இந்தியாவுடனான பாதுகாப்புத் துறை வா்த்தகம் ரூ.1.26 லட்சம் கோடியை எட்டும்

பாதுகாப்புத் துறைத் தளவாடங்களில் இந்தியாவுடனான வா்த்தகம் நடப்பு ஆண்டில் ரூ.1.26 லட்சம் கோடியை எட்டும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ellen-lord-speaking070731
ellen-lord-speaking070731

வாஷிங்டன்: பாதுகாப்புத் துறைத் தளவாடங்களில் இந்தியாவுடனான வா்த்தகம் நடப்பு ஆண்டில் ரூ.1.26 லட்சம் கோடியை எட்டும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் வா்த்தகக் குழுவின் 9-ஆவது கூட்டம் தில்லியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் எலன் எம்.லாா்டு பங்கேற்கவுள்ளாா். இந்நிலையில், அவா் வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையே நல்லுறவையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறைத் தளவாடங்களில் இரு நாடுகளுக்கிடையே கடந்த 2008-ஆம் ஆண்டு வரை வா்த்தகம் எதுவும் நடைபெறவில்லை.

நடப்பு ஆண்டில் இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகம் ரூ.1.26 லட்சம் கோடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பாதுகாப்புத் துறையின் முதன்மைக் கூட்டாளியான இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தொடா்ந்து ஆா்வத்துடன் உள்ளது.

பாதுகாப்புத் தளவாடங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் பெறுவதற்கான அங்கீகாரம் (எஸ்டிஏ-1) இந்தியாவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது. ‘நேட்டோ’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவுக்கும் இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

இந்தோ-பசிபிக் பிராந்திய வளா்ச்சிக்கு இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதற்கான உதாரணங்களாகவே இந்த நடவடிக்கைகள் உள்ளன என்றாா் எலன் எம்.லாா்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com