தட்சணாமூர்த்தி ரிஷபத்தின் மேல் எழுந்தருளியுள்ளார். சந்நிதியில் வேறு எங்கும் காண இயலாத, ரிஷபம் அவரை நோக்கியபடி விளங்குதலையும் தரிசிக்கலாம். இதனை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தனது மாயூரத் தல புராணத்தில் "குரு மூர்த்தியாக இருக்கும் நிலையிலும் வாகனமாக ஏற்று மகிழ்ந்தார்' என்று அழகாக குறிப்பிட்டுள்ளார். 

அகத்தியர் வழிபட்டு சிவஞானம் கைவரப் பெற்றார், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று  நதிகளும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து நீராடியதால் தங்களுக்கு ஏற்பட்ட பாவம் நீங்க இத்தலத்தில் வந்து உத்தர மாயூரத்திலுள்ள ஞான வள்ளலை வழிபட்டு பாவங்கள் நீங்கப் பெற்று புனிதத்துவம் அடைந்தனர்.  இதனை "காசியுறை கங்கைக்கும் விமோசனம் தரும் பொன்னி'  என்று காவிரியை மேன்மையான நதி என்கிறார் அகத்தியர்.  
கன்வமகரிஷி வழிபட்டு தன் வளர்ப்பு மகளான சகுந்தலைக்கு துர்வாச முனிவர் அளித்த சாபத்திலிருந்து விமோசனம் பெற்றார்.  சப்தமாதாக்கள், சாமுண்டி,  வியாழபகவான் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். 

தல சிறப்பு:  சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் அருளிய மாயூரத்திருத்தல கீர்த்தனைகளில் "வதான்யேச் வரம் பஜேஹம்' என்று தொடங்கும் கீர்த்தனை இக்கோயிலுக்கு உண்டானது. தருமையாதீனம் 10}ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி திருவருட்பா அருளியுள்ளார்கள்.

வழிபாட்டு பலன்: குரு அனுக்கிரஹ ஸ்தலமாக ஸ்ரீவள்ளலார் கோயில் விளங்கி வருகிறது. இத்தல தீர்த்தம் ஞானாமிர்தசரஸ் எனும் பஞ்சப்பிரம தீர்த்தமாகும். கார்த்திகை சோமவாரத்தில் நீராடி ஸ்ரீ வதான்யேசுவரரையும், ஸ்ரீ ஞானாம்
பிகையையும் வழிபட ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அருளால் பொன்னையும், மெய்பொருள்களையும் எய்துவர்.  24 பிரதக்ஷணம் செய்ய மனோபீஷ்டத்தை அடைகிறார்கள்.

துலா மஹோத்ஸவம்:  திருவிழா நவ.  7}ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  11} கோபுர தரிசனம், 13}  திருக்கல்யாணம், 15} திருத்தேர், 16} கடை முக தீர்த்தவாரி, 17 முடவன் முழுக்கு,  ஸ்ரீசந்திரசேகர் புறப்பாடு, காவிரியில் தீர்த்தம் தொடர்ந்து ஆலயத்தில் ப்ராயசித்த அபிஷேகம்.

துலாகட்ட வைபவத்தின் கடைசி நாளான  " கடை முழுக்கு வைபவம்' அன்று நீராடி,  கோயில்களில் வழிபட பாவங்கள் விலகி மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.

தொடர்புக்கு} 9787260539, 04364}242996. 

-எஸ்.வெங்கட்ராமன்  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com