மணாளனுக்கான மங்கையின் நோன்பு

விரதம் இருந்தால், திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரமும், திருமணமாகாத பெண்களுக்கு கூடிய விரைவிலேயே திருமண பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மணாளனுக்கான மங்கையின் நோன்பு

"கணவனே கண் கண்ட தெய்வம். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்...' போன்ற வழக்குகள் தமிழர் பண்பாட்டு வரலாற்றில் புழங்குகின்றன.

பாண்டவர்கள் வன வாசத்தில், கணவன் மீதான பக்திச் சிறப்பை மார்க்கண்டேய முனிவர் திரெüபதிக்கு எடுத்துரைத்தார். அதன்படி, மத்திர நாட்டு மன்னன் அசுவபதிக்கு சூரியன் அருளால் கிடைத்த மகள் சாவித்திரி. எதிரிகளிடம் சால்வ நாட்டை இழந்த துயுமத்சேனன் தன் மனைவி, மகன் சத்தியவானுடன் வனத்தில் வாழ்ந்து வந்தார். அங்கு வந்த சாவித்திரியோ, சத்தியவானைக் கண்டதும் காதல் வயப்பட்டாள். "தனது திருமணம் சத்தியவானுடன் நிகழ வேண்டும்' என சாவித்திரி தனது தந்தையிடம் கூறினாள். அங்கு வந்த நாரதர், "பன்னிரண்டு மாதங்களில் சத்தியவான் இறக்கப் போகிறான்' என்று கூறியும், சாவித்திரி தன் முடிவில் உறுதியாய் நின்றாள். திருமணமும் நடைபெற்றது.

சாவித்திரியும் அரண்மனையைவிட்டு சத்தியவானுடன் வனப் பகுதிக்குச் சென்று வாழ்ந்தாள். அவள் வனப் பகுதியில் கிடைத்த காராமணி, கார் அரிசியைக் கொண்டு காரடை செய்து நிவேதனம் செய்தாள். நாரதர் குறிப்பிட்ட நாளுக்கு மூன்று நாள்கள் முன்பே உணவும் உறக்கமும் இன்றி கடும் விரதம் மேற்கொண்டாள் சாவித்திரி. முந்தைய நாள் இரவு உறங்காமல் கண்ணீர் மல்க, கணவனின் நீண்ட வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தாள்.

அடுத்த நாள் வனப் பகுதியில் சாவித்திரியின் மடியில் தலை வைத்து சத்தியவான் உயிர் துறந்தான். பதிவிரதை மடியில் தலை வைத்து சத்தியவான் படுத்திருந்ததால் நெருங்க முடியாத நிலையை எம தூதர்கள் எமனிடம் தெரிவித்தனர். எமனே நேரில் வந்து சாவித்திரியைப் பார்த்து, உயிர் பிரிந்த உடலை விட்டுவிடவும், மரணம் மனிதனின் விதி என்ற தெளிவை உண்டாக்கி சத்தியவானின் உயிரை கொண்டு செல்லவும் கேட்டான். பல வாதங்களுக்குப் பின்னர், எமன் எடுத்துச் சென்ற உயிரோடு பின்தொடர்ந்து சென்ற சாவித்திரி எமலோகம் சென்றாள். அவளது காலடி ஓசை கேட்டுத் திரும்பிய எமனின் பாதங்களில் விழுந்து சாவித்திரி வேண்டினாள். சாவித்திரியின் பதிபக்தியைக் கண்டு பாராட்டிய எமன், "ஏதாவது ஒரு வரம் கேள்' என்றார்.

அதற்கு சாவித்திரி சாமர்த்தியமாக , "என் மாமனாரின் சந்ததி அழியாமல் இருக்கவும், அவருடைய அரசு சத்தியவானின் 100 மகன்களுக்கு கிடைக்கவும் வேண்டும்' என வரம் வேண்டினாள். அவளது சாதுர்யத்தையும் பதிபக்தியையும் மெச்சிய எமன், " உன் கற்பின் மகிமையால், கேட்டுப் பெற்ற வரங்கள் அனைத்தும் நிறைவேறும்' என்றான். சத்தியவானும் உயிர் பெற்றான்.

"உலகம் உள்ளளவும், உன்னை நினைத்து மாசியும் பங்குனியும் சேரும் சமயத்தில் விரதமிருப்பவர்களுக்கு உன் ஆசி கிட்டும். தீர்க்க சுமங்கலி பவ' எனவும் எமன் ஆசி கூறி அனுப்பினான். இந்த நாளே "காரடையான் நோன்பு' தினமாகும். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதமானது சாவித்திரி விரதம், கௌரி விரதம், காமாட்சி விரதம், மாங்கல்ய நோன்பு என பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. மாசி மாத கடைசி நாள் இரவு இறுதி நாழிகையில் தொடங்கி பங்குனி முதல் நாழிகையில் முடிப்பர்.

நோன்பை மேற்கொள்ளும்போது, பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும் வைத்து வழிபடுவார்கள். பெண்கள் நிவேதனத்தில் காரடை வைத்து, "உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்; ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்' என வேண்டி நோன்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.

பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது பெண்களுக்கு விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இதனை "மாசிச் சரடு பாசி படியும்' என்னும் பழமொழி உறுதி செய்யும்.

காரடையான் நோன்பு அடையை பிரார்த்தனையுடன் இறைவனுக்குப் படைக்கின்றனர். இந்த அடை, அரிசி மாவிலிருந்து இனிப்பு, காரமாவைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, நீராவியில் வேக வைத்து, உப்பு இல்லாத வெண்ணெய்யுடன் நிவேதனம் செய்து பரிமாறப்படுகிறது.

விரதம் இருந்தால், திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரமும், திருமணமாகாத பெண்களுக்கு கூடிய விரைவிலேயே திருமண பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு மார்ச் 14}இல் (வியாழக்கிழமை) காரடையான் நோன்பு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com