பிணி தீர்க்கும் பிட்டாபுரத்தி அம்மன்

திருநெல்வேலி நகரில் அமர்ந்து அருள்பாலிக்கும் பிட்டாபுரத்தி அம்மனை பத்ரகாளி,
பிணி தீர்க்கும் பிட்டாபுரத்தி அம்மன்

திருநெல்வேலி நகரில் அமர்ந்து அருள்பாலிக்கும் பிட்டாபுரத்தி அம்மனை பத்ரகாளி, வடக்குவாய் செல்வி,  துர்கை, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி என்றும் அழைக்கின்றனர்.  அம்மன் நாடி வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கி வருகிறார்.  

கோயிலுக்குள் நுழைந்ததும் சிறிய பலி பீடமும், செப்புத்தகடால் ஆன கொடிமரமும், பெரிய பலிபீடமும் உள்ளன. வடக்கு முகமாக அனுக்ஞை விநாயகரும், வடமேற்கு மூலையில் கிழக்கு முகமாக அகோர விநாயகரும் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர்.  இதையடுத்து, மகா மண்டபம் உள்ளது. இங்கு நின்றுதான் அம்மனை வழிபட வேண்டும்.

இங்குள்ள அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக் கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு திருவடியின் கீழ் அரக்கனை வீழ்த்திய சொரூபத்துடன் அருள் பாலிக்கிறாள்.

அருகில் இரு பக்கமும் அஸ்திர தேவதையும், சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சி தருகின்றனர். இந்தக் கோயிலில் நடராஜர் செப்பு தகடும்,   விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில்,  ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன. முன் மண்டபத்தின் வட கிழக்கில் தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதியும், வடக்கு நோக்கிய கொலு மண்டபமும் உள்ளது.

முன் மண்டபத்தில் பல அம்மன்களின் ஓவியப் படங்கள் அழகாக காட்சித் தருகின்றன.  இவை தவிர வெளிப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கிய விநாயகர் சந்நிதி,  சுடலைமாட சுவாமி சந்நிதி ஆகியனவும்  அமையப் பெற்றுள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார்  6 அடி உயரம்,  5 அடி அகலத்தில் வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி (உத்குடிகாசனம்),  இடது காலை தொங்க விட்டு அமர்ந்த நிலையில் அருள்புரிகிறார். தசரா அன்று அம்மனுக்கு முழு சந்தனக்காப்பு சாத்துவர். கருவறைக்கு மேல் வைரம் பாய்ந்த உத்திரங்கள் வேய்ந்து அதன் மீது 3 செப்பு கலசத்துடன் சாலவிமானம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அம்மனுக்கு நடைபெறும் இரு நேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும்.  இந்த பிட்டை பல்லவராயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் கோயிலிலேயே தயார் செய்கின்றனர்.

அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் ஒப்பனையில் ஏற்படும் குறைகளைச் சரிசெய்ய மாட்டார்களாம். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளையும், பூக்களையும் அம்மனுக்கு அணிவிக்காமல் அம்மனின் திருவடியில் மட்டுமே சாத்துவர். 

இங்கு வைகாசி மாதம் திருவிழா நடைபெற்றப் பின்னரே, நெல்லையப்பர் கோயிலின் பிரசித்தி பெற்ற ஆனி திருவிழா தொடங்கும். "குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோயிலில் வேர்கட்டி மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணமடையும்.  

பிறந்த குழந்தையைக் கூட அழைத்து வந்து வேர் கட்டி வழிபடலாம்.  தினமும் காலை,  இரவுப் பூஜைகளின்போது மந்திரம் ஓதப்பட்ட புனித நீரானது சங்கில் வைத்து பக்தர்களின் மீது தெளிக்கப்படும். இதனால் சகல திருஷ்டிகளும், பீடைகளும், தீய சக்திகளும் நீங்கும்'  என்கின்றனர் பக்தர்கள். 

இங்கு வழிபட்டால் தடை நீங்கி திருமணம் நடைபெறும்,  குழந்தைப் பேறு கிடைக்கும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும்.  ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.

சுமார் 800 ஆண்டுகால பழைமை வாய்ந்த இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பிட்டாபுரத்தி அம்மன் குறித்து 18 பிரபந்தங்கள் உள்ளன. நெல்லை தலபுராணம், சீவலமாறன் கதை, வாத்தியமரபு நூல்கள் ஆகியவை இக்கோயில் குறித்து கூறுகின்றன.

தொடர்புக்கு.. 94429 30258.

சொக்கம்பட்டி வி.குமாரமுருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com