சிறுவர்களை மீட்க வந்த ஆஸ்திரேலியர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கிய தாய்லாந்து

வெள்ளம் புகுந்த குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றிய ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் மற்றும் மயக்க மருந்து நிபுணருக்கு தாய்லாந்து அரசு முன்கூட்டியே சட்டப்பாதுகாப்பு
ரிச்சர்ட் ஹாரிஸ் (இடது), கிரெயிக் சேலன்.
ரிச்சர்ட் ஹாரிஸ் (இடது), கிரெயிக் சேலன்.

வெள்ளம் புகுந்த குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றிய ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் மற்றும் மயக்க மருந்து நிபுணருக்கு தாய்லாந்து அரசு முன்கூட்டியே சட்டப்பாதுகாப்பு வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுவர்களை உயிருடன் மீட்கும் மிகக் கடுமையான முயற்சியில் தோல்வி ஏற்பட்டால், அதற்காக அந்த இருவர் மீதும் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் ஏபிசி' தொலைக்காட்சி திங்கள்கிழமை கூறியதாவது:
தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்பதற்காக, குகை வெள்ளத்தில் நீந்துவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர் ரிச்சர்ட் ஹாரிஸ் மற்றும் நீச்சல் வீரர் கிரெயிக் சேலன் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த இருவரும், சிறுவர்களை மீட்பதில் மிக முக்கியப் பங்காற்றினர்.
எனினும், ஆபத்துகள் நிறைந்த அந்த மீட்புப் பணியில் தோல்வி ஏற்பட்டால், அதற்காக அந்த இருவர் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்பதை உறுதி செய்வதற்காக, அவர்களுக்கு தாய்லாந்து அரசு முன்கூட்டியே சட்டப் பாதுகாப்பு வழங்கியது.
ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஏபிசி' தொலைக்காட்சி தெரிவித்தது.
எனினும், இந்தத் தகவல் குறித்து கருத்து கூற ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
தாய்லாந்தின் சியாங் ராய் என்னும் பகுதியிலுள்ள குகையைப் பார்வையிட, வைல்டு போர்ஸ்' என்னும் உள்ளூர் கால்பந்து அணியைச் சேர்ந்த 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை அவர்களது 25 வயது பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ஆம் தேதி அழைத்துச் சென்றார்.
அப்போது, திடீரென பெய்த பெரு மழை காரணமாக அந்த குகைக்குள் வெள்ளம் புகுந்ததையடுத்து, அவர்களனைவரும் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர், குகை வாயிலில் அவர்களது மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை வைத்து அந்தக் குகைக்குள் அவர்கள் சென்றிருப்பதை உறுதி செய்தனர்.
எனினும், அந்த 13 பேரின் கதி குறித்த மர்மம் பல நாள்களுக்கு நீடித்தது. இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகையின் பாறை மேடு ஒன்றில் அந்த 13 பேரையும் 9 நாள்களுக்குப் பிறகு கண்டறிந்தார்.
அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வந்தன. எனினும், வெள்ளத்தில் முழ்கிய மிகக் குறுகிய குகைப் பாதை வழியாக அவர்களை வெளியே மீட்டு அழைத்து வருவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த நிலையில், ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து கடல் அதிரடிப் படை முன்னாள் வீரர் உயிரிழந்தார்.
மேலும், அந்தப் பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து, குகைக்குள் மேலும் வெள்ள நீர் புகுந்தது; குகைக்குள் பிராண வாயு (ஆக்ஸிஜன்) அளவும் வெகுவாகக் குறைந்து வந்தது.
இதையடுத்து, வெள்ள நீரில் மூழ்கிய மிகக் குறுகலான பாதைகள் வழியாக மீட்புக் குழுவினர் தங்களது உயிரை பணயம் வைத்து கடந்த 8, 9, 10 தேதிகளில் 13 பேரையும் குகைக்குள்ளிருந்து மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.
உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மீட்புப் பணியில், மயக்க மருந்து நிபுணர் ரிச்சர்ட் ஹாரிஸ் மற்றும் நீச்சல் வீரர் கிரெயிக் சேலன் ஆகியோரது பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com