அணு ஆயுதத் தடை ஒப்பந்த ரத்து எதிரொலி: அமெரிக்கா நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை

தனது நடுத்தர தொலைவு ஏவுகணையொன்றை சோதித்துப் பார்த்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் சான் நிக்கோலஸ் தீவில் ஏவி சோதிக்கப்பட்ட நடுத்தர தொலைவு ஏவுகணை.
அமெரிக்காவின் சான் நிக்கோலஸ் தீவில் ஏவி சோதிக்கப்பட்ட நடுத்தர தொலைவு ஏவுகணை.


தனது நடுத்தர தொலைவு ஏவுகணையொன்றை சோதித்துப் பார்த்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அத்தகைய ஏவுகணை சோதனைகளுக்குத் தடை விதிக்கும் அமெரிக்க-ரஷிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இரு நாடுகளும் இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு அருகே அமைந்துள்ள சான் நிக்கோலஸ் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வாகனத்தில் பொருத்தப்பட்ட ஏவுகருவி மூலம் செலுத்தப்பட்ட அந்த ஏவுகணை, 500 கி.மீ. தொலைவு பாய்ந்து சென்று இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கியது.
அந்த ஏவுகணை, அணு ஆயுதம் அல்லாத சாதாரண வெடிபொருளை சுமந்து செல்லும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த சோதனையின்போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் அறிந்துகொண்ட விவரங்கள், அமெரிக்காவின் நடுத்தர தொலைவு ஏவுகணைத் தாக்குதல் திறனை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்த காலகட்டத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட நடுத்தர தொலைவு ஏவுகணைகளை எல்லைப் பகுதியில் சோவியத் ரஷியா நிறுத்தியது.
அதனை எதிர்கொள்வதற்காக, நேட்டோ படையும் அமெரிக்காவின் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்தி வைத்தது.
இதனால் இரு தரப்பிலும் அணு ஆயுதப் போர் அபாயம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் இடையே 1981-ஆம் ஆண்டில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப்  பிறகு, நடுத்தர தொலைவு ஏவுகணைகளைக் கைவிட இரு நாடுகளுக்கும் இடையே 1987-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது.
நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் எனப் பெயரிடப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனும், சோவியத் யூனியன் அதிபராக இருந்த மிகயீல் கோர்பசேவும் கையெழுத்திட்டனர்.
அந்த ஒப்பந்தத்தின்படி, தங்களிடம் ஏற்கெனவே இருந்த நடுத்தர தொலைவு ஏவுகணைகள், அவற்றை ஏவும் சாதனங்கள், எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றை அழிக்கவும் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷியா நாடுகள் ஒப்புக் கொண்டன.
இந்த நிலையில், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ரஷியா மீறி வருவதால் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதற்குப் பதிலடியாக, அந்த ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் புதினும் அறிவித்தார்.
இந்தச் சூழலில், அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக இரு நாடுகளும் இந்த மாதம் 2-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
அதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஆயுதப் போட்டி உருவாகும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 1987-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனையை அமெரிக்கா தற்போது மீண்டும் நிகழ்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீண்டலை அலட்சியம் செய்வோம்!
 நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை மூலம் தங்களை அமெரிக்கா சீண்டுவதாகவும், எனினும் அதனை தாங்கள் பொருள்படுத்தப் போவதில்லை என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியாப்கோவ் கூறியதாவது:
நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை மேற்கொண்டு, ரஷியாவுடன் ராணுவப் பதற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயல்கிறது.
இருந்தாலும், அதனை நாங்கள் பொருள்படுத்தப் போவதில்லை.
அமெரிக்காவுடன் ஆயுதப் போட்டியில் ஈடுபட்டு, பொருளாதாரத்தை விரயமாக்க நாங்கள் விரும்பவில்லை என்றார் அவர்.
ஆயுதப் போட்டியை ஏற்படுத்தும்!
அமெரிக்காவின் புதிய ஏவுகணை சோதனை, ஆயுதப் போட்டியை ஏற்படுத்தும் என்று சீனா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் கூறியதாவது:
நடுத்தர தொலைவு ஏவுகணையை சோதிக்கும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, புதிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும். இது, ராணுவப் பதற்றத்தையும் அதிகரிக்கும்.
சர்வதேச பாதுகாப்பிலும், பிராந்திய பாதுகாப்பிலும் இந்த நடவடிக்கை எதிர்மறையான விளைவை உண்டாக்கும்.
பனிப்போர் காலத்திய மனநிலையிலிருந்து அமெரிக்கா விடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com