பின்லாந்து தேர்தல்: இடதுசாரி கட்சி வெற்றி

பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில், இடதுசாரி கட்சியான சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பின்லாந்து தேர்தல்: இடதுசாரி கட்சி வெற்றி

பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில், இடதுசாரி கட்சியான சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது.
 பின்லாந்து நாடாளுமன்றத்தின் 200 தொகுதிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
 இதில், சமூக ஜனநாயக கட்சி, 40 தொகுதிகளைக் கைப்பற்றியது. அக்கட்சி 17.7 சதவீத வாக்குகளைப் பெற்றது. அக்கட்சிக்கு அடுத்து, வலதுசாரியான பின்ஸ் கட்சி 39 தொகுதிகளைக் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தது. தேசிய கூட்டணிக் கட்சி 38 தொகுதிகளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றது. தற்போதைய பிரதமர் ஜூஹா சிபிலாவின் கட்சி, 31 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
 ஜூஹா சிபிலா அரசின் கொள்கைகளை, சமூக ஜனநாயக கட்சித் தலைவர் ஆண்ட்டி ரின்னே கடுமையாக விமர்சித்து, பிரசாரத்தில் ஈடுபட்டார். அதே வேளையில், பின்லாந்தில் அகதிகள் குடியேற்றம் தடுக்கப்படும் என்பதை முன்னிறுத்தி, பின்ஸ் கட்சித் தலைவர் ஜூசி ஹல்லாஹோ பிரசாரம் செய்தார்.
 இத்தேர்தல் முடிவை அடுத்து, சமூக ஜனநாயக கட்சி, தேசிய கூட்டணிக் கட்சி மற்றும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக ஜனநாயக கட்சி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது.
 பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலே தொடர்ந்து நிலவுகிறது. இதனால், 3 முதல் 4 கட்சிகள் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்கும் நிலையே காணப்படுகிறது. தேர்தல் தோல்வி குறித்து, ஜூஹா சிபிலா கூறுகையில், ""நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், நாங்கள் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com