மூர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது!

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணம் அருகேயுள்ள அணைகட்டாபுத்தூர் என்ற கிராமத்தில்...
மூர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது!

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணம் அருகேயுள்ள அணைகட்டாபுத்தூர் என்ற கிராமத்தில் அருள்மிகு காமாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 

சென்னைக்கு வெளியே பழைய கூவம் ஆற்றின் கரையில் விளங்கும் கோயில்களில் ஒன்றாகும்.  கல்வெட்டு ஆய்வுகளின்படி சுமார் 1,100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலாகும்.
இவ்வூரின் பழைமையான வரலாற்றுப் பெயர் "அணைஅக்கரைபுதூர்'  என்றழைக்கப்பட்டது. பார்த்திபேந்திர சோழப் பேரரசரின் ஒன்பதாவது ஆட்சி ஆண்டு காலத்திலும்,  ஆதித்ய கரிகாலன் எனும் சோழ மன்னனின் காலத்திலும் பல நிவந்தங்கள் வழங்கப்பட்டு இக்கோயில் சீரோடும், சிறப்போடும் விளங்கியது என கல்வெட்டுகள் கூறுகின்றன.

தலபுராணப்படி, பிருகுமுனிவர், பார்கவன் (சுக்கிரன்) பார்கவி (ஸ்ரீ இலட்சுமி) ஆகிய மூவரும் வழிபட்டதாக செவிவழிச் செய்தியாக சொல்லப்படுகிறது. தலம், தீர்த்தம், மூர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புகள் கொண்டதாகும்.

இத்தலத்தில் தட்சிணாயணத்தில் புரட்டாசியிலும், உத்ராயணத்தில் பங்குனி மாதத்திலும் அம்பிகையை சூரியனின் கதிர்கள் பூஜிக்கின்றன. கிழக்கு நோக்கிய வாயில் கொண்ட கோயில் பலிபீடம், நந்தி மண்டபத்தில் உள்ள நந்தியப் பெருமான் வெளிப்புறத்தில் சாளரம் வழியாக ஈசனை வழிபடும் நிலையிலுள்ளது. கோயில் வாயிலினுள் நுழைந்தவுடன் அம்பிகை ஸ்ரீ காமாட்சி தரிசனம் நல்குகிறார். அடுத்து மஹாமண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் எம்பெருமான் ஏகாம்பரேஸ்வரர் வட்டவடிவ ஆவுடையாருடன் கிழக்கு நோக்கியவாறு பக்தர்களின் குறைகளை போக்கி கருணையோடு அருளுகின்றார். 

ஸ்ரீ விநாயகர் வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமண்யர்,  கோஷ்ட மூர்த்திகள்,  சண்டேஸ்வரர் பெருமான் தெற்கு நோக்கியும் வீற்றிருந்து அருளுகின்றனர். வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹாவிஷ்ணு தனி சந்நிதியில் அமைந்து அருளுகின்றார். நவகிரஹ சந்நிதியும் இக்கோயிலுள்ள அனைத்து மூர்த்தங்களுமே சிறிய திருமேனி கொண்டதாகும்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கிராமத்துக்கு கும்பகோணத்திலிருந்து குருபாத சுவாமிகள் என்பவர் வந்திருந்தார். எம்பெருமான் ஏகாம்பரேஸ்வரரை தரிசித்த மாத்திரத்தில் குருபாத சுவாமிகளை ஈர்த்து ஆட்கொண்டமையால் அங்கேயே தங்கி இறைத்தொண்டு செய்ததோடு பல அதிசயங்களையும் நிகழ்த்தியுள்ளார். அவரது அதிஷ்டானம் (சமாதி) ஆலயத்திலிருந்து மேற்கில் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது.

இவ்வூருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் திரெüபதி அம்மன் கோயில் சிவன் கோயிலுக்கு பின்புறம் மேற்கில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் விநாயகர் உள்ளே கருவறையில் வியாசர், சகாதேவர்,  நகுலர், பீமர், தர்மர் திரெüபதி அர்ச்சுனர்,  கிருஷ்ணர் அமைந்து அருளுகின்றனர். எதிரில் போத்திராஜரும், பலிபீடமும்  உள்ளன.

கோயிலிள்ள ஏகாம்பரேஸ்வரர் திருமணத் தடைகள் போக்கியும், மகப்பேறு பாக்கியத்தையும் நிலம் சம்பந்தமான வழக்குகள், நிலம் விற்பனையில் ஏற்படும் தடைகள் வயதான பெரியோர்கள் நலனில் அக்கறை காட்டாத பிள்ளைகளுக்கு ஏற்படும் பாபம் நீங்கவும் அருளுகின்றார்.

80 ஆண்டுகளுக்கு பிறகு.. :  கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 80 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பரம்பரை தர்மகர்த்தா அண்ணாமலை முதலியாரின் முயற்சியால்,  12 ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்வித்து திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. 

இதையடுத்து, ஜனவரி 27}ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  இதற்கான யாக சாலை பூஜைகள் ஜன. 23}இல் ஆரம்பமாகிறது.
பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும் பேருந்துகளில், மாரிமங்கலம் என்ற இடத்தில் இறங்கி 2 கி. மீ. தூரம் செல்லவேண்டும். பேருந்து தடம் எண். 591}இல் சென்று பேரம்பாக்கத்தில் இறங்கி ஷேர் ஆட்டோ மூலமும் செல்லலாம். 

தொடர்புக்கு : 97502 60484.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com