பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு: மத்திய ஆசிய நாடுகள் மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ்

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு அளிக்க, இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் இடையேயான முதலாவது பேச்சுவார்த்தையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு: மத்திய ஆசிய நாடுகள் மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ்

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு அளிக்க, இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் இடையேயான முதலாவது பேச்சுவார்த்தையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் இடையேயான முதலாவது பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பேச்சுவார்த்தையின் இறுதியாக இந்தியா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு ஆகிய நாடுகள் சார்பாக பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு அளிக்கவும் அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
 ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஈடுபாடு குறித்துக் குறிப்பாக சுஷ்மா பேசினார். உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது:
 நம்முடைய பகுதிகள் அனைத்தும் தற்போது பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இந்தியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகள் ஆகியவை சகிப்புத்தன்மையும், பன்முகத்தன்மையும் கொண்ட நாடுகள். பயங்கரவாதிகள் பரப்ப முயலும் சகிப்பின்மைக்கு நமது சமுதாயத்தில் இடமில்லை. இந்த பயங்கரவாதிகள் யார் என்பது குறித்தும், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யார் என்பது குறித்தும் நாம் கேள்வி எழுப்ப வேண்டும்.
 பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில், எந்தவித முதலீடும் இருக்காது. அதனால், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படாது. நாட்டின் வளர்ச்சியை பயங்கரவாதம் அரித்துவிடும். எனவே, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
 வளர்ச்சி அமைப்பு: ஆப்கானிஸ்தானில் வளர்ச்சியை ஏற்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதேபோல், மத்திய ஆசிய நாடுகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்த இந்தியா முனைப்புகாட்டி வருகிறது. அங்கு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும், அந்நாடுகளுக்கு நிதியுதவி அளிக்கவும் இந்தியா தயாராக உள்ளது. நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால், பிராந்திய ரீதியிலான வளர்ச்சியை எளிதில் ஏற்படுத்திவிடலாம்.
 இதற்காக, "இந்தியா-மத்திய ஆசியா வளர்ச்சி அமைப்பு' ஒன்றை ஏற்படுத்த இந்தியா முன்மொழிந்துள்ளது. விரைவில், அந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வருவதற்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும்.
 தடைகள் நீங்கிவிடும்: ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் உடனான தொடர்பு வசதிகளை எளிதாக்கும் பொருட்டு, ஈரான் நாட்டில் சபஹார் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. நாம் இணைந்து பணியாற்ற தற்போது நிலவி வரும் தடைகள் அனைத்தையும் சாப்ஹார் துறைமுகம் நீக்கிவிடும்.
 அத்துறைமுகத்தின் வழியாக கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கோதுமையை இந்தியா ஏற்றுமதி செய்தது. மேலும், சபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கானிஸ்தான் வரையிலான ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும் இந்தியா திட்டமிட்டு வருகிறது.
 முழு ஆதரவு: மத்திய ஆசிய நாடுகளுடன் கலாசார ரீதியில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், அந்நாட்டு நபர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும் இந்தியா தயாராக உள்ளது. நாட்டில் அமைதியை ஏற்படுத்த ஆப்கானிஸ்தான் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. கட்டுமானம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, திறன் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி வருகிறது.
 கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தித்து வரும் பயங்கரவாதம் சார்ந்த பிரச்னைகள் அனைத்துக்கும் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று அவர் தெரிவித்தார்.
 பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைப்பு: பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்த நாடுகளுக்கிடையேயான இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த நாடுகள் ஒப்புக்கொண்டன. நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், வணிகம் மேற்கொள்வதற்கு நிலவி வரும் தடைகளை நீக்குவது குறித்தும் ஆராயப்பட்டது.
 பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், உலக அளவிலான வணிகத் தொடர்பை ஏற்படுத்தவும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து நாடுகள் விரிவான விவாதம் நடத்தின.
 முக்கியப் பங்கு: இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கிடையேயான தொடர்பை ஏற்படுத்துவதில் ஆப்கானிஸ்தான் முக்கியப் பங்காற்றி வருகிறது. எனவே, அங்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அந்நாட்டுப் பெண்களும் அரசுத் துறைகளில் பங்கேற்று பணியாற்றுவதை ஊக்குவிக்க வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியாவும், மத்திய ஆசிய நாடுகளும் தயாராக உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com