பாகிஸ்தானுக்கு ரூ.3,100 கோடி நிதியுதவி ரத்து: அமெரிக்கா முடிவு

பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியில் 44 கோடி டாலரை (சுமார் ரூ.3,100 கோடி) ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்).
கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்).

பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியில் 44 கோடி டாலரை (சுமார் ரூ.3,100 கோடி) ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியுதவி 441 கோடி டாலராக (சுமார் ரூ.29,169 கோடி) குறைந்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் "எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2010-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட "பாகிஸ்தான் கூட்டுறவு மேம்பாட்டு ஒப்பந்தத்தின்' அடிப்படையில், அந்த நாட்டுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதியுதவி அளித்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு 5 ஆண்டுகளில் 750 கோடி டாலர் (சுமார் ரூ.53,356 கோடி) நிதியுதவி அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2009-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் செயல்படுத்துவதற்காக அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தின்படி 450 கோடி டாலர் நிதியுதவி வழங்கப்பட 
வேண்டியுள்ளது.
எனினும், அந்த நிதியுதவியில் 44 கோடி டாலரை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அண்மையில் அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரியப்படுத்தியிருந்தார்.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவி 441 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
ஏற்கெனவே, பயங்கரவாதத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த 30 கோடி டாலரை (சுமார் ரூ.2,134 கோடி) ராணுவ நிதியுதவியை அமெரிக்கா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரத்து செய்தது.
மேலும், பாகிஸ்தானுக்கான 100 கோடி டாலர் (சுமார் ரூ.7,114 கோடி) மதிப்பிலான நிதியுதவியையையும் அமெரிக்கா கடந்த ஜனவரி மாதம் ரத்து செய்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கூட்டுறவு மேம்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் நிதியுதவியும் 441 கோடி டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது என்று "எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com