பிரிட்டன் நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரோதமானது: ஸ்காட்லாந்து உச்சநீதிமன்றம்

பிரிட்டன் நாடாளுமன்றத்தை அந்த நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் முடக்கி வைத்துள்ளது சட்டவிரோதமானது என்று ஸ்காட்லாந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரோதமானது: ஸ்காட்லாந்து உச்சநீதிமன்றம்


பிரிட்டன் நாடாளுமன்றத்தை அந்த நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் முடக்கி வைத்துள்ளது சட்டவிரோதமானது என்று ஸ்காட்லாந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து எடின்பர்கிலுள்ள அந்த நீதிமன்றத்தின் நீதிபதி புதன்கிழமை வழங்கிய தீர்ப்பில், நாடாளுமன்றம் முடக்கிவைக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது என்று தெரிவித்ததுடன், இதுதொடர்பான இறுதி முடிவை பிரிட்டன் உச்சநீதிமன்றம்தான் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், நடாளுமன்ற முடக்கத்துக்குத் தடை விதிக்கவும் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பிறகு, அயர்லாந்து தீவில் பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயர்லாந்துக்கும், தனி நாடாகத் திகழும் அயர்லாந்துக்கும் இடையே வர்த்தக எல்லை எழுப்பினால், அது அந்தப் பகுதியின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் இரு பகுதிகளிடையே வர்த்தக ஒருங்கிணைப்பைத் தொடரும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த ஒப்பந்தம் பிரிட்டனின் இறையாண்மையை பாதிக்கும் எனக் கூறி அதனை பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது.
இதனால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வரும் சூழலில், ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் இறுதித் தேதியான அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் அந்த அமைப்பிலிருந்து விலகுவதில் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உறுதியாக உள்ளார்.
எனினும், ஒப்பந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டும்வரை பிரெக்ஸிட்டை ஒத்திவைக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களும், ஆளும் கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்களும் விரும்புகின்றனர்.
இந்தச் சூழலில், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட் நிறைவேறுவதை நாடாளுமன்றம் தடுத்து நிறுத்தாமல் இருக்கும் வகையில் அதனை அக்டோபர் 14-ஆம் தேதி வரை முடக்கிவைப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்தார்.
பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ள இந்த முடிவை எதிர்த்து பல்வேறு மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றில் சில நிராகரிப்பட்ட நிலையில், தற்போது ஸ்காட்லாந்து உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com