அமலுக்கு வந்தது யேமன் போர் நிறுத்தம்

யேமனின் ஹுதைதா நகரில் அந்த நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர்
ஹுதைதா நகரில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் சேதமடைந்த ஆலை. (கோப்புப் படம்)
ஹுதைதா நகரில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் சேதமடைந்த ஆலை. (கோப்புப் படம்)


யேமனின் ஹுதைதா நகரில் அந்த நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது.
அதையடுத்து, அந்த நாட்டின் யேமனின் முக்கியத்துவம் வாய்ந்த ஹுதைதா நகரில் பல மாதங்களாக நீடித்து வந்த குண்டு முழக்கங்கள் ஓய்ந்தன. 
இதுகுறித்து யேமன் ராணுவ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஹுதைதா நகரில் போர் நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை முழுமையாக அமலுக்கு வந்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியிலிருந்து, அந்த நகரில் குண்டு முழக்கங்கள் ஓய்ந்து, முழு அமைதி நிலவி வருகிறது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தகவலை ஹுதைதா நகரில் வசிப்பவர்களும் உறுதி செய்தனர். அவர்களிடம் தொலைபேசி மூலம் செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போது, செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியிருந்து கிளர்ச்சியாளர்கள் தரப்பிலிருந்தும், அரசு ஆதரவுப் படையினர் தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று அவர்கள் கூறினர். 
பொதுவாக கிளர்ச்சியாளர்களும், அரசுப் படையினரும் மாலை தொடங்கி, இரவு முழுவதும் கடுமையான சண்டையிடுவதும், அதிகாலையில் சண்டை அடங்கிவிடுவதும் வழக்கம் என்பதால், இது வழக்கமான இடைவேளையா, அல்லது முழு போர் நிறுத்தமா என்பதில் குழப்பம் நீடிப்பதாக ஹுதைதா நகரவாசிகள் கூறினர்.
எனினும், அந்த நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள போர் நிறுத்ததுக்கு இரு தரப்பினருமே முழு ஆதரவு தெரிவித்து வருவதால், இது முழுமையான போர் நிறுத்தமாக இருக்கும் என்றும் சிலர் நம்பிக்கை தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த சண்டை நிறுத்தம் குறித்து ஸ்வீடனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கடந்த வியாழக்கிழமை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டாலும், ஹுதைதா நகரில் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வந்தன.
அதையடுத்து, ராணுவரீதியிலான சில காரணங்களால், ஸ்வீடனில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசுப் படையினரும், கிளர்ச்சியாளர்களும் உடனடியாக செயல்படுத்த முடியவில்லை என்று திங்கள்கிழமை கூறிய ஐ.நா. அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் போர் நிறுத்தம் முழு வீச்சில் அமலுக்கு வரும் என்று உறுதியளித்திருந்தனர். இந்தச் சூழலில், ஐ.நா. கூறியபடி ஹுதைதா நகரில் தற்போது அமைதி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, யேமன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஐ.நா. முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
யேமனில் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி புரிந்து வந்த அதிபர் அலி அப்துல்லா சலே மக்கள் போராட்டம் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு பதவி விலகினார். எனினும், அவருக்குப் பிறகு அதிபர் பொறுப்பேற்ற மன்சூர் ஹாதியால் உறுதியான ஆட்சியைத் தர முடியவில்லை.
இதன் காரணமாக, ஹூதி பழங்குடியின கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினர். ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானின் உதவியுடன் அவர்கள் தலைநகரைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியாவில் அதிபர் மன்சூர் ஹாதி தஞ்சம் புகுந்தார். அவருக்கு ஆதரவாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபிய கூட்டுப் படை கடந்த 2015-ஆம் ஆண்டு விமானத் தாக்குதலைத் தொடங்கியது. அதையடுத்து யேமன் உள்நாட்டுச் சண்டை தீவிரமடைந்து, சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சூழலில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான ஹோடைடாவை மீட்பதற்காக அந்த நகரை அரசுப் படையினர் முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தது.
இதன் காரணமாக ஏராளமானோர் பலியானதோடு, முற்றுகை காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.
அதையடுத்து, யேமன் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் மார்ட்டின் கிரிஃபித்ஸின் முயற்சியின் பலனாக, இரு தரப்பினருக்கும் இடையே ஸ்வீடனில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து நிலையில், ஹுதைதா நகரில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com