அமெரிக்காவில் தொழிற்சாலைக்குள் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோ புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்; காவல்துறை அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் சிகாகோ புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்; காவல்துறை அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர்.
 மத்திய மேற்கு சிகாகோவில் இருந்து 65 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள இலினோயிஸ் அரோரா பகுதியில் உள்ள அடுக்குமாடி பகுதியில் மாபெரும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலைக்குள் புகுந்த 45 வயதுடைய கேரி மார்டின் என்பவர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் அங்கு பணிபுரிந்து வந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். துப்பாக்கிச் சூட்டை தடுக்க போலீஸார் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
 அவரை சுற்றி வளைத்த போது போலீஸாரை நோக்கியும் கேரி மார்டின் துப்பாக்கியால் சுட்டார். இதனால் கேரி மார்டினை போலீஸார் சுட்டுக் கொன்றனர். போலீஸார் மீதும் குண்டு பாய்ந்ததால் அவர்களில் சிலரும் காயமடைந்தனர். இத்தாக்குதலில் 5 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ""என்ன காரணத்துக்காக அவர் துப்பாக்கியால் சுட்டார் என்று தெரியவில்லை'' என்றனர்.
 எனினும், இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும், அவரை அறிந்தவர்களும் கூறுகையில், அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த கேரி மார்டின் பணியில் இருந்து நீக்கப்பட்டதால், கடந்த சில காலமாக மனஉளைச்சலில் இருந்து வந்தார் என்றும், அந்த ஆத்திரம் காரணமாக தொழிற்சாலைக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 தொழிற்சாலைக்குள் வரும் முன்பே கையிலிருந்த துப்பாக்கியால் சாலையில் செல்லும் வாகனங்களையும், போலீஸ் கார், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனத்தையும் சுட்டபடியே உள்ளே நுழைந்தார் என்றும் தெரிவித்தனர். இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ளப் பதிவில், அரோரா, இலினோயிஸ் சட்ட அமலாக்கப்பிரிவினர் மேற்கொண்ட பணி மகத்தானது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கும், அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் அமெரிக்கா உங்களுடன் (மக்களுடன்) துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com