பிரம்மன் கண்ட சிவன் முடி

சிவனின் திருமுடியையும், திருவடியையும் காண பிரம்மனும், திருமாலும் சென்ற வேளையில், திருமுடியைக் கண்டதாக பிரம்மன் பொய் கூறினார்.
பிரம்மன் கண்ட சிவன் முடி

சிவனின் திருமுடியையும், திருவடியையும் காண பிரம்மனும், திருமாலும் சென்ற வேளையில், திருமுடியைக் கண்டதாக பிரம்மன் பொய் கூறினார். அதற்குத் தண்டனையாக பிரம்மன் மனித உருவில் பூசகர் குலத்தில் பிறந்து, பூஜைகள் செய்து சாப விமோசனம் பெறவேண்டும் என பிரம்மனுக்கு சிவன் சாபம் விதித்தார்.

அதன்படி, வழித்துணைநாதரை பூஜை செய்து வந்த சிவநாதன் } நயனா நந்தினி தம்பதிக்கு "சிவசர்மன்' என்ற மகனாக பிரம்மனே பிறந்தார். தன்னுடைய ஐந்தாம் வயதில் தந்தையை இழந்தார். சிவதீட்சை பெறாத சிவசர்மனின் பூஜை உரிமையை உறவினர்கள் பறித்துகொண்டனர்.

சிவசர்மனின் தாயார் சிவனிடம் வேண்ட, அவர் கனவில் தோன்றி மறுநாள் கோயிலின் வெளியே உள்ள பிரம்மத் தீர்த்தத்தில் மகனை நீராட்டிக் காத்திருக்கும்படியும் தாம் வழிகாட்டுவதாகவும் கூறினார். முறைமாறும் மறுநாள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை ஒரு முதியவர் உருவில் வந்த சிவனோ, சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து சிவதீட்சை செய்து பூஜை செய்யும் முறையை சொல்லித் தந்து மறைந்தார். சிவசருமனுக்கு லிங்கத்தின் உயரத்துக்கு பூஜை செய்ய முடியாத நிலையில், வழித்துணைநாதர் அதை ஏற்க தன் தலையை சாய்ந்து முடியைக் காட்டியதாக ஐதீகம்.

பிரம்மன் திருவண்ணாமலையில் காண முடியாத திருமுடியை இங்கு தரிசித்து, சாப விமோசனம் பெற்றார். "விரிஞ்சன்' எனப் பெயர் கொண்ட பிரம்மன் பூஜை செய்ததால் இந்த ஊர் "விரிஞ்சிபுரம்' என அழைக்கப்பட்டது.

இத்தலத்தின் அருகில் கர்நாடகம், ஆந்திரத்துக்கு வியாபாரத்துக்காகப் பொதி மூட்டைகள் ஏற்றிச் செல்வோர் தங்களின் சரக்குகள் கள்வர்களால் சூறையாடப்படாமல் நன்கு வியாபாரமானால் இறைவனுக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டிச் செல்லுவர். அதன்படி வழியெல்லாம் துணைக்கு வருபவராதலால் "வழித்துணை நாதர்' என வணங்கப்படுகிறார்.

வடமொழியில் மார்க்கபந்தீஸ்வர் என வணங்குவர். கருவறையில் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் காட்சி அருளுகிறார். மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியக் கதிர்கள் விழுந்து சுவாமியைத் தொட்டு வழிபடும் சூரிய பூஜை நடைபெறுகிறது.

இறைவி மரகதாம்பிகை, விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பைரவர், விஷ்ணு துர்கை, சரஸ்வதி, பிரம்மா, 63 நாயன்மார்கள் ஆகியோரும் அருளுகின்றனர்.

42 அடி உயர வானளாவிய திருமதிற்சுவர்கள், ஐந்து பிரகாரங்கள், இரட்டை அடுக்கு திருமாளிகை, பத்தி மண்டபங்கள், சிறந்த கலைநுட்பத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த வட, தென்பிரகார திருக்கல்யாண மண்டபங்கள், நூற்றுக்கால் மண்டபம், சிம்ம தீர்த்தம், பிரம்ம தீர்த்தங்களைக் கொண்டுள்ளன.

சிம்மக்குளத்தில் கார்த்திகை கடைசி ஞாயிறன்று பெண்கள் நீராடிய பின், ஈர ஆடையுடன் இறைவனை வணங்கி, மகா மண்டபத்தில் உறங்குவர். கனவில் பூக்கள், பழங்கள், புத்தாடைகள் போன்ற மங்கலப் பொருள்கள் தெரிந்தால், அந்தப் பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் பெற்று, நேர்த்தி கடன் செலுத்துவதற்காக, மூலவரின் பெயரையே குழந்தைக்கு சூட்டி, தம்பதிகள் கோயில் தல விருட்சமான பனை, பலா மரங்களில் தொட்டில் கட்டி, வசதிக்கேற்ப எடைக்கு எடை வேண்டிய காணிக்கை செலுத்துவதும், திருமணங்களை திருத்தலத்திலேயே நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

கோயிலில் உள்ள அதிசய பனைமரத்தில் பனங்காய்கள் ஓராண்டு கருப்பாகவும், அடுத்தாண்டு வெள்ளையாகவும் காய்க்கின்றன.

கி. பி. 1426} ஆம் ஆண்டு விஜயநகர அரசு கல்வெட்டின்படி "பிராமணர்களில் கன்னடியர், தெலுங்கர், தமிழர் முதலானோர் திருமணம் செய்யுமிடத்து பெறப்படும் வரதட்சனையை தடை செய்து, கன்னிகாதானம் செய்ய வேண்டும். பொன் வாங்கி பெண் கொடுப்பது, பொன் கொடுத்து திருமணம் செய்வது அரசத் துரோகமாகும். மீறுவோர் சாதியிலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் விலக்கி வைக்கப்படுவர்' என்று உள்ளது.

கோயிலின் உள்ளே தென்புறத்தில் உள்ள நேரம் காட்டும் கல்லில், மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழி ஒரு குச்சியை நீட்டினால், எந்த நேரமோ அதற்கு நேராக குச்சியின் நிழல் விழுந்து நேரம் காட்டும் .

பல சிறப்புகள் உடைய விரிஞ்சிபுரம் அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரருக்கு இந்த ஆண்டு பிரம்மோற்சவம் மார்ச் 15}இல் தொடங்கி, 25}இல் நிறைவடைகிறது.

வேலூர் மாநகரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் விரிஞ்சிபுரம் உள்ளது. வேலூர், ஆம்பூர், குடியாத்தம் பகுதிகளில் இருந்து பயணித்து, செதுவாலையில் இருந்து உள்புறமாகச் செல்ல வேண்டும்.

தொடர்புக்கு: 80720 16296.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com