கண்ணனும் களப்பலியானவனும்...

கண்ணனும் களப்பலியானவனும்...

அர்ச்சுனனுக்கும், நாக வம்ச கன்னிகை உலூபிக்கும் பிறந்தவன் அரவான். சகல நற்குணங்களையும், "சகல சாமுத்ரிகா' உள்ளிட்ட அனைத்து லட்சணங்களையும் பொருந்தியவன். பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற களப்பலியாக முன்வந்த அரவான், தனது இரு ஆசைகளை நிறைவேற்ற பகவான் கிருஷ்ணரிடம் வேண்டினான்.

"பெண்ணை மணந்து ஒருநாளாவது திருமண வாழ்வை அனுபவிக்க வேண்டும்', "போரில் பலியானாலும் யுத்தம் முழுவதையும் காண வேண்டும் " என்ற வேண்டுதலை கண்ணனும் ஏற்றார். மறுநாள் மாயக் கண்ணனே மோகினியாக உருமாற இருவருக்கும் திருமணம் நடைபெற்று, அன்றிரவு இனிதே கழிந்தது.

அதற்கு அடுத்த நாள் அரவான் மனமகிழ்வோடு போர்க்களத்துக்குச் சென்றான். அங்கு தன் உடல் உறுப்புகளில் இருந்து சிறிது சிறிதாக தசைகளைக் கிழித்து காளிக்கு படைக்கத் தொடங்க, உடல் வலுவிழந்து மயங்கிய நிலையில் தரையில் விழுந்தது. திரெüபதியின் வேண்டுதலில் மகிழ்ந்த காளிதேவி தனது பலத்தில் நான்கில் ஒரு பகுதி பலத்தை அரவானுக்கு அளித்தாள். வலுப்பெற்ற அரவான் போரிடத் துவங்கினான்.

எட்டாம் நாள் போரில் அலம்பாசூரனால் தலை துண்டிக்கப்பட்டு, அரவானின் உயிர் பிரிந்தது. ஆனாலும், அவனது தலை குதித்து குதித்து போரில் எதிரிகளைக் கொன்று குவித்தது. இரண்டாவது வரம் நிறைவேற, தலையை பிடித்து அருகேயிருந்த மண்டபத்தில் நிலைநிறுத்தி "நீ என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து அருள்வாயாக?' என்று கண்ணன் அருளாசி வழங்கினார். போரில் அரவான் தலை துண்டிக்கப்பட்ட நாளிலிருந்து 16}ஆம் நாளின் இறுதியில் தெய்வநிலை அடைந்தான்.

குருஷேத்திரத்தில் இருந்த தலையை கிருஷ்ணர் கருடன் மூலம் சரபங்க நதியில் விடக் கூறினார். தலை நீரில் மிதந்து திருப்பதி வழியாக திருக்கோவிலூரை அடுத்த தென்பெண்ணை நதியை வந்தடைந்தது. தலை சந்திரகிரி சங்கம்புதூரை வந்தடைந்து குழந்தை வடிவம் பெற்றது. அந்தக் குழந்தையை சந்திரகிரி மன்னன் எடுத்து, தனது மகனாகவே வளர்ந்தான். "கூத்தாசூரன்' என்ற அசுரனை அரவான் அழித்து நாட்டையும், மக்களையும் காப்பாற்றி மீண்டும் பழைய துண்டுபட்ட தலையாக மாறினான்.

அழுதுகொண்டிருந்த சந்திரகிரி மன்னனிடம் அரவான் "ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெüர்ணமியன்று மக்கள் குறைகளைத் தீர்க்க, முழு உருவுடன் காட்சி தருவேன். அன்று கண்ணன் திருநங்கை வடிவில் வந்து என்னை மண முடிப்பார். அன்று என்னை வழிபடுவோருக்கு வேண்டிய வரமளிப்பேன்' என அருளினார்.

சந்திரகிரி மன்னனிடம் அரவான் " எனது இல்லற வாழ்வு கூத்தாக முடிந்தது. துண்டுபட்ட தலை போர்க்களத்தில் கூத்தாடி எதிரிகளை அழித்தது. மீண்டும், உன்மகனாய் உருவெடுத்து கூத்தாசூரனை அழித்தேன். "குடமாடி கூத்தன்' என்னும் திருமாலுடன் தொடர்புடையவன். அவரும் "கூத்தன். எனவே, என்னையும் "கூத்தன்' என்றே அழையுங்கள்' என்றான் அரவான்.

அரவான் குடிகொண்ட இடம் "கூத்தன்}அகம்' எனப் பெயர் பெற்று, மருவி "கூவாகம்' என அழைக்கப்படுகிறது. அரவான் "ஆண்டவர்' என அடைமொழியோடு "கூத்தாண்டவர்' என போற்றி வணங்கப்படுகிறார்.

பாரதப் போர் 18 நாள்கள் நடைபெற்றது. கூவாகத்தில் அரவான் திருவிழா சித்திரை பெüர்ணமிக்கு முன் 18 நாள்கள் கொடியேற்றத்தில் தொடங்கி, தர்மர் பட்டாபிஷேகத்துடன் நிறைவடைகிறது.

மகாபாரதத்தில் கண்ணன் அரவானை மணம்புரிந்த நாளில், நாடெங்கிலும் இருந்து திருநங்கைகள் கூவாகம் வந்து, கூத்தாண்டவருக்கு தாலி கட்டி ஆடியும், பாடியும், அன்றிரவு மகிழ்ந்திருப்பார்கள். கருவறையில் உள்ள அரவானின் சிரசுக்கு மறுவண்ணம் தீட்டி , கண் திறப்பர்.

நத்தம், கீரிமேடு, சிவிலியாங்குளம் தொட்டி கிராமங்களிலிருந்து முறையே மார்பு புஜம், குடை, திருத்தேர் அச்சாணி வர மறுநாள் தேர் அமைத்து தேரோட்டம் நடைபெறும். ஆடு

களம் நடக்கும் பந்தலடியில் திருத்தேரை நிறுத்தியவுடன் திருநங்கைகளின் மங்கலநாணை பூசாரி அறுக்க வெள்ளாடை உடுத்தி பாரம்பரிய முறைப்படி அழுது புலம்பி, காணிக்கைகளைச் செலுத்திவிட்டு அவரவர் ஊர் திரும்புகின்றனர்.

இந்த ஆண்டு ஏப். 9}இல் விழா தொடங்கியது. 23}இல்

திருநங்கைகள் திருத்தாலி கட்டிக் கொள்ளுதலும், 24}இல் திருத்தேர் விழாவும் நடைபெற உள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் } மடப்பட்டு பெரியசெவலையிலிருந்து தெற்கில் 4.5 கி.மீ. தொலைவில் கூவாகம் உள்ளது. இந்தக் கோயிலில் உற்சவரோ, மூலவரோ கிடையாது. கருவறையில் மர ஊஞ்சலில் அரவானின் தலை மட்டும் வைக்கப்பட்டுள்ளன. அரவானின் அதே தலை தேரில் வலம் வந்து முடிந்த பின்பு மீண்டும் கருவறை ஊஞ்சலில் வைக்கப்படும்.

விழா நாள்களில் கூத்தாண்டவரைத் தரிசனம் செய்வது

மங்கள நிகழ்ச்சிகளை குடும்பத்தில் ஏற்படுத்தும். சிறு வியாதிகள் பில்லி சூனியம் அண்டாது என்பதும் நம்பிக்கை.

விவரங்களுக்கு 9943073722.

இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com