பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு பாகிஸ்தான்: மோடி மறைமுக தாக்கு

இந்தியாவின் அருகில் உள்ள ஒரு நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருவதாக ஆசியான் மாநாட்டில் பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் தலைநகர் வியன்டியானில் வியாழக்கிழமை நடைபெற்ற 14-ஆவது ஆசியான் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து கைகுலுக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் தலைநகர் வியன்டியானில் வியாழக்கிழமை நடைபெற்ற 14-ஆவது ஆசியான் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து கைகுலுக்கும் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியாவின் அருகில் உள்ள ஒரு நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருவதாக ஆசியான் மாநாட்டில் பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.
இதே கருத்தை கிழக்கு ஆசிய மாநாட்டிலும் அவர் கூறினார்.
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸாக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அந்நாட்டின் தலைநகர் வியன்டியானில் வியாழக்கிழமை நடைபெற்ற 14-ஆவது தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
கிழக்கு ஆசிய மாநாட்டில் அவர் பேசியதாவது:
இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள ஒரு நாடு, பயங்கரவாதத்தை உருவாக்கி, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் அமைதி குறைந்து, வன்முறை அதிகரிக்கிறது. பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து, அவற்றை ஏற்றுமதி செய்யும் தேசத்தைத் தனிமைப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து நாம் செயல்படக் கூடாது. மாறாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாட்டையும் தனிமைப்படுத்த வேண்டும்.
பயங்கரவாத ஏற்றுமதி, சர்வதேச சமூகத்தின் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உலகின் பன்முகத்தன்மைக்கு பெரும் சவாலாக விளங்கும் பயங்கரவாதத்தை ஒடுக்க முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியபோது, இந்தியாவின் அண்டை நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதால், பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கவலை தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த மாநாடுகளில் பங்கேற்ற சீனப் பிரதமர் லீ கெகியாங், ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வெதேவ் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்த மாநாடுகளில் சீனா, ஜப்பான், நியூஸிலாந்து, ரஷியா, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சீனாவின் ஹாங்ஸா நகரில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்எஸ்ஜியில் இந்தியா:

ஒபாமா உறுதி லாவோஸில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு உதவுவோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, மோடியிடம் உறுதி அளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது, இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை வலுப்படுத்துவது, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து வரும் நவம்பர் மாதத்துடன் ஒபாமா ஓய்வு பெற உள்ளதால், அவருடன் மோடி சந்திப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com