ரஷியாவில் கிம் ஜோங்-உன்: புதினுடன் இன்று சந்திப்பு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினைச் சந்திப்பதற்காக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் புதன்கிழமை ரஷியா வந்தடைந்தார்.
ரஷியாவில் கிம் ஜோங்-உன்: புதினுடன் இன்று சந்திப்பு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினைச் சந்திப்பதற்காக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் புதன்கிழமை ரஷியா வந்தடைந்தார்.
அங்கு புதின் மற்றும் கிம் ஜோங்-உன் இடையிலான முதல் சந்திப்பு வியாழக்கிழமை (ஏப். 25) நடைபெறுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ரஷியாவின் விளாதிவோஸ்டாக் நகருக்கு புதன்கிழமை வந்தார்.
மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அவரது பயணத் திட்டம் குறித்த தகவலை, அவர் பிரத்யேக ரயில் மூலம் ரஷியா புறப்படுவதற்கு சற்று முன்னர் வட கொரிய அரசு செய்தி நிறுவனம் கேசிஎன்ஏ வெளியிட்டது.
அந்த ரயிலில் கிம் ஜேங்-உன்னுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ரீ யாங்-ஹோ உள்ளிட்ட குழுவினர் ரஷியா சென்றதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையே, டியூமென் நதியைக் கடந்து ரஷிய எல்லைக்குள் புதன்கிழமை நுழைந்த கிம் ஜோங்-உன்னின் பிரத்யேக ரயில், எல்லை நகரான காசனில் நிறுத்தப்பட்டது.
அங்கு கிம் ஜோங்-உன்னுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே, ரஷியாவுக்கு ரயில் மூலம் வந்த கிம் ஜோங்-உன்னின் தந்தை கிம் ஜோங்-இல் மற்றும் தாத்தா கிம் இல்-சங் ஆகியோருக்கு இந்த ரயில் நிலையத்தில் இதே போன்ற வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, விளாதிவோஸ்டாக் நகரை வந்தடைந்த கிம் ஜோங்-உன், அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது இந்த ரஷிய சுற்றுப் பயணம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். அதிபர் விளாதிமீர் புதினுடனான பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துவது, வட கொரியா - ரஷியா இடையிலான உறவை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார் அவர்.
விளாதிவோஸ்டாக் நகரிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில்தான் புதினை கிம் ஜோங்-உன் வியாழக்கிழமை சந்திக்கவுள்ளார்.
வியத்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபருடன் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்குப் பிறகு, உலகத் தலைவர் ஒருவரை கிம் ஜோங்-உன் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக கடந்த ஆண்டு அறிவித்ததற்குப் பிறகு தமக்கானஆதரவை சர்வதேச அளவில் விரிவுபடுத்த கிம் ஜோங்-உன் விரும்புவதையும், அமெரிக்காவுடனான மோதலுக்கான இன்னொரு களத்தை உருவாக்க விளாதிமீர் புதின் தயாராவதையும் இந்தச் சந்திப்பு உணர்த்துவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வட கொரியா உருவாவதில் சோவியத் யூனியன் முக்கியப் பங்காற்றிய நிலையில், ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே நட்புறவு நீடித்து வந்தது. எனினும், 1980-ஆம் ஆண்டுகளில் வட கொரியாவும், தென் கொரியாவும் நட்புரீதியில் நெருங்கி வந்ததைத் தொடர்ந்து, வட கொரியாவுக்கு அளித்து வந்த உதவியை சோவியத் யூனியன் குறைத்துக் கொண்டது.
எனினும், ரஷிய அதிபராக விளாதிமீர் புதின் பொறுப்பேற்ற பிறகு, 2000-ஆம் ஆண்டில் கிம் ஜோங்-உன்னின் தந்தையும், அப்போதைய வட கொரிய அதிபருமான கிம் ஜோங்-இல்லை 3 முறை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தங்களது அணு ஆயுத திட்டங்களைக் கைவிடுவதாக புதினிடம் கிம் ஜோங்-இல் வாக்குறுதி அளித்தார். எனினும், அவரது மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற கிம் ஜோங்-உன், வட கொரியாவின் அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டு சோதனையை நடத்தியுடன், அமெரிக்கா வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளையும் சோதித்தார்.
எனினும், அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக அவர் கடந்த ஆண்டு அறிவித்ததைத் தொடர்ந்து, விளாதிமீர் புதினின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.
ஏற்கெனவே அந்த அறிவிப்புக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங்கை 4 முறையும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை 3 முறையும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை 2 முறையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடனான கிம் ஜோங்-உன்னின் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com