இலங்கை நாடாளுமன்றத்தில் அமளி; எம்.பி.க்களிடையே கைகலப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில், அதிபர் சிறீசேனா, பிரதமர் ராஜபட்ச ஆகியோருக்கு ஆதரவான எம்.பி.க்கள் வியாழக்கிழமை அவைத்தலைவரை முற்றுகையிட்டனர்.
நாடாளுமன்றத்தில், ராஜபட்சவின் பேச்சு குறித்து வாக்கெடுப்பு நடத்த அனுமதித்ததால், அவைத்தலைவர் கரு ஜெயசூர்யாவை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்யும், ஆளும்கட்சி எம்.பி.க்கள்
நாடாளுமன்றத்தில், ராஜபட்சவின் பேச்சு குறித்து வாக்கெடுப்பு நடத்த அனுமதித்ததால், அவைத்தலைவர் கரு ஜெயசூர்யாவை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்யும், ஆளும்கட்சி எம்.பி.க்கள்


இலங்கை நாடாளுமன்றத்தில், அதிபர் சிறீசேனா, பிரதமர் ராஜபட்ச ஆகியோருக்கு ஆதரவான எம்.பி.க்கள் வியாழக்கிழமை அவைத்தலைவரை முற்றுகையிட்டனர். இதையடுத்து ஏற்பட்ட அமளியில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. 
அவைத்தலைவரை நோக்கி சில எம்.பி.க்கள் குப்பை வாளி, புத்தகம், காகிதங்கள் உள்ளிட்டவற்றை வீசியெறிந்ததாகவும், அவரது மைக்கை உடைத்ததாகவும், சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகையின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ராஜபட்ச வலியுறுத்தினார். அந்தக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு அவைத்தலைவர் அனுமதியளித்ததையடுத்து அவையில் கூச்சல், குழப்பமும், அதைத்தொடர்ந்து மோதலும் ஏற்பட்டது.
இந்த குழப்பம் அரை மணி நேரம் நீடித்தது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. அதே சமயம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திய பின், நாடாளுமன்றத்தை வெள்ளிக்கிழமை மீண்டும் கூட்டுவதற்கு அவைத்தலைவர் திட்டமிட்டுள்ளார்.
இலங்கையில் பிரதமராக இருந்த, ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்கவை, கடந்த மாதம் 26-ஆம் தேதி அப்பதவியில் இருந்து நீக்கினார் அதிபர் மைத்ரிபால சிறீசேனா. பின்னர், ராஜபட்சவை புதிய பிரதமராக சிறீசேனா நியமித்ததன் அடிப்படையில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, 225 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், பெரும்பான்மைக்கு தேவையான 113 எம்.பி.க்களின் ஆதரவை திரட்டுவதற்கு ராஜபட்ச மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இதையடுத்து, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தரவிட்டார் சிறீசேனா. ஜனவரி 5-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் இலங்கை உச்சநீதிமன்றத்தை அணுகினர். அப்போது, அதிபரின் உத்தரவுகளுக்கு டிசம்பர் 7-ஆம் தேதி வரையில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதன் அடிப்படையில், இலங்கை நாடாளுமன்றத்தை, அவைத்தலைவர் கரு ஜெயசூர்யா புதன்கிழமை கூட்டினார். அப்போது ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை 122 எம்.பி.க்கள் ஆதரித்ததாக கரு ஜெயசூர்யா அறிவித்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில், விதிமுறைகள் முறைப்படி கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், எனவே அதனை ஏற்க முடியாது என்றும் ராஜபட்ச ஆதரவு எம்.பி.க்கள் கூறி வந்தனர்.
ராஜபட்ச பேச்சும், மோதலும்: இத்தகைய சூழலில், இலங்கை நாடாளுமன்றம் வியாழக்கிழமை மீண்டும் கூடியது. அந்த சமயத்தில், எம்.பி. என்ற வகையில் ராஜபட்ச பேசுவதற்கு அவைத்தலைவர் அனுமதியளித்தார்.
அப்போது, நான் அதிபராகவும் இருந்திருக்கிறேன். பிரதமராகவும் இருந்திருக்கிறேன். ஆகவே, பிரதமர் பதவி என்பது எனக்கு முக்கியமல்ல. நாட்டில் புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நான் முன்வைக்கும் யோசனைக்கு 225 எம்.பி.க்களும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் நடத்தப்படுவது மட்டுமே தற்போதைய குழப்பங்களுக்கு தீர்வாக அமையும் என்றார் ராஜபட்ச.
அவரது கோரிக்கை மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியது. இதையடுத்து, உறுப்பினர்களை நோக்கி வாக்கெடுப்பை விரும்புகிறீர்களா என அவைத்தலைவர் கேள்வி எழுப்பியதும், பெரும்பாலானவர்கள் ஆம் என்று பதில் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, ராஜபட்ச ஆதரவு எம்.பி.க்கள் உடனடியாக அவைத்தலைவர் கரு ஜெயசூர்யாவை முற்றுகையிட்டனர். அவர்களிடம், அவைத்தலைவர் நான்தான்; நானே முடிவெடுப்பேன் என்றார் அவர்.
இருப்பினும், அவைத்தலைவரின் இருக்கையை நோக்கி, எம்.பி.க்கள் சிலர் பொருள்களை வீசியெறியத் தொடங்கினர். இதனால், அவைத்தலைவருக்கு எதுவும் நேராத வகையில், ஐக்கிய தேசிய எம்.பி.க்கள், அவரைச் சுற்றி பாதுகாப்பு அரண் போல சூழ்ந்து கொண்டனர்.
அதே சமயம், இருதரப்பு எம்.பி.க்களுக்கு இடையே நடந்த மோதலால், எம்.பி. ஒருவர் ரத்தக் காயத்துடன் அவையை விட்டு வெளியேறியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரதமராக ராஜபட்ச தொடருவார்


இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதாகவும், ராஜபட்சவே பிரதமராக தொடருவார் என்றும் அதிபர் சிறீசேனா தெரிவித்துள்ளார். 
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவைத்தலைவர் கரு ஜெயசூர்யா அதிகாரப்பூர்வமாக அதிபர் சிறீசேனாவுக்கு எழுதிய கடிதத்துக்கு, சிறீசேனா இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்க வேண்டிய அவசியமில்லை. ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்துவதில் நாடாளுமன்றத்துக்கான சட்டங்களையும், விதிமுறைகளையும் அவைத்தலைவர் மீறியிருக்கிறார். ஒரு அதிபராக பிரதமரை நியமிக்கும் முழு அதிகாரம் எனக்கு உண்டு என தெரிவித்துள்ளார் சிறீசேனா.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com