திபெத் புரட்சி தினம்: வெளிநாட்டினர் வருகைக்குத் தடை

திபெத் புரட்சி தினம், அரசுக்கு எதிரான கலவர நினைவு தினங்களையொட்டி அந்தப் பகுதியில் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


திபெத் புரட்சி தினம், அரசுக்கு எதிரான கலவர நினைவு தினங்களையொட்டி அந்தப் பகுதியில் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
திபெத்தில் சீன அரசுக்கு எதிராக கடந்த 1959-ஆம் ஆண்டு புரட்சி வெடித்தது. அதன் 60-ஆவது ஆண்டு நினைவு தினம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வருகிறது.
மேலும், அரசுக்கு எதிராக கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் நினைவு தினம் மார்ச் மாதம் 14-ஆம் தேதி வருகிறது.
இந்த நிலையில், அந்த இரு நினைவு தினங்களையும் முன்னிட்டு திபெத்தில் அரசியல் ரீதியிலான நிகழ்ச்சிகள் நடைபெறலாம் என்றும், இதனால் அங்கு பதற்றம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி வரை வெளிநாட்டுப் பயணிகள் திபெத் வருவதற்கு சீன அரசு தடை விதித்துள்ளது.
எனினும், அந்தத் தடை எந்த தேதியிலிருந்து தொடங்கியது என்பது குறித்து தகவல்கள் இல்லை.
வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள தகவலை திபெத்தைச் சேர்ந்த சுற்றுலா சேவை நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
திபெத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு வெளிநாட்டுப் பயணிகள், செய்தியாளர்கள், தூதரக அதிகாரிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்படுவது ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைதான்.
எனினும், திபெத் புரட்சியின் 60-ஆவது ஆண்டு நினைவு தினம் வரும் சூழலில் அந்தத் தடை விதிக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னாட்சிப் பிரதேசமான திபெத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா தலைமையில் கடந்த 1959-ஆம் ஆண்டு புரட்சி வெடித்தது.
அந்தப்  புரட்சியை சீன அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கிய நிலையில், தலாய் லாமாவுக்கு இந்தியா தஞ்சமளித்தது.
இந்த நிலையில், சீன அரசின் அடக்குமுறைக்கு எதிராக கடந்த 2008-ஆம் ஆண்டு வெகுண்டெழுந்த திபெத்தியர்கள், சீனர்கள் மீதும், சீன நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில் 18 சீனர்கள் கொல்லப்பட்டனர். கலவரத்தைத் தொடர்ந்து சீன ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் ஏராளமான திபெத்தியர்கள் பலியாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com