குவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பு ரத்து: வெனிசூலா அரசியல் சாசன நாடாளுமன்றம் தீர்மானம்

வெனிசூலா நாடாளுமன்றத் தலைவரும், அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டவருமான
வெனிசூலா தேசிய நாடாளுமன்றத் தலைவர் ஜுவான் குவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பை ரத்து செய்வதற்காகக் கூடிய அரசியல் சாசன நாடாளுமன்றம். இடம்: கராகஸ்.
வெனிசூலா தேசிய நாடாளுமன்றத் தலைவர் ஜுவான் குவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பை ரத்து செய்வதற்காகக் கூடிய அரசியல் சாசன நாடாளுமன்றம். இடம்: கராகஸ்.


வெனிசூலா நாடாளுமன்றத் தலைவரும், அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டவருமான ஜுவான் குவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பை ரத்து செய்யும் தீர்மானத்தை அந்த நாட்டு அரசியல் சாசன நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தேசிய நாடாளுமன்றத் தலைவர் ஜுவான் குவாய்டோவுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பை ரத்து செய்வதற்கான தீர்மானம் அரசியல் சாசன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கொண்டு வரப்பட்டது.
அப்போது பேசிய அரசியல் சாசன நாடாளுமன்றத் தலைவரும், சோஷலிஸ்ட் கட்சித் தலைவருமான டயோஸ்டடோ கேபெல்லா, வெனிசூலாவில் வெளிநாட்டினர் படையெடுப்புக்கு அழைப்பு விடுப்பதாகவும், உள்நாட்டுப் போரைத் தூண்டி விடுவதாகவும் ஜுவான் குவாய்டோ மீது குற்றம் சாட்டினார்.
மேலும், போரால் ஏற்படும் சாவுகள் குறித்து குவாய்டோ துளியும் கவலைப்படவில்லை என்றும் அவர் சாடினார்.
அதனைத் தொடர்ந்து, தேசிய நாடாளுமன்றத் தலைவர் என்கிற முறையில் குவாய்டோவுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை அரசியல் சாசன நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது.
குவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பை விலக்க வெனிசூலா உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்த நிலையில், அன்றைய இரவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம், குவாய்டோ மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, அவரை கைது செய்ய அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது.
எனினும், குவாய்டோவை கைது செய்ய அதிபர் மடூரோ உத்தரவிடுவாரா? என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
வெனிசூலாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அதிபராக பொறுப்பு வகித்து வரும் நிக்கோலஸ் மடூரோ, நாட்டில் பொருளாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியதாகக் கூறி நாடு முழுவதும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் போராட்டம் வெடித்தது.
இந்த நிலையில், அந்த நாட்டின் தேசிய நாடாளுமன்றத்துக்கு 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றியடைந்தது.
எனினும், அந்த நாடாளுமன்றத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் அரசியல் சாசன நாடாளுமன்றத்தை நிக்கோலஸ் மடூரோ அமைத்தார்.
இது, தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக மடூரோ செய்யும் சதி என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், அரசியல் சாசன நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தன.
இதன் காரணமாக, ஏறத்தாழ அனைத்து தொகுதிகளிலும் மடூரோவுக்கு ஆதரவான வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, மடூரோ ஆதரவாளர்களின் ஆதிக்கம் நிறைந்த அரசியல் சாசன நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது.
இந்தச் சூழலில்,  கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிக்கோலஸ் மடூரோ, கடும் எதிர்ப்புக்கிடையே மீண்டும் கடந்த ஜனவரி மாதம் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதையடுத்து, அதிபர் தேர்தலை நியாயமான முறையில் மீண்டும் நடத்த வேண்டும் எனவும், அதுவரை நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பதாகவும் தேசிய நாடாளுமன்றத் தலைவர் ஜுவான் குவாய்டோ அறிவித்தார்.
இதனால், அந்த நாட்டில் பெரும் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தப் பிரச்னையில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஜுவான் குவாய்டோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்தச் சூழலில், குவாய்டோவுக்கான சட்டப்பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் தீர்மானத்தை அரசியல் சாசன நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com