வங்கதேசம்: கலீதாவின் மகன் தாரிக் பிஎன்பி கட்சித் தலைவராக அறிவிப்பு

ஊழல் வழக்கில் கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்று, தலைமறைவாகவுள்ள வங்கதேச முன்னாள் அதிபர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக்

ஊழல் வழக்கில் கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்று, தலைமறைவாகவுள்ள வங்கதேச முன்னாள் அதிபர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (53), முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) இடைக்காலத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிஎன்பி கட்சியின் பொதுச் செயலர் ரெளல் கபீர் ரிஸ்வி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ""நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் கலிதா ஜியா சிறை சென்றுள்ளதால், கட்சியின் இடைக்காலத் தலைவராக தற்போதைய துணைத் தலைவர் தாரிக் ரஹ்மான் நியமிக்கப்படுகிறார்'' என்று அறிவித்தார். "ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை'க்காக வெளிநாடுகளிலிருந்து 2.52 லட்சம் டாலரை (சுமார் ரூ.1.6 கோடி) முறைகேடாகப் பெற்றதாக, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (72), அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவிலுள்ள அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
கலிதா ஜியாவின் கணவரும், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் மற்றும் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயரிடப்பட்ட அந்த அறக்கட்டளை, ஏட்டளவில் மட்டுமே இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
அந்தத் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் கலீதா ஜியாவுக்கு 5 ஆண்டுகளும், தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 5 பேருக்கு 10 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து, கலீதா ஜியா டாக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கலீதா ஜியா வகித்த பிஎன்பி கட்சித் தலைமைப் பதவிக்கு தாரிக் ரஹ்மானின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com