இந்தியக் கொடியுடன் குழந்தைகள் நடனமாடிய பாக். பள்ளி அங்கீகாரம் ரத்து

பாகிஸ்தானில் பள்ளி விழாவில், மழலை மாணவர்கள் இந்தியப் பாடலுக்கு நடனமாடினர். அவர்களுக்கு பின்னால் இருந்த திரையில் இந்திய தேசியக் கொடி காட்டப்பட்டது.

பாகிஸ்தானில் பள்ளி விழாவில், மழலை மாணவர்கள் இந்தியப் பாடலுக்கு நடனமாடினர். அவர்களுக்கு பின்னால் இருந்த திரையில் இந்திய தேசியக் கொடி காட்டப்பட்டது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து அப்பள்ளியின் அங்கீகாரத்தை பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
 இந்தியக் கலாசாரத்தை முன்னிலைப்படுத்தியதன் மூலமாக, "தேசிய கெளரம்' பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
 கராச்சி நகரில் தனியார் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த வாரம் நடைபெற்ற விழாவில், இந்திய தேசியக் கொடி திரையில் காட்டப்பட்டது. அப்போது மாணவர்கள் இந்திய பாடலுக்கு நடனமாடினர். அந்தக் காட்சிகள் அடங்கிய விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. குறிப்பாக, ஏராளமானோர் அதை கடுமையாக விமர்சித்தனர்.
 இந்நிலையில், இந்த நிகழ்வு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, அந்தப் பள்ளியின் உரிமையாளருக்கு, தனியார் பள்ளிப் பதிவு இயக்குநரகம் கடந்த புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. மூன்று தினங்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஆனால், பள்ளியின் உரிமையாளர் நேரில் ஆஜராகவில்லை என்றும், வேறு எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
 இந்நிலையில், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று, பள்ளி பதிவு இயக்குநரகத்தின் பதிவாளர் ராஃபியா ஜாவீத் தெரிவித்தார். ""பள்ளி விழாக்களில் இந்திய கலாசாரத்தை ஊக்குவிப்பது, பாகிஸ்தான் கெளரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும். அதை எந்த விதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது'' என்றார் அவர்.
 பள்ளி விளக்கம்: முன்னதாக, இந்த விவகாரம் குறித்து பள்ளியின் துணை முதல்வர் ஃபாத்திமா கடந்த வாரம் விளக்கம் அளித்திருந்தார். ""பல்வேறு நாடுகளின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாகவே நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அமெரிக்கா, எகிப்து, இந்தியா மற்றும் சில நாடுகளின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வண்ணம் மாணவர்கள் நடனமாடினர். ஆனால், ஊடகங்கள், குறிப்பிட்ட சில காட்சிகளை மட்டும் திரித்து வெளியிட்டு பள்ளிக்கு எதிராக அவதூறு பரப்பி விட்டன'' என்று அவர் கூறியிருந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com