அருள்தரும் கோட்டைக் கருப்பர்

பாண்டிய நாட்டு பதினான் தலங்களுள் ஒன்றான திருப்புத்தூர் தலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.
அருள்தரும் கோட்டைக் கருப்பர்

பாண்டிய நாட்டு பதினான் தலங்களுள் ஒன்றான திருப்புத்தூர் தலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் அன்னை மகாலட்சுமி இறைவனை பூஜை செய்ததால்,  இத்தலத்துக்கு "ஸ்ரீதளி'  என்ற பெயர் ஏற்பட்டது. 

இறைவன் திருத்தளிநாதருக்கும்,  இறைவி  சிவகாமி அம்மனுக்கும்  நடுவில் உள்ள சந்நிதியில் ஸ்ரீயோக பைரவர் அரசாட்சி செய்கின்றார்.  சிறப்புமிக்க எம்பெருமானை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களால் போற்றித் துதித்துள்ளனர்.  கோயில் அருகே உள்ள திருக்குளத்துக்கு "ஸ்ரீதளி ஊருணி'  என்றே பெயராகும்.

கோயிலின் கிழக்கில்தான் ஸ்ரீகோட்டைக்கருப்பர் சுவாமி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. கோயில் முன்பாக சாம்பான் ஊருணி (ஜாம்பவான் ஊரணி)  உள்ளது. இதன் பழமையைப் பெயரிலேயே அறியலாம்.  சிவாலயத்தையும் சிவனடியார்களையும் காக்கின்ற மூர்த்தியாக,  கோட்டைக்கருப்பர் அருள்பாலிக்கிறார்.

மாறன் சடையவர்மன் காலத்து கல்வெட்டின் அடிப்படையில் இங்கே ஒரு பெரிய பழைய உறங்காப் புளிய மரம் கோயிலின் தென்புறம் உள்ளது. முற்காலத்தில் இங்கேதான் ஊர்ப் பொதுசபை கூடுவது வழக்கம் என செவிவழிச் செய்திகள் உள்ளன.  கோட்டை போன்ற சுற்றுச் சுவர் உள்ள கோயிலின் முகப்பில் தேவகோட்டை நகரத்தார்களால் கட்டப் பெற்றுள்ள இருசேமங் குதிரைகள் நம்மை கம்பீரமாக வரவேற்கின்றன. 

மகா மண்டபத்தின் முன்பாக பலி பீடம் இருக்கிறது.  ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப் பெருமான் இருபுறமும் அழகுற அருள் சேர்க்கின்றனர். கிழக்கு நோக்கிய கருவறையில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் பெரும் கீர்த்திகொண்ட கோட்டைக்கருப்பர் சிறிய உருவத்தில் அருள்பாலிக்கிறார். அவருக்கு வலப்புறம் பெரிய கருப்பரும், இடப்புறம் சிறிய கருப்பரும் அருள்பாலிக்கின்றனர்.

தென்மேற்கு மூலையில் ஸ்ரீசங்கிலிக்கருப்பர் வீற்றிருக்கிறார். அடியவர்களைக் காத்திட கோட்டைக்கருப்பரின் ஆணை கேட்டு ஓடிவந்து உதவ எப்போதும் தயாராக இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கருவறையின் முகப்பில் வடக்கு நோக்கி ஆலயத் திருப்பணி செய்த தேவகோட்டை சின்னவடுகன் செட்டியாரின் திருவுருவச் சிலை உள்ளது. தென் மேற்கில் பூசாரிகளின் முன்னோர்களான ராக்கப்பன், வடுகநாதன் ஆகியோரின் சிலைகள் உள்ளன. அதன் அருகே வைத்திலிங்கத் தொண்டைமான் என்பவரது பெரிய சிலை உள்ளது. அவரது வாரிசுதாரர்கள் இன்றும் வழிபாடு செய்து வருகின்றனர்.

தென்சுற்றுப் பகுதியில் ஸ்ரீபத்ரகாளி அம்மன், ஸ்ரீராக்கச்சி அம்மன், ஸ்ரீபேச்சி அம்மன் அருள்பொழிகின்றனர். வடக்கு பிரகாரத்தில் சித்தர்கள், நாகநாதர், ராக்கச்சியின் பணிப்பெண் ஆகியோர் தனித்தனியே சந்நிதியைக் கொண்டுள்ளனர்.

கோயில் பெரும்பாலும் குலதெய்வ பக்தர்கள் வழிபடும் ஆலயமாகவே விளங்குகிறது. குலதெய்வ வழிபாடு மிகச்சிறந்ததாகக் கூறப்படுவதன் காரணம் நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக நமக்காகவும், நமது சந்ததிக்காகவும் வழிபாடு செய்துள்ளனர்.  எனவே முன்னோர்கள் நல்லெண்ண மூச்சுக்காற்று அங்கே உலவுவதால் அது மேலும் நமக்கு நன்மை சேர்க்கிறது.

கீழச்சிவற்பட்டி, குருவிக்கொண்டான்பட்டி, குழிபிறை, சொக்கநாதபுரம், தேவகோட்டை, நாட்டரசன்கோட்டை, பனையபட்டி, மிதிலைப்பட்டி, விராமதி ஆகிய ஊர்களின் நகரத்தார்களின் குலதெய்வக் கோயிலாகும். தேவகோட்டை நகரத்தார்கள் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளியில் வழிபாடு செய்கின்றனர். தென்மாப்பட்டு, கருத்தன்பட்டி யாதவ சமூகத்தினருக்கும் இது குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது.

சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை சேந்தன் பூஜையும், ஆடிமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை இருநாள் சிறப்பு வழிபாடுகளும் ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடுகளாகும். இதில் சிறப்பாக கோட்டைக் கருப்பருக்கு வேட்டைத் தலைப்பாகை சாத்தும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இதனை தரிசனம் செய்வோர்க்கு எல்லா வளங்களும் கைகூடி வருகின்றது.

சிறப்புமிக்க ஸ்ரீகோட்டைக்கருப்பர் கோயில் திருப்பணிகள்  நடைபெற்று வருகின்றன.  வரும் பிப். 21 (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com