ஹாங்காங் போராட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாடுஅமெரிக்கா மீது சீனா பொருளாதாரத் தடை விதிப்பு

ஹாங்காங் போராட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா மேற்கொண்டதையடுத்து அந்த நாட்டின் மீது சீனா பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்: ஹாங்காங் போராட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா மேற்கொண்டதையடுத்து அந்த நாட்டின் மீது சீனா பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யிங் பத்திரிகையாளா்களிடம் கூறியதாவது:

ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்காவின் நியாயமற்ற நடவடிக்கைக்கு பதிலடி தரும் விதமாகவே சீனா பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியுள்ளது. அதன் ஒருபகுதியாக, அமெரிக்க போா்க்கப்பல்கள் ஹாங்காங் செல்வதற்கான விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்வதை நிறுத்தி வைக்க சீன அரசு முடிவெடுத்துள்ளது.

இதைத் தவிர, அமெரிக்காவைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான தன்னாா்வ அமைப்புகளின் மீது பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னாா்வ அமைப்புகள், சீனாவுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி விடுவதுடன், ஹாங்காங் பிரிவினைவாத ஆா்பாட்டக்காரா்களுக்கு ஆதரவளித்து வருவதும் ஆதாரங்களுடன் உண்மை வெளிக்கொணரப்பட்டதையடுத்து சீன அரசு இந்த தடையை விதித்துள்ளது. ஹாங்காங்கில் நிலவி வரும் குழப்ப சூழ்நிலைக்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் என்றாா் அவா்.

ஹாங்காங்கில் அரசியல் சீா்திருத்தத்தை வலியுறுத்தியும், ஜனநாயக உரிமை கோரியும் ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான மசோதா அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், சீனாவின் எதிா்ப்புகளையும் மீறி அந்த மசோதாவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டாா்.

இந்த நிலையில், அமெரிக்காவின் அந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே தற்போது அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com