இலங்கை பயங்கரவாதத் தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 359-ஆக அதிகரிப்பு

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359-ஆக அதிகரித்துள்ளது. 
இலங்கை நீர்க்கொழும்பில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த தனது குடும்பத்தினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பெண்கள்.
இலங்கை நீர்க்கொழும்பில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த தனது குடும்பத்தினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பெண்கள்.

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359-ஆக அதிகரித்துள்ளது. 

முன்னதாக, இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 7 இடங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் 10 இந்தியர்கள் உள்பட 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜவர்தன புதன்கிழமை கூறியதாவது:

பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள அரசு தவறிவிட்டது என்பதை ஒப்புக் கொள்கிறோம். வேறு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவுறுத்தியுள்ளார். இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 32 பேர் குற்றப்பிரிவு விசாரணை துறையின் காவலில் உள்ளனர். நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனினும், அவர்கள்தான் இதை செய்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இலங்கை பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில், 10 இந்தியர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 6 பேர், சீனா, அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர் உள்பட வெளிநாட்டவர்கள் 34 பேர் உயிரிழந்தனர் என்று கூறினார்.

பெண் உள்பட 9 பேர் தற்கொலைத் தாக்குதல்..: இலங்கையில் 7 இடங்களில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், ஒரு பெண் உள்பட 9 பேர் தங்களது உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரின் மனைவி என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருமே பட்டப்படிப்பு படித்தவர்கள் என்றும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் வாழ்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சின்னமோன் கிராண்ட் மற்றும் ஷாங்க்ரி லா நட்சத்திர விடுதிகளில்  தாக்குதல் நடத்திய இருவரும் சகோதரர்கள் என்று தெரிய வந்ததையடுத்து, அவர்களது வீட்டை சோதனையிட்டதில் பயங்கரவாதம் குறித்த புத்தகங்கள், செல்லிடப்பேசி சிம்கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அவர்களது இளைய சகோதரர், விடுதியில் விட்ட ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரையும் விசாரணைக்காக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

உள்ளூர் பயங்கரவாதிக்கு தொடர்பு?.. : இதனிடையே, இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்தவர் என்று கூறப்படும் ஜஹ்ரான் ஹாஸிம் என்பவருக்கு இந்த தாக்குதல்களில்  தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு செவ்வாய்க்கிழமை ஒரு விடியோவை வெளியிட்டது. 

இந்நிலையில், இலங்கையில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவரான ஜஹ்ரான் ஹாஸிம் முகம் அந்த விடியோவில் தெரிந்ததாக காவல் துறையினர் கூறினர். எனினும், விடியோவில் இருந்த பயங்கரவாதிகள் தங்களது முகத்தை பாதி மறைத்திருந்ததால், ஹாஸிமின் அடையாளம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பில் இலங்கை...

தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு இலங்கையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கொழும்புவின் தெற்கு பகுதியில் உள்ள நகரில் தனியாக நின்றிருந்த இருசக்கர வாகனத்தை கண்ட காவல் துறையினர் அதில் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனையிட்டனர். அதிர்ஷ்டவசமாக அதில் எந்த வெடிபொருள்களும் இல்லை. அதையடுத்து, பொது இடங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்வோர், வாகனத்தின் பின்புறம் தனது பெயரையும், செல்லிடப்பேசி எண்ணையும் எழுதி வைக்க வேண்டும் என்று மக்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.


தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரியாது : அமெரிக்கா

இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக, இந்தியாவும் அமெரிக்காவும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தன என்று அந்நாட்டு அமைச்சர் கூறியதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் கூறுகையில், "இலங்கை அரசுக்கு வேறு என்னென்ன தகவல்கள் கிடைத்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. உளவுத் துறை தகவல்களை சேகரிப்பதிலும், தகவல் பரிமாற்றத்திலும் பின்னடைவு ஏற்பட்டதாக இலங்கை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது. அதனால் நாங்கள் எந்த தகவலையும் அவர்களுக்கு அளிக்கவில்லை ' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com