தேவி தவம் இயற்றிய தலம் 

இந்து சமய நம்பிக்கையின்படி,  ஓராண்டு என்பது தேவர்களின் ஒருநாள். ஆறு மாதம் பகல் உத்தராயணம் எனவும், ஆறு மாதம் இரவு தட்சிணாயணம் எனவும் அழைக்கப்படுகிறது.
தேவி தவம் இயற்றிய தலம் 

இந்து சமய நம்பிக்கையின்படி,  ஓராண்டு என்பது தேவர்களின் ஒருநாள். ஆறு மாதம் பகல் உத்தராயணம் எனவும், ஆறு மாதம் இரவு தட்சிணாயணம் எனவும் அழைக்கப்படுகிறது.

அதாவது, சூரியனின் வட திசைப் பயணம்,  தென்திசைப் பயணமாகும். இந்தப் பயணங்களில் வரும் தை, ஆடி அமாவாசைகள் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றன.

திருவள்ளுவரின் வாக்குக்கிணங்க, தென்புலத்தார், தெய்வம், விருந்தினர்கள், உறவினர்கள், தனது குடும்பம் என ஐந்தையும் ஓர் இல்லறத்தான் கவனிக்க வேண்டும். எனவே,  தமிழர் மரபுப்படி முதலில் தென்புலத்தார் எனப்
படும் பித்ருக்களை வழிபாடு செய்வதன் மூலம் நமது பரம்பரையினர் செழித்து வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.  

குறிப்பாக,  கிராமப்புறங்களில் ஆடி, தை அமாவாசைகளில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுவது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஒருநாள் கயிலையில் இறைவனும், இறைவியும் தனித்து இருக்கும்போது இறைவி, ஈசனின் கண்களை விளையாட்டாகப் பொத்தி விடுகிறாள். உடனே உலகம் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. அதனால் பிரளயம், பூகம்பம், புயல், மழை உருவாகிறது.  பயந்து கைகளை எடுத்த தேவியைப் பார்த்து ஈசன் கடும் கோபம் கொண்டார். 

"உலக மாறுபாட்டுக்குக் காரணமான நீ என்னை விட்டுப் பிரிந்து இருப்பாய்' என சாபமிட்டார். தேவியும் கண்ணீர் மல்க பிழை பொறுக்க வேண்டி நின்றாள்.  ஈசனும், "தேவி! நீ பூலோகத்தில் உள்ள சிறு மருதவனம் சென்று தவம் செய்வாயாக!  உரிய காலம் வரும்போது உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்' என அருளினார். 

தேவியும் சிறு மருதவனத்தில் தவம் செய்தாள். அந்த நேரத்தில் சண்டாசுரன் என்னும் அரக்கனின் கொடுமை அதிகரிக்கவே தேவர்கள் அனைவரும் ஈசனிடம் முறையிட்டனர்.  ஈசனும் சிறு மருதவனத்தில் தவம் இயற்றும் தேவியிடம் சென்று முறையிட்டால் துயர் தீரும் என ஆலோசனை கூறினார். 

தேவர்கள் வந்து தங்கி இருந்த இடம் தேவகோட்டை என அழைக்கப் பெற்றது. அருகில் உள்ள சிறு மருதவனத்தில்  (சிறுமருதூர் என்ற பெயரில் ஊர் உள்ளது) தேவர்கள், தேவியைக் கண்டு ஆனந்தத்தில்,  "தேவியை கண்டோம்! தேவியை கண்டோம்' என கோஷம் எழுப்பினர். இதனால் இந்தத் தலம் "கண்டதேவி'  எனவும்  அழைக்கப் பெற்றது. 

தேவியும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீ குங்குமக் காளியாக மாறி, சண்டாசுரனை வதம் செய்து தேவர்களின் குறைகளைத் தீர்த்தாள். பின்னர் தவம் பூர்த்தியாகி,  பெரிய நாயகி எனும் திருநாமத்துடன் ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரரை மணந்தாள்.

பெரும் வரலாற்றுச் செய்திகளுடன் இணைந்துள்ள இந்தக் கோயில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உள்பட்டதாகும்.  பஞ்சகாலத்தில் இறைவனிடம் பக்தர்கள் பஞ்சம் தீர்த்திட பிரார்த்தனை செய்தபோது,  இறைவன் இங்கே பொன் மழை பொழிந்து அருளியதாக  வரலாறு உள்ளது. இதற்குச் சான்றாக அருகில் உள்ள கிராமத்தின் பெயர் "செம்பொன்மாரி'  என அழைக்கப் பெறுகிறது.  தமிழகத்திலேயே மிகப் பிரம்மாண்டமான தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்ம தேவர் விக்கிரகங்கள் இங்கு உள்ளன. 

இங்கு பிரம்மோற்சவத்தில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தைத் தரிசிப்போருக்கு திருமணம் விரைவில் கூடும் என்பது நம்பிக்கை.  பொன்மாரி பொழிந்ததால் திங்கள்கிழமைகளில் இங்கு ஈசனுக்கும், அம்பிகைக்கும்  அர்ச்சனை செய்து வழிபட்டால் பொருளாதாரச் சிக்கல்கள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பதும் நம்பிக்கை. 

இந்தக் கோயிலின் பின்புறம் 12 படித் துறைகள் கொண்ட பிரம்மாண்டமான தீர்த்தக் குளம் உள்ளது. ஜடாயு தீர்த்தம் என்ற சிறப்புடன் திகழும் இந்தத் திருக்குளம் கங்கைக்கு சமமாகக் கருதப்படுகிறது. 12 ராசிகளுக்கும் 12 படித் துறைகள் என்பதால், "ராசி தீர்த்தம்' எனவும் பெயர் பெற்றது. ஆடி, தை அமாவாசைகளில் மக்கள் பெருந்திரளாக இங்கு குளித்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு பயன்பெறுகின்றனர். 

அம்பிகையை தேவர்கள் தரிசனம் செய்த கண்டதேவி கோயிலையும்,  தீர்த்தக் குளத்தையும் தை அமாவாசை நாளில் (பிப். 9) தரிசித்து சகல நன்மைகளைப் பெறலாம். தேவக்கோட்டை - காரைக்குடி - ஆறாவயல் மார்க்கத்தில் 3 கி.மீ. தூரத்தில் இந்தத் தலம் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com