அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதம்: ஈரான் சாடல்

தங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், அந்த நாட்டின் பொருளாதார பயங்கரவாதச் செயல் என்று ஈரான் சாடியுள்ளது.

தங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், அந்த நாட்டின் பொருளாதார பயங்கரவாதச் செயல் என்று ஈரான் சாடியுள்ளது.
 இதுகுறித்து, பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக தலைநகர் டெஹ்ரானில் சனிக்கிழமை நடைபெற்ற 6 நாடுகள் மாநாட்டில் அதிபர் ஹஸன் ரெüஹானி பேசியதாவது:
 ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நியாயமற்றதும், சட்டத்துக்குப் புறம்பானதும் ஆகும்.
 இந்தத் தடைகளை விதித்ததன் மூலம், அமெரிக்கா பொருளாதார பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள இந்தப் பொருளாதாரத் தடையால், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஈரானின் திறன் பாதிக்கப்படும்.
 இதன் காரணமாக, பல்வேறு நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக ஈரான் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஈரானுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அந்த நடவடிக்கைகளையும் திறம்பட மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக, போதைப் பொருள் கடத்தல் குற்றங்கள் அதிகரிக்கும் என்றார் ரெüஹானி.
 இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், துருக்கி, சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் பங்கேற்றனர்.
 தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன.
 ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், ஈரானை அணு ஆயுதங்கள் தயாரிக்காமல் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்று டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வந்தார்.
 இந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக டிரம்ப் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
 இதற்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளான ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 இந்தச் சூழலில், அந்த அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள், முழுவீச்சில் மீண்டும் அமலுக்கு வருவதாக என்று டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை உள்பட கடுமையான பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com