வட கொரியா மீண்டும் அணு ஆயுதத் தயாரிப்பு?

வட கொரிய அணுசக்தி மையங்கள் இயங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், அந்த நாடு அணு ஆயுதத் தயாரிப்பை மீண்டும்
யாங்பியான் அணுசக்தி மையம் (கோப்புப் படம்).
யாங்பியான் அணுசக்தி மையம் (கோப்புப் படம்).


வட கொரிய அணுசக்தி மையங்கள் இயங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், அந்த நாடு அணு ஆயுதத் தயாரிப்பை மீண்டும் தொடங்கியிருக்கலாம் என்று அமெரிக்கக் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச போர் தந்திர ஆய்வு மையம் (சிஎஸ்ஐஎஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கண்காணிப்பு செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், வட கொரியவின் யாங்பியான் அணுசக்தி மையத்தில் சில வேலைகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த மாதம் 12-ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், யாங்பியான் அணுசக்தி மையத்தின் யுரேனிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் கதிரியல் ஆய்வகம் அருகே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த வாகனங்கள், கதிரியக்கப் பொருள்களை எடுத்துச் செல்வதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை ஆகும்.
எனவே, அந்த வாகனங்களையும், அவை நிறுத்தப்பட்டிருந்த இடங்களையும் வைத்து, அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தும் வகையில் யுரேனியத்தைச் செறிவூட்டும் செயலில் வட கொரியா மீண்டும் இறங்கியுள்ளதாகக் கருத முடியும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா. தடையையும் மீறி, அணு குண்டுகளையும், அந்த குண்டுகளை ஏந்திச் செல்லக்கூடிய ஏவுகணைகளையும் வட கொரியா சோதித்து வந்தது.
அதற்குப் பதிலடியாக, வட கொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், அணு ஆயுதங்களைக் கைவிட சம்மதிப்பதாகவும், அமெரிக்காவுடன் நல்லுறவை  ஏற்படுத்த விரும்புவதாகவும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இடையே சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்குவதற்கும், வட கொரியா மீதான தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்வதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இருவரும் ஒப்புக் கொண்டனர்.
எனினும், வட கொரியா அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான செயல்திட்டங்கள் மற்றும் வரையறைகள் குறித்து அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்படாததால், அது பெயரளவிலான கூட்டறிக்கையாக மட்டுமே இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், டிரம்ப், கிம் ஆகியோருக்கு இடையிலான இரண்டாவது சந்திப்பு வியத்நாமின் ஹனோய் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
அந்தப் பேச்சுவார்த்தையின்போது  வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கிம் ஜோங்-உன் வலியுறுத்தியதாகவும், அதற்கு அதிபர் டிரம்ப் உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதன் காரணமாக, அந்தச் சந்திப்பு எந்த ஒப்பந்தமும் இல்லாமல் முடிவடைந்தது.
இவ்வாறு சமாதானப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடித்து வரும் சூழலில், அமெரிக்கக் கண்காணிப்பு அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

சிஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com