மீண்டும் பிஎம்எல்-என் தலைவராகிறார் நவாஸ்?

தகுதியிழப்பு செய்யப்பட்டவர்கள் கட்சித் தலைமையை வகிக்க வழி செய்யும் புதிய சட்டத்தை இயற்ற பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதையடுத்து

தகுதியிழப்பு செய்யப்பட்டவர்கள் கட்சித் தலைமையை வகிக்க வழி செய்யும் புதிய சட்டத்தை இயற்ற பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீண்டும் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பனாமா ஆவண ஊழல் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷெரீஃபை கடந்த ஜூலை மாதம் 28}ஆம் தேதி தகுதி நீக்கம் செய்ததையடுத்து பிரதமர் பதவியையும், பிஎம்எல்}என் கட்சியின் தலைவர் பதவியையும் அவர் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் தவிர, வேறு யார் வேண்டுமானாலும், எந்த நிலையிலும் ஒரு கட்சியின் தலைவராக இருக்கலாம் என்று தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையில் இந்த மாதம் 22}ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து, அந்த மசோத நாடாளுமன்றக் கீழவையில் வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் முஷாஹிதுல்லா கான் தெரிவித்தார்.
மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் கட்சித் தலைமையை வகிக்க வகை செய்யும் திருத்தத்தை கட்சி விதிகளில் மேற்கொள்வதற்காக, கட்சி பொதுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். கீழவையில் பிஎம்எல்}என் கட்சிக்குப் பெரும்பான்மை இருப்பதால், அந்த மசோதா எளிதில் நிறைவேறிவிடும் என்று கூறப்படுகிறது. இரு அவைகளிலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அது அதிபர் மம்னூன் ஹுசைனின் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்படும்.
நாட்டின் பிரதமராகவோ, நாடாளுமன்ற மற்றும் சட்டப் பேரவை உறுப்பினராகவோ பதவி வகிக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், தனக்கு மிகவும் வேண்டிய பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை நியமித்து ஆட்சியிலும், கட்சியிலும் நவாஸ் ஷெரீஃப் மறைமுக ஆட்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், கட்சியின் தலைமைப் பொறுப்பை அவருக்கு நேரடியாக வழங்க வகை செய்யும் புதிய சட்டத்தை அரசு இயற்றவுள்ளது.
எனினும், இந்தப் புதிய சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com