ஹாங்காங்கில் வார இறுதிப் போராட்டம் மீண்டும் தொடக்கம்

ஹாங்காங்கில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் வார இறுதிப் போராட்டத்தை ஜனநாயக ஆதரவாளர்கள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கினர்.
ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமை ஊர்வலமாகச் சென்ற ஆசிரியர்கள்.
ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமை ஊர்வலமாகச் சென்ற ஆசிரியர்கள்.

ஹாங்காங்கில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் வார இறுதிப் போராட்டத்தை ஜனநாயக ஆதரவாளர்கள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கினர்.
அந்த நகர விமான நிலையத்தில் அவர்கள் இந்த வாரம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் சர்ச்சையை எழுப்பியிருந்த நிலையிலும், போராட்டங்களை அடக்க சீன ராணுவம் ஏவப்படலாம் என்ற அச்சத்துக்கு இடையிலும் இந்தப் போராட்டம் தொடங்கியது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங்கில் அந்த நகர அரசுக்கு எதிராக கடந்த 2 வாரங்களுக்கு மேல் நடைபெற்று வரும் போராட்டத்தின் அடுத்தகட்டமாக, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.
ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி போராடி வரும் பெரும்பாலான இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
சீன சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஹங் ஹாம், டே க்வா வான் ஆகிய துறைமுகப் பகுதிகள் வழியாக, கொட்டும் மழையையையும் பொருள்படுத்தாமல் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
இதற்கிடையே, அந்தப் பேரணிக்கு எதிராக, அரசுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான சீன ஆதரவாளர்களும் மற்றொரு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீனக் கொடியை ஏந்தியவாறு அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
ஜனநாயகப் போராட்ட இயக்கத்துக்கு ஹாங்காங்கின் வழக்குரைஞர்கள், மூத்த குடிமக்கள், ஆசிரியர்கள், குடும்பத் தலைவிகள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஹாங்காங்வாசிகளிடையே பிளவு அதிகரித்து வருவதை வெளிப்படுத்தும் வகையில் சீன ஆதரவுப் பேரணி அமைந்திருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர பேரவையில் நிறைவேற்றுவதற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 2 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஹாங்காங் அரசின் தலைமை அதிகாரி கேரி லாம் பதவி விலக வேண்டும், ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தன்னாட்சிப் பிரதேசமான ஹாங்காங்கை சீனாவிடம் பிரிட்டன் கடந்த 1997-ஆம் ஆண்டில் ஒப்படைத்ததற்குப் பிறகு அங்கு சீன ஆளுகைக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவாலாக இந்தப் போராட்டங்கள் விளங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹாங்காங் விமான நிலையத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது சீனாவிலிருந்து வந்தவர்கள் தாக்கப்பட்டது பயங்கரவாதச் செயலுக்கு ஒப்பானது என சீனா குற்றம் சாட்டியது.
அத்துடன், ஹாங்காங் எல்லையையொட்டி அமைந்துள்ள ஷென்ஷென் நகரில் ஏராளமான சீன கவச வாகனங்களும், ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில், ஷென்ஷென் நகர மைதானத்தில் தீவிர கலவரத் தடுப்புப் பயிற்சியிலும் சீனப் படையினர் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில், வார இறுதிப் போராட்டம் சனிக்கிழமை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com