இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக ஷாவேந்திர சில்வா நியமனம்: போர்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியவர்

இலங்கை ராணுவத்தின் தளபதியாக சர்ச்சைக்குரிய ஃபீல்ட் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஷாவேந்திர சில்வா (55) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக ஷாவேந்திர சில்வா நியமனம்: போர்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியவர்


இலங்கை ராணுவத்தின் தளபதியாக சர்ச்சைக்குரிய ஃபீல்ட் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஷாவேந்திர சில்வா (55) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ராணுவத் தளபதியாக தற்போது இருக்கும் லெப்டினென்ட் ஜெனரல் சேனாநாயகேவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. அந்தப் பதவியில் ஷாவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்ற காலத்தில், விடுதலைப்புலிகளுடன் சண்டையிட்ட 58ஆவது படைப்பிரிவுக்கு தலைமை வகித்தவர் சில்வா. அவரது படைப்பிரிவு மீதுதான், இலங்கைத் தமிழர்களை சித்ரவதை செய்தது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது, மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2013ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் நிறைவேற்றப்பட்ட இலங்கை ராணுவத்துக்கு எதிரான தீர்மானத்திலும் சில்வாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
அவரை இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக நியமித்திருப்பது, ஐ.நா. அமைதி பேணுதல் நடவடிக்கைக்கும், இலங்கைக்கும் இடையேயான ஒத்துழைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போருக்குப் பின்னர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதரகத்தில் துணைத் தூதராக சில்வா பணியாற்றி வந்தார். தற்போது அவர் இலங்கை ராணுவத் தளபதியாக அதிபர் சிறீசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தமிழ் அமைப்பு எதிர்ப்பு: இதனிடையே, இலங்கை ராணுவத் தளபதியாக ஷாவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், கொடிய குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நபர், ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு பெரிய அவமரியாதை ஆகும். இதனால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com