இலங்கையில் அவசரநிலை அமல்: பலி 290-ஆக அதிகரிப்பு; இதுவரை 24 பேர் கைது

தொடர் குண்டுவெடிப்புகள் எதிரொலியாக, இலங்கையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்தை வலுவுடன் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்புப் படையினருக்கு
கொழும்பில் உள்ள புனித அந்தோணி தேவாலயம் அருகே திங்கள்கிழமை வெடிகுண்டு இருந்த காரை சோதனையிடும் அதிகாரிகள். 
கொழும்பில் உள்ள புனித அந்தோணி தேவாலயம் அருகே திங்கள்கிழமை வெடிகுண்டு இருந்த காரை சோதனையிடும் அதிகாரிகள். 


தொடர் குண்டுவெடிப்புகள் எதிரொலியாக, இலங்கையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்தை வலுவுடன் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்புப் படையினருக்கு பெருமளவிலான அதிகாரங்களை அளிக்க இந்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார்.
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இவற்றில் பலியானோர் எண்ணிக்கை திங்கள்கிழமை 290-ஆக அதிகரித்தது.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களையும், வெளிநாட்டுப் பயணிகளையும் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நடத்தப்பட்ட இடங்களுக்கு வெடிபொருள்களை எடுத்துச் சென்ற வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதிபர் ஆலோசனை: இலங்கையை உலுக்கியுள்ள இந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக, அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கொழும்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, இலங்கையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக, காவல்துறைக்கும் முப்படைகளுக்கும் பெருமளவிலான அதிகாரங்களை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிபரின் ஊடகப் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய உள்ளூர் பயங்கரவாதிகளுக்கு சர்வதேச பயங்கரவாத குழுக்கள் உதவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது; எனவே, சர்வதேச நாடுகளின் உதவியை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
3 பேர் விசாரணை குழு: இதனிடையே, குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அதிபர் சிறீசேனா அமைத்துள்ளார். இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி, காவல்துறை முன்னாள் ஐஜி, முன்னாள் சட்டத் துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய அந்த குழு, 2 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு தளர்வு: குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை பகலில் தளர்த்தப்பட்டது. எனினும், திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைக்கு உதவத் தயார் என்று சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபருடன் டிரம்ப் பேச்சு: இதனிடையே, இலங்கை அதிபர் சிறீசேனாவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
இலங்கைக்கு செல்லும் தங்கள் நாட்டினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. 
7 இடங்களில் தற்கொலை தாக்குதல்: இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில், 7 இடங்களில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதும், அவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
87 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு: கொழும்பில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காவல்துறையினர் நடத்திய சோதனையில், 87 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டன. 
முன்னதாக, கொழும்பு விமான நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பைப் வெடிகுண்டு  கண்டெடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதான முனையத்துக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் இருந்த அந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை, விமானப் படையினர் செயலிழக்கச் செய்தனர்.
மேலும் 7 பேர் பலி:: இலங்கை குண்டுவெடிப்பில் கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே உள்ள சூரத்கல் பகுதியைச் சேர்ந்த ரஸினா காதர் குக்கடி என்பவர் இறந்தது ஞாயிற்றுக்கிழமையே தெரியவந்தது.
 இந்த நிலையில், இலங்கைக்கு சுற்றுலா சென்ற கர்நாடக மாநிலத்துக்குள்பட்ட நெலமங்களா அருகேயுள்ள தும்கூருவைச் சேர்ந்த மஜத  பிரமுகர்கள் 7 பேர்  இறந்துள்ளனர் என திங்கள்கிழமை தெரியவந்தது.

பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத்?
இலங்கை சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடர்பாளருமான ரஜீதா சேனரத்ன, கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாக சர்வதேச உளவு அமைப்புகள் கடந்த 4-ஆம் தேதி எச்சரித்திருந்தன. இதுதொடர்பாக இலங்கை காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தராவுக்கு தேசிய உளவுத் துறை தலைவர் கடந்த 9-ஆம் தேதி தகவல் தெரிவித்திருந்தார். பாதுகாப்பு குறைபாடுகளுக்காக, காவல் துறை தலைவர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களிலேயே இதுதான் மிகவும் மோசமான தாக்குதலாகும். இதன் பின்னணியில், இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றார் அவர்.

மேலும் ஒரு குண்டு வெடித்ததால் பரபரப்பு
கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடித்த புனித அந்தோணி தேவாலயத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் வெடிகுண்டு இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. 
அதனை, செயலிழக்கச் செய்யும் முயற்சியில், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடித்தது. 
எனினும், அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com