ராணுவத்தினர் மீதான போர்க்குற்ற புகாரை ரத்து செய்ய ஐ.நா.வை வலியுறுத்துவோம்

இலங்கை ராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்ற புகார்களை ரத்து செய்யுமாறு ஐ.நா.வை வலியுறுத்துவோம் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ராணுவத்தினர் மீதான போர்க்குற்ற புகாரை ரத்து செய்ய ஐ.நா.வை வலியுறுத்துவோம்


இலங்கை ராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்ற புகார்களை ரத்து செய்யுமாறு ஐ.நா.வை வலியுறுத்துவோம் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சிறீசேனா தலைமையிலான இலங்கை அரசுக் குழுவினர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.வுக்கு செல்லவுள்ளனர். ஐ.நா. பொதுச் சபையில், வரும் 25-ஆம் தேதி சிறீசேனா உரையாற்றவுள்ளார். 
அந்த சமயத்தில், இலங்கை ராணுவத்தினருக்கு எதிரான புகார்களை ரத்து செய்ய வேண்டும் என, தான் வலியுறுத்தவுள்ளதாக சிறீசேனா தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு தனிநாடு கேட்டுப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை அரசுக்கும் இடையே, பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர் கடந்த 2009-ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.
இந்தப் போரின் போது இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், 20,000 தமிழர்கள் காணாமல் போனதாகவும் அந்நாட்டு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழர்கள் காணாமல் போனதன் பின்னணியில் இலங்கை ராணுவத்தினர், காவல்துறை, கடற்படை உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக, காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
போரின்போது இலங்கை ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 
இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இறுதிப் போரில் இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று முறை தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
குறிப்பாக, நம்பத்தகுந்த சர்வதேச விசாரணைக் குழுவை இலங்கை அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே, இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபட்ச தோற்கடிக்கப்பட்டு, சிறீசேனா தலைமையிலான புதிய அரசு அமைந்தது.
இதையடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிவுறுத்தல்களை செயல்படுத்த இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதேசயம், காணாமல் போன தமிழர்கள் குறித்து புகார் அளிக்கவும், அவர்களை கண்டறியவும் சிறப்பு அலுவலகம் ஒன்றை சிறீசேனா அரசு அமைத்தது.
இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் சிறீசேனா உரையாற்றவுள்ளார். போர்குற்றம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com