தான்சானியா பெட்ரோல் லாரி வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 100-ஆக உயர்வு

தான்சானியாவில் நேரிட்ட பெட்ரோல் லாரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 100-ஆக உயர்ந்தது.
பெட்ரோல் லாரி வெடிவிபத்தில் காயமடைந்து, டாரெஸ் சலாம் நகர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தான்சானியா அதிபர் ஜான் பாம்பே மகுஃபுலி (கோப்புப் படம்).
பெட்ரோல் லாரி வெடிவிபத்தில் காயமடைந்து, டாரெஸ் சலாம் நகர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தான்சானியா அதிபர் ஜான் பாம்பே மகுஃபுலி (கோப்புப் படம்).


தான்சானியாவில் நேரிட்ட பெட்ரோல் லாரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 100-ஆக உயர்ந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மோரோகோரோ நகர் அருகே கடந்த 10-ஆம் தேதி நேரிட்ட பெட்ரோல் லாரி வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தீக்காயங்கள் காரணமாக மேலும் ஒருவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மோரோகோரோ நகருக்கு அருகே கடந்த 10-ஆம் தேதி சாலையில் சென்றுகொண்டிருந்த பெட்ரோல் லாரி, நிலைதடுமாறி கவிழ்ந்தது. அதையடுத்து, அந்த லாரியிலிருந்து பெட்ரோல் கசியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர், லாரியிலிருந்து வழிந்துகொண்டிருந்த பெட்ரோலைப் பிடிப்பதற்காக அங்கு கூடினர். அப்போது அந்த லாரி பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் அங்கிருந்த 57 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்; சுமார் 70 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் 43 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் வழிந்து கொண்டிருந்தபோது லாரியிலிருந்த பேட்டரியை ஒருவர் கழற்ற முயன்றதாகவும், அப்போது தீப்பொறி ஏற்பட்டு இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் எரிபொருள் வாகனங்கள் மற்றும் குழாய்களில் வெடிவிபத்து ஏற்பட்டு, அங்கு எரிபொருள் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த 2010-ஆம் ஆண்டு நேரிட்ட இதேபோன்றதொரு விபத்தில் 292 பேர் உயிரிழந்தனர். தெற்கு சூடானில் கடந்த 2015-ஆம் ஆண்டு நேரிட்ட மற்றொரு விபத்தில் 203 பேர் பலியாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com