காவிய நாயகர் ராமர்...

காவிய நாயகர் ராமர்...

"ஒரு இல், ஒரு சொல், ஒரு வில்' என காவிய நாயகராக வாழ்ந்தவர் ராமர். "ராமர் வெற்றி பெற்று பாண்டிய நாட்டை வந்தடைந்து ஆலமரத்தடியில் அமர்ந்து மறைஞானப் பாடல்களை ஓதியபோது, அங்கிருந்த பறவைகள் எந்த ஒலியும் எழுப்பாமல் கேட்டன' என்ற குறிப்பு அகநானூற்றின் கடுவன், மள்ளனார் பாடலில் உள்ளது. "சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது கழற்றி வீசிய நகைகளை குரங்குகள் மாற்றி, மாற்றி அணிந்து

கொண்டன' என புறநானூற்றில் உவமையாகச்

சொல்லப்படுகிறது.

திருமாலின் ஏழாவது அவதாரமான ராமரின் பிறந்த நாளைக் கொண்டாடும் திருநாளான ஸ்ரீராம நவமி பங்குனியிலோ, சித்திரையிலோ தொடங்கி நடத்தப்படுகிறது.

வசந்த நவராத்திரியின் ஒரு பகுதியாகவும் வளர்பிறையில் ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் கொண்டாடப்படுகிறது. இது "சித்திரை மாத சுக்லபட்ச நவமி' என்றும் அழைக்கப்படுகிறது. ஒன்பதாம் நாளின் இறுதியில் சித்திரை}நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சித்திரை மாத வளர்பிறையான நவமி திதியில் புனர்பூச திருநட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீராமர். அயோத்தி மன்னர் தசரதருக்கும் கோசலைக்கும் நவமி திதியில் மூத்த மகனாக ராமனாக அவதரித்தார் திருமால். வசந்த நவராத்திரியின் ஒன்பது நாள்களும் "ராம நவராத்திரி' என சில இடங்களில் கொண்டாடப்படுகிறது.

ராமரின் கதையை விவரித்தல், ராமாயணத்தைச் சொல்லுதல், பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாடுதல்.. என்றவாறு கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தங்களது வீடுகளில் ராமரின் உருவங்களை அலங்கரித்து பாட்டுப் பாடியும் விரதம் இருந்தும் கொண்டாடுகின்றனர்.

ராமன் அவதரித்த அயோத்தியில் புனித சரயு நதியில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர். இதுதவிர, ராமனின் வாழ்வோடு தொடர்புடைய ராமேசுவரம் (தமிழ்நாடு), பத்ராச்சலம் ( தெலங்கானா) , சீதாமர்ஹி (பிகார்) உள்ளிட்ட இடங்களில் ரத யாத்திரைகளும் நடைபெறுகின்றன. ராமன்} சீதை திருமண விழாவாகவும் (கல்யாண உற்சவம்) கொண்டாடப்படுகிறது.

கர்நாடகத்தில் ஸ்ரீராமநவமி விழா இலவச பானகம், பிரசாதங்கள் வழங்கிக் கொண்டாடப்படுகிறது. பெங்களூரு, சாம்ராஜ்பேட்டை உள்ளிட்ட இடங்களில்

"ஸ்ரீராமசேவா மண்டலி' சார்பில் கர்நாடக இசை,

இந்துஸ்தானி இசை ஆகிய இரு முறைகளிலும்

ராமரைப் பற்றி பாடி இசையாஞ்சலி செலுத்தும் விழாக்கள் ஒரு மாதத்துக்கு நடைபெறும்.

ஆந்திரத்தில் உள்ள பத்ராச்சலத்தில் நடத்தப்படும் "கல்யாணம்" மிகவும் பிரபலமானதாகும். ஹரே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் கோயில்களிலும் ராம நவமி விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ஒடிஸô, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற கிழக்கிந்திய மாநிலங்களிலும், ஜெகந்நாதர் கோயில்களிலும், பிராந்திய வைணவ சமூகத்தினரும் ராம நவமியை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கோடையில் அவர்களின் வருடாந்திர ஜெகநாதர் ரத யாத்திரைக்கான தயாரிப்புகள் தொடங்கும் நாளாகவே இருக்கிறது.

டர்பன், டிரினிடாட், டொபாகோ, கயானா, சுரிநாம், ஜமைக்கா, பிற கரீபியன் நாடுகள், மொரீஷியஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணிபுரிந்து வந்த இந்தியர்களின் வழித்தோன்றல்கள் ராமாயணத்தை பாராயணம் செய்தும், தியாகராஜர், பத்ராச்சல ராமதாசர் பாடல்களைப் பாடியும் கொண்டாடி வருகின்றனர்.

அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்துடன் தொடர்புடைய பக்தர்கள் பகல் முழுவதும் விரதம் இருக்கின்றனர். பிஜி தீவில் உள்ள பக்தர்களும், வேறு நாடுகளில் குடிபெயர்ந்த பிஜி இந்து வம்சாவளியினரும் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தீமையின் மீதான நன்மையின் வெற்றியையும், அதர்மத்தை வென்று தர்மத்தை நிலைநாட்டுவதையும் குறிக்கும் வகையில் ராம நவமி விழாவின் முக்கியத்துவம் உள்ளது. சூரிய குல வழித்தோன்றல்கள் ராமரின் முன்னோர்கள் என்ற நம்பிக்கையினால் அதிகாலையில் சூரியனை வணங்குவதன் மூலம் ராம நவமி விழா கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராம நவமியை கடைசி நாளாகக் கொண்டு கொடியேற்றம் முதல் நடைபெறும் உற்சவம் "கர்ப்போற்சவம்' எனப்படுகிறது. ஸ்ரீராம நவமியில் தொடங்கி, அடுத்துவரும் நாள்களில் நடைபெறும் உற்சவம் "ஜனனோற்சவம்' என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப். 17}ஆம் தேதி ஸ்ரீராம நவமி நாளாகும்.

இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com