அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை: வட கொரியா

ராணுவப் பதற்றத்தைத் தூண்டும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடும் வரை, அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
தென் கொரிய தலைநகர் சியோலில், வட கொரிய விவகாரங்களுக்கான அந்த நாட்டுத் தூதர் லீ டூ-ஹூனை சந்தித்துப் பேசிய அமெரிக்கத் தூதர் ஸ்டீஃபன் பீகன் (இடது).
தென் கொரிய தலைநகர் சியோலில், வட கொரிய விவகாரங்களுக்கான அந்த நாட்டுத் தூதர் லீ டூ-ஹூனை சந்தித்துப் பேசிய அமெரிக்கத் தூதர் ஸ்டீஃபன் பீகன் (இடது).


ராணுவப் பதற்றத்தைத் தூண்டும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடும் வரை, அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா புதன்கிழமை கூறியதற்குப் பதிலடியாக அந்த நாடு இவ்வாறு கூறியுள்ளது.
இதுகுறித்து வட கொரிய அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற எங்களது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.
எனினும், ஒருபுறம் ராணுவ ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இன்னொரு புறம் பேச்சுவார்த்தைக்கு விடப்படும் அழைப்பை ஏற்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரியா கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரிலும், வியத்நாம் தலைநகர் ஹனோயிலும் இரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கொரிய எல்லைப் பகுதியில் கிம் ஜோங்-உன்னை அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி திடீரென சந்தித்து பேசினார்.
எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாகத் தளர்த்த அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வட கொரியா கடுமையாக எதிர்த்து வரும் கூட்டு ராணுவப் பயிற்சியை அமெரிக்காவும், தென் கொரியாவும் மீண்டும் இந்த மாதம் தொடங்கின.
இதற்கான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், வட கொரியா 6 முறை ஏவுகணை சோதனை நடத்தியது.
மேலும், தென் கொரியாவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்றும் அந்த நாடு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஒரு புறம் அமெரிக்காவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொண்டவாறே மறுபுறம் தங்களுடன் நட்புக்கரம் நீட்டுவதாக வட கொரியா குற்றம் சாட்டியது.
இந்தச் சூழலில், வட கொரியாவுடனான அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்குத் தயாராக இருப்பதாக, கொரிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீஃபன் பீகன் புதன்கிழமை கூறியிருந்தார்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே வட கொரியா இவ்வாறு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com