ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்வை நோக்கி மசூத் அசார் விவகாரம்: சீனா

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரும் விவகாரம் சரியான திசையை நோக்கி நகர்ந்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. 
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்வை நோக்கி மசூத் அசார் விவகாரம்: சீனா


மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரும் விவகாரம் சரியான திசையை நோக்கி நகர்ந்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. 

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரும் விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் சீனாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியானது. அந்த தகவலின்படி அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள்  சீனாவுக்கு தெரிவித்திருப்பதாவது, "பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா. சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு எதிப்பு தெரிவித்து வரும் சீனா அதற்கான சட்டரீதியிலான காரணத்தை ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும்" என்பதாகும்.  

இந்த தகவல்களுக்கு பதில் தெரிவிக்கும் வகையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ கங் இன்று (புதன்கிழமை) தெரிவித்ததாவது,   

"இந்த தகவல் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. இந்த தகவல் எங்கிருந்து வந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

இந்த விஷயத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் திருப்தியளிக்கக்கூடிய முடிவுகள் எட்டப்படும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. 

சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் நாங்கள் தொடர்பிலேயே உள்ளோம். இந்த விவகாரம் தீர்வு எட்டப்படும் திசையை நோக்கியே நகர்கிறது. 

சம்பந்தப்பட்ட தரப்பினர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் புதிய தீர்மானத்தை நிர்பந்திக்கின்றனர். அதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இதுதொடர்பான விவாதத்தின் போது, பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து அல் காய்தா நடவடிக்கைகள் குழுவிலேயே ஆலோசனை நடத்த வேண்டும் என்று தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர். 

அதனால், சம்மந்தப்பட்ட அந்த நாடு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரம் அல் காய்தா நடவடிக்கைகள் குழுவின் வரையறைக்குள்ளேயே சரியான முறையில் தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு தந்து உதவும் என்றும் எதிர்பார்க்கிறோம்" என்றார். 

இந்த விவகாரத்தில் சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது மூலம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது குறித்து கேள்வி எழுப்பியபோது, "இந்த விவகாரம் தீர்வு காணும் இலக்கை நோக்கி சரியான திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது" என்றார்.     

இதில், அவர் அமெரிக்காவை நேரடியாக குறிப்பிடாமல் சம்மந்தப்பட்ட நாடு என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, 

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோருவது தொடர்பான தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அல் காய்தா நடவடிக்கைகள் குழுவிடம் பிரான்ஸ் தாக்கல் செய்தது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்த போதிலும், சீனா எதிர்ப்புத் தெரிவித்தது. 

இதையடுத்து இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 15 நாடுகளை அங்கமாகக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா சார்பில் வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் மசூத் அஸாருக்கு தடை விதித்தல், அவரது சொத்துகளை முடக்குதல் உள்ளிட்ட ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. மசூத் அஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் அனைத்து உபாயங்களையும் பயன்படுத்துவோம் என்றும் அமெரிக்கா அறிவித்தது.

ஆனால், அமெரிக்காவின் இந்நடவடிக்கையை சீனா கடுமையாக விமரிசித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com